நேற்று ஒக்ரோபர் 23 இல் ‘திரள்’ இலக்கிய குழுமம் ஏற்பாடு செய்த தோழர் பாமரனின் ‘பகிரங்க கடிதங்கள்’ நூலின் வாசிப்பனுபவமும் கலந்துரையாடலும் ஹரோவில் சிறப்பாக நடைபெற்றது. இருபது வரையான மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வை ஊடகவியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் பா நடேசன் தலைமையேற்று நடத்தினார். கோவிட் காலத்தில் கருக்கொண்ட ‘திரள்’ குழுமத்தின் முதலாவது நிகழ்வு இதுவென்பதிலும் பார்க்க பா நடேசன் தம்பதியர் மீது அரசியல் என்ற பெயரில் சேறடிப்பு மேற்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது நேரடி நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சட்டவல்லுநர், விமர்சகர் கருணா தம்பா பாமரனுடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பாமரன் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழும்பிய குரல் எனத் தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் ரஜிதா சாம், பாமரன் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரும்புள்ளிகளாக இருந்தாலும் அவர்களை தன் எழுத்துக்கள், கிண்டல்கள் மூலம் விமர்சனத்திற்கு உட்படுத்தியதாகவும் அவருடைய எழுத்துக்களில் இருந்த நளினத்தையும் விதந்துரைத்தார். திரைச் சமூகத்தைச் சேர்ந்த கே பாலச்சந்தர், சங்கர், மணிரத்தினம், வைரமுத்து, வாலி ஆகியோர் உட்பட ஜெயலாலிதா, வைக்கோ, சோ ராமசாமி ஆகியோரை நோக்கியும் பகிரங்கக் கடிதங்கள் எழுதப்பட்டு இருந்ததை விதந்துரைத்தார். ஊடகவியலாளர் விமர்சகர் கோபி ரத்தினம் தமிழ் தேசிய அரசியலில் பாமரனின் நிலைப்பாட்டை விதந்துரைத்தார். அவருடைய எள்ளல் அங்கத எழுத்துமுறை சொல்லவரும் விடயத்தினை மலினப்படுத்தி விடும் என்பதால் தான் அதனை விரும்புவதில்லை என்றும் ஆனால் பாமரனின் எழுத்துக்களில் தனக்கிருந்த ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.
விமர்சகர் வேலு நூல் ஆய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு லண்டன் தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் மேடைக்கு வெளியே வெளிப்பட்டது.
ஆய்வாளர்களைத் தொடர்ந்துநிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதில் ஊடகவியலாளர் குணா கவியழகன் பாமரன் ஒரு அதிகாரத்திற்கு எதிரான குரல் என்று பாராட்டினார். தமிழகத்தில் கருத்தியல்களை உருவாக்கும் அதிகாரமையங்களை கேள்விக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார். ஊடகவியலாளர் விமர்சகர் சாம் பிரதீபன் பாமரனைக் கொண்டாட நான் வரவில்லை என்றாலும் அவருடைய எழுத்துக்களை மதிப்பதாக குறிப்பிட்டார். ஆனால் வைரமுத்துவின் கட்டெறுப்பு எங்கு ஊருகின்றது என்பதைப் பார்ப்பவர்கள் மகளீரின் தொப்புளுக்கு அப்பால் வைரமுத்து எழுதியவற்றை பார்க்க வேண்டும் என்றார்.
பாமரனுடைய எழுத்துக்களை இன்றே சந்திக்கிறேன் என்று கூறிய தேசம் ஜெயபாலன் இதுவரை கதைத்தவர்களின் அடிப்படையில் பாமரன் அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை என்றும் கெ பாலச்சந்தரும் மணிரத்தினமும் படைத்தவை இன்ரலெக்சுவல் கோஸ்டியை நோக்கியே இருந்தது. இவர்கள் எந்த அதிகாரத்தினதும் மையப்புள்ளிகள் அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் வாலி, வைரமுத்து கூட அதிகார மையத்தின் மையப் புள்ளிகள் அல்ல. காதலர்ககள் துணைவர்கள் எறும்புவிட்டதற்கும் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் ஜெயபாலன் கேள்வி எழுப்பினார். கே பாலச்சந்திரிலும் மணிரத்தினத்தைக் காட்டிலும் அதே காலகட்டத்தில் சிறந்த படங்களைத் தந்தவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டுமே ஒழிய இன்றைய சூழலோடு அதனை ஒப்புநோக்க முடியாது என்றும் குமுதம் சஞ்சிகை ஒன்றும் பெண்ணடிமைத் தனத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரான புரட்சிகரமான சஞ்சிகையுமல்ல என்பதையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்தவர் என்பதற்காக தமிழ் தேசியத்திற்காக நின்றவர் என்பதற்காக அவருடைய மறுபக்கத்தை நோக்காமல் தவிர்க்க முடியாது என்றும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.
திரைப்பட விமர்சகர் தயா அவர்களும் கே பாலச்சந்தர் மணிரத்தினம் தொடர்பில் வைத்த விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். அந்தந்த காலகட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை அந்தந்த காலகட்டத்துடனேயே ஒப்பு நோக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட ஒரு படைப்பை வைத்து கலைஞர்களை முத்திரை குத்திவிட முடியாது என்பதையும் தயா சுட்டிக்காட்டினார். மேலும் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்க பாமரன் கையில் எடுத்த ஓணம் பண்டிகை கூட ஒரு மளுப்பல் அரசியலே என்பதையும் தாயா தெளிவுபடுத்தினார். கருணாநிதியையும் திமுகா வையும் விமர்சிப்பதில் இருந்த தயக்கமே அதற்குக் காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரோஸ் அமைப்பின் உறுப்பினரான அருட்குமாரின் விமர்சனம் பாமரனின் அரசியல் நிலைப்பாடு சார்ந்ததாக அமைந்தது. 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் தமிழர்களைக் கைவிட்ட திமுக அரசு சார்ந்து பாமரன் இயங்குவதை அவர் தனது உரையில் கடுமையாகச் சாடி இருந்தார்.
ஊடகவிளலாளர் சுகி ரத்தினம் பாமரன் 300 வரையான நூல்களை எழுதியுள்ளார் அதில் ஒன்றை இரண்டை வாசித்துவிட்டு தன்னால் முழுமையான விமர்சனத்தை வைக்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனாலும் ‘பாமரன்’ என்ற புனைப்பெயர் ஒரு அரசியல் சார்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். குணா கவியழகன் குறிப்பிட்டது போல் பாமரன் ஒரு அரசியல் செயற்பாட்டாளர் அல்ல அவர் ஒரு சமூக செயற்பாட்டளரே என்றார் சுகி. பாமரனின் இரு நண்பர்களும் அங்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் பாமரன் எப்போதும் சமூக நீதிக்காக குரல் எழுப்பிய ஒருவர் என்பதை அழுத்தி தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.