“யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம்.” என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன்பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில் வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது. வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.