என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாதான் என்பது அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது.
இந்த விடயம் நன்கு தெரிந்திருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது வெட்கித் தலைகுனிய வேண்டும்.
பாராளுமன்றத்தில் சமீபத்தில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீது தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உரையொன்றை ஆற்றியிருந்தார்.
அதன் பின்னர் விக்னேஸ்வரனின் உரைக்குப் பதிலளிக்கும் விதத்தில் சரத் பொன்சேகா எம்.பி உரையாற்றியிருந்தார்.
“பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் அந்த உரையை வைத்துப் பார்க்கின்ற போது, விடுதலைப் புலிகளை முழுதாக அழித்தவர் சரத் பொன்சேகாதான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா எம்.பியின் உரையை உற்று நோக்கினால் விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது வெளிப்படையான உண்மையாகும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது தெரியாதா? தெரிந்திருந்தும் அவருக்கு வாக்களிக்கக் கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இதை நான் அன்றே சொன்ன பொழுது என்னை துரோகி என்றார்கள். ஆனால், இப்போது சரத் பொன்சேகாவே பாராளுமன்றத்தில் ‘தேசியம், சுயநிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனிற்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று கூறியுள்ளார். சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் அன்றைய அரசினுடைய முழு ஒத்துழைப்போடுதான் நடந்தேறியதென்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இணைந்த வடக்குகிழக்கில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்து விடுவார் என்ற பயத்தில், அவரை ஒழிக்க வேண்டுமென்று எண்ணிய அன்றைய அரசுக்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் என்று தங்களை கூறிக் கொண்டவர்கள், விலை போனார்கள் என்பது இன்று சரத் பொன்சேகாவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் தோன்றிய மொழியும் மூத்தகுடியும் தமிழும், தமிழர்களும்தான் என்பது உலகிலுள்ள அனைத்து இன மொழி மக்களுக்கும் தெரிந்த ஒரு விடயம். தகவல் தொழில்நுட்பம் மிக வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில் ஐந்து வயது சிறுவர்களுக்கே இந்த உண்மை தெரியும். நிலைமை இவ்வாறு இருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், பாராளுமன்றத்திற்கு சென்றுதான் இதை பேசி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கைத்தொலைபேசியிலேயே ஒரு தட்டுத்தட்டினால் தெரிந்து விடும். இதை பேசியதால் புதிய வடிவில் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தீர்வு மற்றும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்ற இந்த நேரத்தில், இதை நிரூபிப்பதற்காகத்தான் பாராளுமன்றம் அனுப்பினோமா என்று இவருக்கு வாக்களித்த மக்கள் விசனமடைந்துள்ளனர்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுவதில் அர்த்தமில்லை. இப்போது எமது மக்களுக்கு என்ன தேவை? தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று அன்றாடம் பசி பட்டினியுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, உலகின் மூத்த மொழி எது? என்று இப்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த விவாதம் பாராளுமன்றத்தின் கால எல்லை முடியும் வரையும் தொடரும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளும் அவருக்கு அதிகரிக்கும்.
2010ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி அக்கறையில்லாமல் செயற்படுவதால் தமிழ் மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் ‘தமிழ் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று தீர்க்கதரிசனமாக கூறினாரோ தெரியவில்லை.
இவ்வாறு வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்ைகயில் தெரிவித்துள்ளார்.