25

25

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்ட இலக்கியங்களை நிராகரிக்கின்றது! – கலந்துரையாடல்

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்டம் சார்ந்த இலக்கியங்களை நிராகரிக்கின்றது என்பதனை விவாதத்துடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வு ஒன்றை ‘திரள்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஓகஸ்ட் 29 இலண்டன் நேரம் மாலை 2:30ற்கு ஆரம்பிக்கும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்வு விபரத்தில் உள்ளது.

‘நவீன தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கியச் சூழல் என்பது பெரும்பாலும் தமிழக இலக்கியச் சூழலாக குறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டுள்ள ஈழச் சமூகங்களின் இலக்கியங்களை தமிழக இலக்கியச் சூழல் மேலும் ஓரம்கட்டுகின்றதா என்ற கேள்வி உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் ஈழத்து – தமிழக எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அண்மைக்காலத்தில் இணைந்து மேற்கொள்கின்ற கலந்துரையாடலும் விவாதமுமாக இது அமைய உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து இலக்கிய ஆய்வாளர் ரியாஸ் குரானா தமிழகத்தில் இருந்து பேராசிரியர் இலக்கிய விமர்சகர் அபிலாஷ் சந்திரன் இலக்கிய ஆய்வாளர் முபீன் சந்திகா இவர்களுடன் லண்டனில் இருந்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.  இந்நிகழ்வை இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளருமான வாசன் வழிநடத்துகின்றார். இவர்களது ஒரு மணிநேர முன்னுரைகளைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வோர் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைப் பரிமாறவும் ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்த நிகழ்வும் இரு மணி நேரத்திற்குள் முற்றுப்பெறும். இந்த இணையவெளி கலந்துரையாடலில் இலங்கை, இந்தியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கேள்விகேட்டு கருத்துக்களை பரிமாற விரும்பாதவர்கள் சமகாலத்தில் நிகழ்வை முகநூலில் பார்க்கின்ற வகையில் நிகழ்வு ஒளிபரப்பாக்கப்படும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘திரள் – உரையாடல் வெளி’ என்ற இவ்வமைப்பு அண்மையில் பிரித்தானியாவில் உள்ள முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு தொடர்ந்துவரும் காலங்களில் குறைந்தபட்சம் மாதாந்தம் ஒரு நிகழ்வையேனும் நடத்த உள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தனர். ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ள ஈழத்து இலக்கியச் சூழலை புலம்பெயர்ந்த நாட்டு எல்லைகலைக் கடந்து ஒருங்கிணைத்து புதியதொரு உத்வேகத்தோடு பயணிக்க உள்ளதாகவும் திரள் குழுமம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தது. பின் கோவிட்-19 காலம் உருவாக்கி உள்ள தொழில்நுட்ப வெளியானது இலக்கிய ஆர்வலர்களை எல்லைகளைக் கடந்தும் சமகாலத்தில் கலந்துரையாடல்களை தொழில்நுட்ப வெளியில் மேற்கொள்வதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளதாகத் தெரிவித்த திரள் குழுமத்தினர் தடைகள் பின்னடைவுகள் கூட புதிய வெளிகளை உருவாக்கி விடுகின்றன எனத் தெரிவித்தனர். முற்போக்கான ஆரோக்கியமான ஒரு இலக்கியச் சூழலை உருவாக்க முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து பயணிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பெயர் தெரிவு !

இந்திய விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருதுக்கு பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பாத்ரா, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான விருதுக்கான தேர்வு குழுவில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், சர்தார் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல, துரோனாச்சார்யா விருதுக்கு வில்வித்தை வீரர் தர்மேந்திர திவாரி, தடகள வீராங்கனை புருஷோத்தம் ராய், குத்துச்சண்டை வீரர் சிவ்சிங், ஹாக்கி வீரர் ரோமேஷ் பதானியா, கபடி வீரர் கிருஷண் குமார் ஹூடா, பாரா பவர் லிஃப்ட் வீரர் விஜய் பாலசந்திர முனிஷவர், டென்னிஸ் வீரர் நரேஷ் குமார், மல்யுத்த வீரர் ஓம் பர்காஷ் தாஹியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு 27 பேர், தியான் சந்த் விருதுக்கு 15 பேர் உள்பட மேலும் நான்கு பிரிவுகளுக்கு தேர்வான வீரர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் 29ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காணொளி வாயிலாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 5 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

2016ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தீபா கர்மாக்கர், சாக்ஷி மாலிக் ஆகியோருடன் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜீத்து ராய்க்கு கேல் ரத்னா விருது கிடைத்தது.

இதேபோல, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி ஆகியோருக்கு பிறகு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்காவது வீரராகியிருக்கிறார், ரோஹித் சர்மா.

1998 ஆம் ஆண்டில் கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஆவார். 2007 ஆம் ஆண்டில் டி 20 உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்திய பின்னர் தோனிக்கு அந்த கெளரவம் கிடைத்தது. அதே நேரத்தில் விராட் கோலி, 2018 ஆம் ஆண்டில் பளுதூக்குபவர் மீராபாய் சானுவுடன் விருதை வென்றார்.

இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறவுள்ள வினேஷ் போகாட் 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பாத்ரா 2018 ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கத்தையும், ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

பிற செய்திகள்:

மின்னல் ஓட்ட வீரர் போல்ட்டுக்கு கொரோனா ..?

8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதால், அந்த முடிவு வரும் வரை முன்னெச்சரிக்கையாகத் தனிமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு தடகளத்தில் உலக அளவில் அசைக்க முடியாத மன்னராகத் திகழ்ந்தவர் ஜமைக்கா வீரர் உசேன். 8 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ள உசேன் போல்ட், 100 மீ, 200 மீ, 400 மீ தொடர் ஓட்டத்தில் 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வென்ற உலகின் ஒரே வீரர் போல்ட் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 100 மீ, 200 மீ, 400 மீ தொடர் ஓட்டத்தில் உலக சாம்பியன் பட்டத்தை உசேன் போல்ட் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி உசேன் போல்டின் 34-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, உசேன் போல்ட் குடும்பத்தினர், நண்பர்கள் மான்செஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், பேயர் லெவர்குஷன் விங்கர் லியான் பெய்லி, கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், தடகள வீரர் உசேன் போல்ட்டுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதையடுத்து, உசேன் போல்ட் தனது ட்விட்டரில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் கூறுகிறார்கள். அதற்காகவே நான் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அந்த முடிவுக்காகக் காத்திருக்கிறேன். அதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. கரோனா பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி நான் தனிமையில் இருக்கிறேன். நான் முடிவு அறிவிக்கும் வரை என்னுடைய நண்பர்களும் இதேபோல் தனிமையில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.