பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் பிஹார் மாநில நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை, கோஸி, பாக்மதி, கம்லா பாலன், கந்தக் உள்ளிட்ட நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. வடக்கு பிஹாரில் சுமார் 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
மாநிலம் முழுவதும் 1,420 சமுதாயக் கூடங்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 23 குழுக்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 11,700 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பிஹார் முழுவதும் சுமார் 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். தர்பங்கா மாவட்டம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆடு, மாடுகள் என ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
தமாய் நதி அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாஹபரா மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 28 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த கிராமங்களின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
சாம்பிரான் மாவட்டத்தில் மட்டும் 100 ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நாசமாகி உள்ளன. இதேபோல பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியுள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.
மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் தர்பங்கா, பாகல்பூர், முங்கர், புர்னியா, கோஸி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.