13

13

வெளியானது  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விபரம் ! –

தேர்தல் முடிவடைந்தது தொடக்கம்  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் யார் ..? என்பது தொடர்பான இழுபறி தொடர்ந்து வந்த நிலையில்   ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாரிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுப்பதவிகளில் ராஜபக்க்ஷக்களே ஆதிக்கம் !

நேற்றை தினம் இலங்கையினுடைய புதிய அமைச்சரவை கண்டி மகுல்மடுவவில் பதவியேற்றுக்கொண்டது.  இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளமையை கண்டித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராஜபக்ஷ குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவிகளின் பிபரங்கள் வருமாறு ..,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம், மத விவகாரம், கலாசாரம், நகர அபிவிருத்தி அமைச்சர்

சமல் ராஜபக்ஷ – நீர்பாசன அமைச்சர் மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரியின் புதல்வர் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.