எல்ரிரியின் யுத்த நிறுத்தத்தை இலங்கை ஏற்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இச்செய்தியை ஐஏஎன்எஸ் வெளியிட்டு உள்ளது. இவர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு மறுத்திருந்த நிலையில் இந்த வேண்டுகோள் இன்று (பெப்ரவரி 28) மீண்டும் விடுக்கப்பட்டு உள்ளது. எல்ரிரி, இன் இந்த யுத்த நிறுத்த அழைப்பு தங்கள் ஆயுதங்களைப் போடுவதற்கு சற்றுக் குறைவானதாக இருக்கலாம் ஆனாலும் எங்களது நிலைப்பாடு இலங்கை அரசு இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
யுத்தப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான உடனடி வேலைகளை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொள்வதாகவும் வெளிநாட்டு அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி தனது வேண்டுகொளில் குறிப்பிட்டு உள்ளார்.
எல்ரிரிஈ உடனான இந்த யுத்தத்தை இந்தியாவே பின்னின்று நடத்துவதாக பெரும்பாலான இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் பலமுடையதா அல்லது சர்வதேச கண்டனங்களுக்காக விடுக்கப்பட்ட கண்துடைப்பு வேண்டுகொளா என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் தெரியவரலாம்.
இந்திய வெளிநாட்டு அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி வன்னி யுத்தத்தில் சிக்குண்டுள்ள 70000 மக்கள் பற்றிய கரிசனையின் அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை விடுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். எல்ரிரிஈ தங்களது கட்டப்பாட்டுப் பிரதேசத்தில் 300000 மக்கள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். யுஎன் உட்பட சர்வதேச அமைப்புகள் யுத்த பிரதேசத்திற்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை 200000 என்று மதிப்பிடுகிறது. ஆனால் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் 70000 பேர் மட்டுமே யுத்தப் பிரதேசத்தினுள் சிக்குண்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவக் குழுக்களையும் மருத்துவப் பொருட்களையும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கியுள்ளதாக இந்தியா அறிவித்து இருந்தது.