15

15

மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்

vijayakanth.jpgஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் அந்நாட்டு தூதரகம் இருக்க கூடாது. அடுத்த மாதத்துக்குள் இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். இல்லையென்றால் படும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேமுதிக கட்சி பிரமுகர் தட்சிணா மூர்த்தியின் மகளின் திருமணம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. அதில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் இலவச கணினி பயிற்சி மையத்தையும் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,

ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

கருணாநிதி இன்று அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்கிறார். ஈழத்தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோது, கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை. இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இலங்கை அரசு கத்தி வைத்துள்ளது. புலிகளிடம் கேடயம் தான் உள்ளது. அதை வைத்து இலங்கையின் போரை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேடயத்தை போடு என்று சொன்னால் கத்தி வைத்திருப்பவன் சும்மா இருப்பானா?

இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐநாவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தந்திகளும், எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டும். இரண்டு நாளில் நான் அதற்கான முகவரியை தருவேன்.

வரும் 21ம் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.

பதவியை துறந்தால் தனி ஈழம் கிடைக்குமா என்று முதலமைச்சர் கேட்கிறார். இதிலிருந்தே தனிஈழம் கிடைக்காது என்று அவர் எண்ணுகிறார் என்பது தெரிகிறது. 2 மாதத்தில் முடிய போகின்ற மத்திய அரசிலில் இருந்து நாங்கள் பதவி விலகினால் என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார்கள்.

இலங்கை பிரச்சனையில் பிரதிபலன் எதிர்பாராமல் அன்றிலிருந்து பாடுபடுபவர் நெடுமாறன் ஒருவர் தான். அவரை நான் பாராட்டுகிறேன். மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

கருணாநிதி நான் உழைக்கவே பிறந்தவன் என்கிறார். ஜெயலலிதாவோ முற்றும் துறந்த துறவி என்கிறார். முற்றும் துறந்தவருக்கு முதல்வர் பதவி எதற்கு?

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் துரித மின் விநியோகத் திட்டம் – உலக வங்கி உதவுகின்றது

electricitypowerlinesss.jpgவடக்கில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் மின் விநியோக நடவடிக்கைகளை உலக வங்கியின் உதவியுடன் துரிதமாக மறுசீரமைக்க மின்வலு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மின் விநியோகத்திற்கான சகல அடித்தள வசதிகளும் மேப்படுத்தப்படும். சேதமாக்கப்பட்ட சகல மின் பிறப்பாக்கிகள் மற்றும் மின் கம்பங்கள் என்பன புதிதாக அமைக்கப்படும்.

தெற்காசிய வலய மின்சக்தி விவகார பிராந்திய முகாமையாளர்; சலமன் ஸஹீர் உட்பட உலக வங்கியின் பிரதிநிதிகள் இது தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இத்திட்டத்தின்படி ஏ 9 மற்றும் ஏ 32 ஆகிய வீதிகளில் மின் விநியோக மறுசீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்;பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் குழு திருமலை ஆஸ்பத்திரிக்கு நேற்று திடீர் விஜயம்

trincomali.jpgசுகாதார அமைச்சின் உயர் மட்டக் குழுவொன்று திடீர் விஜயமொன்றை மேற்கொ ண்டு நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.இங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்தக்குழு முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்து வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டது.

இதேநேரம் முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களுக்கென இரண்டு லொறிகளில் கொண்டு வரப்பட்ட மருந்து வகைகளையும் மேற்படி குழு கையளித்தது. மேலும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

நேற்றுக்காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸ், பாலிக்க மஹிபால, நிமல் ஜெயந்த, கி.மா. சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர். ராஜின், சுகாதாரப் பணிப்பாளர் ளி. ஞாணகுணாளன், வைத்திய அதிகாரி திருமதி குணாளன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில்

college1.jpgஉலகில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உண்ண உணவின்றி 1500 சிறுவர்கள் பட்டினியால் மரணமடைகின்றனர் என்று விரிவுரையாளர் திருமதி சாரினா மாரசிங்க கூறினார்.

தென் மாகாண சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரிட்டாஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். காலி கரிட்டாஸ் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேசிய விரிவுரையாளர் மாரசிங்க;

“இலங்கையில் வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையில் மிக வேகமாக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கில் போர் காரணமாக 65 ஆயிரம் சிறார்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனினும் வடக்கு, கிழக்கில் 5000 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன என கல்விப்பகுதி தெரிவித்துள்ளது.

ஆனால், தென் பகுதிகளில் 11 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மேலதிகமாக பணிபுரிவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் 58,528 அங்கவீனச் சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் சிறார்களே பாடசாலைக்கு செல்கின்றனர். சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அநாதைகளாக உள்ளனர். அவர்களில் பலர் அநாதை இல்லங்களில் தங்கியுள்ளனர். அநாதை இல்லங்களின் அதிகாரிகள் அங்குள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர்களை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது நிறுத்தப்படவேண்டும். சிறுவர்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 72 இலட்சம் பேர் உள்ளனர்’ என்றார். வேறு சிலரும் உரையாற்றினார்கள்.

ஓமான், துபாய், கலிபோர்னியாவில் ஆயிரம் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்பு

sri-lanka-nurses.jpgஓமான்,  கலிபோர்னியா, டுபாய் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் ஆயிரம் தாதியர்களை இவ்வருடத்தில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்கள் அந்நாடுகளில் நான்கு இலட்சம் ரூபாவை சம்பளமாகப் பெறுவதுடன் தமது குடும்பங்களையும் அங்கு தங்க வைத்துப் பராமரிக்க முடியுமெனவும் சம்பளத்துடன் இதர சகல சலுகைகளையும் அந்தந்த நாடுகள் வழங்குமெனவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத்திட்டத்த்தின் கீழ் ஏற்கனவே 19 தாதியர் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இதன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் மேலும் 30 தாதியர் ஓமானுக்கு அனுப்பப்படவுள்ள னர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் உட்பட்ட ஆவணங்கள் நேற்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் கொழும்பில் வைத்துக் கையளிக்கப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அடுத்த மாதத்தில் மேலும் 60 பேர் ஓமானுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் இவ்வருடத்தில் மொத்தமாக ஆயிரம் தாதியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே சுகாதார அமைச்சின் நோக்கமெனவும் தெரிவித்தார்.இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் இரண்டு வருட காலத்திற்கு அந்நாடுகளில் கடமை புரிவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முல்லை கடலேரியில் தற்கொலை படகுகள் மீது விமானத் தாக்குதல்

boats-1002-2.jpgமுல்லைத் தீவு கடற்பிரதேசத்தில் நேற்றுக்காலை புலிகளின் தற்கொலைப் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு ஏரிக்கு வடக்கே புலிகளின் தற்கொலைப் படகுகள் மூன்றினை அவதானித்த விமானப் படையினர் கிபிர் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். நேற்றுக் காலை 10.35 மணியளவில் புலிகளின் இலக்குகளைத் துல்லியமாக அவதானித்ததன் பின்னர் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு விசுவமடுவில் இராணுவத்தின் 58 ஆம் படைப் பிரிவினரிடம் நேற்று முன்தினம் மாலை 541 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். மேலும், படகில் வந்த ஏழு சிவிலியன்கள் யாழ்ப்பாணம் முனை கடற்படை முகாமில் தஞ்சமடைந்ததாகவும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்

வவுனியா நிவாரண கிராமங்களில் அரசாங்க வங்கிகளின் கிளைகள். தங்கியுள்ளோர் விபரங்களை இணையத்தில் வெளியிட முடிவு

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு இணையத்தளத்தில் விசேட ஹொட் மெயில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா கதிர்காமர், அருணாச்சலம், ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன் ஆகிய நிவாரணக் கிராமங்களில் தற்காலிக, நிரந்தர வீடுகளில் தங்க வைக்கப்படும் மக்களின் முழுமையான விபரங்களை அமைச்சு எடுத்து வருகிறது.

விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது உறவுகள் எங்குள்ளார்கள் எனபதை அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி மாலை வரை 34,430 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு புலம் பெயர்ந்துள்ளவர்கள் உதவிகள் செய்வதற்கு ஏதுவாக மேற்படி கிராமங்களில் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினர்.

17ல் தமிழகமெங்கும் மனிதசங்கிலி போராட்டம்: பழ.நெடுமாறன்

nedumaran.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.

மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரையிலும் கிழக்கு கடற்கரையோரமாக புதுச்சேரியில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கடலாடி, தூத்துக்குடி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மனித சங்கிலி போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக ‘இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தி

mahi-narayanasuwami.jpgஇலங்கை ஜனாதிபதி மாளிகையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி  தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில்பேசிய இலங்கை ஜனாதிபதி  ராஜபக்சே நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுடபத்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாராயணமூர்த்தியை இந்தப் புதிய பொறுப்பில் அமர்த்துவதாகவும், அதற்கான நியமனக் கடிதம் இந்த விழாவிலேயே தரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதை நாராயணமூர்த்தி ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோஹோனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிராமப்புற வேலைவாய்ப்பில் இந்தியாவின் மாடல் திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயலாக்கினோம் என்பது குறித்து தான் விளக்கியது ராஜபக்சேவுக்குப் பிடித்துவிட்டதால், அதை இலங்கையிலும் செயல்படுத்த விரும்புகிறார். அதற்காகவே என்னை இந்தப் பதவியில் நியமித்துள்ளார் என்றார் நாராயணமூர்த்தி.

2009 ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆண்டு

net.jpg2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கிலமொழி ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தில் ‘நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் ஆங்கிலக்கல்வி’ என ஜனாதிபதி அறிவித்ததை தற்போது நடைமுறைப் படுத்தியுள்ளார் என தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இதற்கு இந்தியப் பேரறிஞர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கிலமொழி ஆண்டாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, இதனை ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்வியின் பிதா என வர்ணிக்கப்படும் இந்தியப் பேரறிஞர் நாராயணமூர்த்தி, ஐதராபாத் ஆங்கிலமொழிப் பல்கலைக்கழக உபவேந்தர் எபெயுன் மயூரியா, ஆங்கில மொழிப் பயிற்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் சுனிமல் பெர்னாண்டோ, செயலணியின் இனைப்புச்செயலாளர் ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது,

வரலாற்றில் முதல் தடவையாக ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. நாட்டின் பிரதான செயற்திட்டமான மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. ஆங்கில மொழிப் பயிற்சி என்பது நாட்டின் கிராமியப் பகுதி பிள்ளைகளை இலக்காகக் கொண்டே ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஜனாதிபதி செயலகம் உட்பட பல்வேறு நிறுவனங்களும் பங்களிப்பினையும் உந்துதலையும் வழங்குகின்றன எனவும் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய ஐதராபாத் பல்கலைக் கழக பேராசிரியர் எபெயும் மயூரியா;இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நட்பு பேணும் நாடுகள்.இலங்கை அரசாங்கம் ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப ஆண்டாக இவ்வருடத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள இத்தருணத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.