17

17

ஊடகவியலாளர் சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பில் இலங்கை தெளிவுபடுத்த வேண்டும் -சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை.

sathiyamoorthy.jpgஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சத்தியமூர்த்தி கடந்த 12 ஆம் திகதி இலங்கைப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் படுகாயமடைந்து மரணமடைந்தமை தெரிந்த விடயமே. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சத்தியமூர்த்தி நீண்டகாலமாக பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியளிக்கை மற்றும் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை மற்றும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  தமிழீழம் அல்லது சுதந்திரமான தமிழ் தாய்நாடு தொடர்பில் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர் தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார். எனினும் சத்தியமூர்த்தி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எந்தத் தரப்புக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர். மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.  இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

ஆயுத மோதல்களின் போது, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய வன்முறையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1738வது தீர்மானத்தின் அடிப்படையில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களை அங்கீகரித்து, பொதுமக்கள் மற்றும் ஆயுதம் தரிக்காதவர்களைப் பாதுகாக்குமாறு தாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சத்தியமூர்த்தியின் அரசியல் பார்வை எதுவாக இருந்த போதிலும், அவர் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்க்களப் பகுதியில் ஆபத்தான ஊடகப் பணியை மேற்கொண்டிருந்தாக சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஹெய்டன் வைய்ட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் மரணம் குறித்து விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்;டுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளை அச்சுறுத்தும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டு போர் தொடர்பான சுயாதீன தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை அடைத்துள்ள நிலையிலேயே சத்தியமூர்த்தியின் மரணம் சம்பவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில் 12க்கும் மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மிக நீண்டகால சிவில் யுத்தத்தில் அரசாங்கம்  அதிகளவான வெற்றிகளை பெற்றும் வரும் வேளையில் இலங்கையின் ஊடக சுதந்திர சூழல் படிபடியாக சீர்குலைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

 படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.

தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார்.  புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது. தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் புலனாய்வுத் துறையினரால் விசாரணை:

இதே நேரம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகவும் சில இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயன் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. நேற்று புலனாய்வுபிரிவின் அலுவலகத்தில் (6ம் மாடியில்) சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு  புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக அவர் இந்த விசாரணைகளில் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

இந்த விசாரணையின் போது வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் கொல்லப்படுவதாக செய்திகளை வெளியிட்டமை ,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உரை பிரசுரிக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடனான உறவு நிலை போன்ற விடயங்கள் விசாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ரி.தனபாலசிங்கம், கடந்த வெள்ளிக் கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. 

கடந்த 12 ஆம் திகதி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற உரையொன்று தொடர்பில் வெளியான செய்தி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற குறிப்பேட்டுடன் ஆராய்ந்து பார்க்குமாறு புலனாய்வுதுறையினரிடம் தனபாலசிங்கம் கூறியுள்ளார். அதில் எதுவும் தவறு இருந்தால் அதற்கு தான் பொறுப்பு எனவும் தனபாலசிங்கம் புலனாய்வுத்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் – உலக பத்திரிகைகள் ஒன்றிய அறிக்கை.

2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்க்கு அச்சுறுத்தலான நாடுகளில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் 14ஆகக் குறைவடைந்துள்ளது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அடுத்த மோசமான நாடு எனக் கூறியுள்ளது. இந்த நாடுகளில் 2008ஆம் ஆண்டு தலா 7 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், பிரிப்பைன்சில் 6 ஊடகவியலாளர்களும், மெக்சிக்கோவில் 5 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போதே ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு 95 பேரும், 2006ஆம் ஆண்டு 110 பேரும், 2005ஆம் ஆண்டு 58 பேரும், 2004ஆம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த வருடம் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து- எம்.பி. சிவாஜிலிங்கம்

Sivajilingam M K
இலங்கைக்கு நான் திரும்பிச் சென்றால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார் என இந்தியாவிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அந்த இணையத்தளம் மேலும் தகவல் தருகையில் மதுரைக்கு வந்த சிவாஜிலிங்கம், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விடயங்களை பின்வருமாறு தொகுத்துத்தந்துள்ளது.

‘வன்னி பகுதியில் தமிழர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால் தமிழர்கள் சாவின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச அளவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இலங்கையில் ஏற்கனவே 3 தமிழ் எம்.பி.க்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நான் நாடு திரும்பினால் தேசத் துரோக குற்றம் சாட்டி சிறையில் தள்ளி கொன்றுவிடுவார்கள். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் இந்தியா வந்தேன். இங்கிருந்தபடியே தமிழ் மக்களுக்காக போராடுகிறேன் என்றார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் இன்று

election-commissioner.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் இன்று (17) தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளது. கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள், வாக்குச் சாவடிகள் அமைத்தல் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட உள்ளது. மேல்மாகாண சபை கடந்த மாதம் கலைக்கப் பட்டதோடு வேட்பு மனுக்கள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளன. தேர்தல் ஏப்ரல் மாதம் முதற் பகுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி:தமிழக பட்ஜெட்

tamilnadu-ass.jpgதமிழகத்தின் நடப்பு (2009-10) ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. நிதி அமைச்சர் அன்பழகன்  9.30மணிக்கு  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஈழத் தமிழரைக் காப்பாற்றக்கோரி தமிழகத்தில் இன்று மனிதச்சங்கிலி

1102-vaiko.jpgஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.

நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.

இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
 
 

யாழ்.பல்கலை மாணவர்க்கு விமான டிக்கட்

risard.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள யாழ். பல்கலைக் கழகத்திற்கு செல்ல வேண்டிய மாணவர் ஆறு பேருக்கு விமான பயணச் சீட்டுக்களும் கைச்செலவிற்கு பத்தாயிரம் ரூபா பணமும் மீள்குடியேற்ற அமைச்சினால் நேற்று வழங்கப்பட்டது.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவற்றை வைபவ ரீதியாக மாணவர்களிடம் நேற்று வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கினார். வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் நலன்புரி நிலையங்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சுகாதாரம், சமைத்த உணவு விநியோகம், குடிநீர், மின்சார வசதிகள் பற்றியவை மீளாய்வு செய்யப்பட்டது.

வவுனியா பிரதேசத்திற்குள் வந்தவர்கள் 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை குடியமர்த்த செட்டிகுளத்தில் நான்கு மாதிரி நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. அது தொடர்பான வேலைத் திட்டங்கள் துரிதமாகவே நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர், அந்த பிரதேசத்திற்கு அதிகாரிகளுடன் விஜயம் செய்து வேலைத் திட்டங்களை அவதானித்தார்.

பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எவருக்கும் அனுமதி கிடையாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

election_.jpgஇனிமேல் நடைபெறும் தேர்தல்களின் போது பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது அமைச்சர் டி. எம். ஜயரத்னவுக்கு பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.  இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அவர் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கலான எட்டு வகையான ஆவணங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே இந்த எட்டு வகையான ஆவணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதில் எதுவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்குவதற்கு இடமளியேன் – ஜனாதிபதி

mahinda1402.jpgஇலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்கு வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கோ, தெற்கோ, தமிழரோ ஏனைய இனத்தவரோ அனைவரும் ஒருதாய் மக்கள், அவர்களை சகோதரர்களாக மதித்து அம்மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சில சக்திகள் சர்வ தேச நாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம். நாட்டின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹோமாகம பமுனு ஆரச்சி பவுண்டேசன் நிறுவனத் தினரால் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள ஹோமாகம பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையி லேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களுக்கு மானசீக துன்புறுத்தலைப் படையினர் மேற்கொண்டு வருவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளே இவ்வாறு செய்தாலும் படையினர் ஒரு போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள் எனப்பது உறுதி.

இவ்வாறு பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களுக்கான சகல வசதிகளையும் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் அதிககவனம் செலுத்திவருகிறது. அத்துடன் இவ்வாறு வரும் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது டாக்டர்களும் தாதியர்களும் அங்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச அமைப்புக்கள் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென இங்கு வந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அம்மக்களுக்கு எந்த வித உதவியையும் செய்யாமலேயே மீண்டும் நாடு திரும்பிவிடுகின்றனர். அங்கு சென்று இலங்கை மக்களை அந்நாடுகளில் கண்காட்சிப் பொரு ட்களாக்கப் பார்க்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் எமக்கு உதவியளித்தன என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. எனினும் பெரும்பாலான சர்வதேச அமைப்புக்கள் உதவி என்ற பெயரில் எமது மக்களுக்கு உபயோகிக்க முடியாத பழைய உடைகளையும், காலாவதியான உணவுகளையும் வழங்கியிருந்தன. அவற்றை நாம் தீமூட்டியதையும் இங்கு நினைவு கூரவேண்டியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது சர்வதேச அழுத்தங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது. தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும்வரை எவரும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது.  மேற்படி வெற்றியானது அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை மேலும் வலுப்படுத்துவது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவு – ஆலோக் பிரசாத்

alokprasad-pillaiyanbatticalo.jpgஇந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அடங்கலான தூதுக்குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்திய தூதுவர் தனது விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அரசஅதிபர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கம் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இந்நிகழ்வுகளில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வர் மற்றும் மட்டு. மேயர் ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்குமென்று தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், கிழக்கு மாகாணம் ஜனநாயக ரீதியில் இன்று செயற்படுவதையிட்டு இந்தியா தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது.கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென கடந்த காலங்களில் இந்தியா சிறிய உதவிகளை செய்தது. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பஸ் வண்டிகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கும் திருமலைக்குமிடையில் அதி நவீன புகையிரத வண்டியொன்றை வழங்கி சேவையில் ஈடுபடச் செய்ய உள்ளோம். அதேபோன்று இருபது தொழில் கல்வி நிலையங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்தியா உதவுமென மேலுமவர் தெரிவித்தார்.

அம்பாறைக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர், அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடினார் அம்பாறை நகர அபிவிருத்திக்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரச அதிபர் இங்கு விளக்கமளித்துள்ளார். இந்திய அரசாங்கம் அம்பாறை உட்பட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திசெய்ய பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கூறினார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்போரை அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

srilanka_displaced_.jpgமீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தற்போது வவுனியா மாவட்டத்துக்கு வருகை தரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

செட்டிகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் கிராமத்துக்குச் சென்று அங்கு தற்காலிகமாக வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்.  அதேவேளை, அக்கிராமத்தை அண்டிய பகுதியில் மற்றும் இரு கிராமங்களை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் இடம் பெறுவதால் அதனது முன்னேற்றம் குறித்தும் அப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.

இதேவேளை, வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளை உடன் பெற்றுக் கொடுக்குமாறும் போதுமானளவு வைத்தியர்களை ஈடுபடுத்துமாறும் அமைச்சர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.

அமைச்சருடன் யூ.என்.எச்.சி.ஆர். இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அமீன் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.