கொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளவென வந்த புலிகளின் இரு விமானங்கள் படையினரால் நேற்று (20.02.2009) இரவு சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
ஒரு விமானம் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத் தொகுதியில் மோதி வீழ்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க படைத்தளத்துக்கு அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் விமானமோட்டி ஒருவர் சடலத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விமானம் அங்கே வீழ்ந்தபோது பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புக் கருதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (20.02.2009) இரவு 9.30 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
புலிகளின் ஒரு விமானம் இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின் மோதுண்டு உடைந்து விழுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்டடத்தின் 12-13 வது மாடிப்பகுதியின் பின் புறமாக விமானம் மோதுண்டதாலும் குண்டு வெடித்ததாலும் இருவர் பலியானதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் உடைவுகளைப் பார்வையிடுவதற்காக வேண்டி தேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~ நல்லிரவு அவ்விடத்துக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீதுவிழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன. சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் www.lankadeepa.lk, www.army.lk இணையத்தளஙகளிலிருந்து பெறப்பட்டவை.




