சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார்.
லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்
நேற்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர். ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர். கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.
