24

24

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை.

navy_rg.jpgசமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலக தொடர்பாடல் பிரிவின் அறிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் மனிதக் கேடயங்களாக மக்களைப் பாவிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கடந்த சில நாட்களில் 30000 க்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்து தப்பி வந்துள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் தற்போதைய தேவைகளைக் கண்டறியவும் அவர்கள் தம் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் வரை இடம் பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்கான திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடவும் சென்ற வார இறுதியில் மீள்குடியமர்வு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுத்தீன் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கி வவுனியா சென்றிருந்தார். அக்குழுவில் அரசாங்க மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் அடங்கினர்.

இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் தற்போது நிறைவு செய்யப்படுகின்றன. அவர்கள் வவுனியா வந்ததும் வைத்தியர்கள் அவர்கள் உடல் நிலையைப் பரிசோதித்து தேவையானவகளுக்கு மருந்துகளை வழங்கி அவர்களுள் கடுமையாக நோய்வாய்ப் பட்டவர்களை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்றனர். வன்னியில் இருந்து களைத்துப் போய் வந்த அவர்களுக்கு உடனடியாக சூடான உணவும் பானங்களும் வழங்கப்படுகின்றன. விசேடக் கவனிப்புத் தேவைப்படும் முதியர்வகள் அவர்களுக்கான இல்லங்களில் சேர்க்கப்படுவதோடு மத குருமாரும் அநாதைகளும் மதத் தலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஏனைய சகல இடம்பெயர்ந்தோரும் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்கள் ஓரிரு வாரங்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளிலேயே பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மற்றும் சுகாதார வசதிகளை இம்முகாம்களில் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு முகாம்கள் போதாதவிடத்து சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மேலதிக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான உணவு மற்றும் சவர்க்காரம் உடுதுணிகள் போன்றவை குறைவின்றி வழங்கப்படுகின்றன.

சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்ற போதிலும் அவற்றை மிக அவசரமாக நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற வார விஜயத்தின் போது இடம்பெயர்ந்தோருக்கு வழங்ககப்படும் உணவின் தரம் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக இடம் பெயர்ந்தோர் தமது உணவைத் தாமே தாயரிக்கும் திட்டம் ஒன்றையும் அரசாங்கம் இவ்வாரம் பரீட்சித்து வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரிந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆட்களை இலகுவாகக் கண்டு பிடிப்பதற்கு வசதியாக கணனித் தரவுத் திரட்டு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மென்பொருள் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைக் கொண்டதொரு குழு அமைக்கப்பட்டுள்ளதோடு ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பும் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. கள நிலைமையை எடுத்துக் கொண்டால் இடைத்தங்கல் முகாம்களின் நிருவாகம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் தினமும் கூட்டங்களை நடாத்துகின்றனர்.

தற்போது இடைத்தங்கல் முகாம்கள் ஆட்களினால் நிரம்பியுள்ளதால் மக்களுக்குப் போதிய இடவசதியையும் மாணவர்கள் தம் கல்வியைத் தொடர்வதற்கு வசதியளிப்பதற்காகவும் ஏற்றவாறு விசாலமான தற்காலிக வீடுகளை அமைப்பதற்காக யூஎன்எச்சிஆருக்கு ஒரு காணித்துண்டை வழங்குவது பற்றியும் இவ்விஜயத்தின் போது ஆராயப்பட்டது.

இக்குடியிருப்புக்கள் அரசாங்கம் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நலன்புரி கிராமங்களின்; அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கிராமங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களைவிட மாறுபட்டதாகவும் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றன. மாண்புமிகு ஜனாதிபதி சீன விஜயத்தின் போது பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனசமூக வசதிகளுடன் சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கிராமங்களை கண்டு அவற்றைப் போலவே இந்நலன்புரி நிலையங்களை அமைக்க வேண்டும் என விரும்பியதன் விளைவாக இந்நலன்புரி நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டன.

தொடர்பாடல் பிரிவு
சமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலகம்.

புதுக்குடியிருப்புக்குள் நுழைந்திருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

mi24_2601.jpgஇலங்கை இராணுவத்தினர் இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் வசம் எஞ்சியுள்ள ஒரேயொரு நகரமாகிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் முன்னேறிய இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு கிழக்கே இராணுவ முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இதி்ல் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,

இந்த மோதல்களின்போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் 19 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இன்று அதிகாலையும் நேற்றும் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் 40 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவிலிருந்து கப்பலில் அழைத்து வரப்பட்ட காயமடைந்தோரில் இதுவரை 11 பேர் உயிரிழப்பு

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்குக் கூட்டிவரப்பட்ட காயமடைந்த பொதுமக்களில் பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் கண்டி போதனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர் என்றும் மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, திருகோணமலையிலிருந்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பெப்ரவரி 11 முதல் நான்கு தடவைகளாக கப்பல் மூலம் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டோரில் 1,110 பேர் திருகோணமலையிலிருந்து வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் 500 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 21 பேருமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. இதன் விபரம் வருமாறு;

பெப்ரவரி 1 தொடக்கம் பெப்ரவரி 19 வரை 500 பேர், பெப்ரவரி 20 – 28 பேர் , பெப்ரவரி 21-45 பேர், பெப்ரவரி 22-11 பேர் , பெப்ரவரி 23 -33 பேர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டோரின் பிந்திய நிலைவரம் வருமாறு;
கொழும்பு / கண்டி 68 பேர் , பொலனறுவை 171 பேர், கந்தளாய் 160 பேர், தம்பலகமம் 76 பேர்.

உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

europa-u.jpgஇலங்கை யில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்துமாறும் மனிதாபிமான உதவிகள் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்றடைவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேற அனுமதியளிக்குமாறும் கேட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் ஆயுதங்களையும் பயங்கரவாதத்தையும் சகல வன் முறைகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பிரசெல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பின் போதே இது தொடர்பான அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்துவருவது தொடர்பாகவும் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் மோதல் பகுதிகளில் அகப்பட்டிருப்பது குறித்தும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையிட்டும் கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த மோதலில் ஈடுபடும் தரப்பினர் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் யுத்தவிதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசும் புலிகளும் இந்தச் சட்ட விதிகளுக்கு அமைவாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்திருக்கிறது. மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்க புலிகள் வன்முறையையும் அச்சுறுத்தலையும் மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன் ஆயுதங்களையும் வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் புலிகள் கைவிட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை போருக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக ஆட்திரட்டல் ஆகியவற்றை கைவிட்டு நிலையானதும் நீதியானதுமான தீர்விற்கான அரசியல் நடவடிக்கைகளில் புலிகள் பங்குபற்ற வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. அதேசமயம் சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான கவலைகளுக்கு தீர்வு காணும் வகையில் சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் நடவடிக்கைகளை இலங்கை அரசதரப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீண்டகால மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதானது இறுதியான சமாதானத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வின் தேவையை மீள அழுத்தி நிற்பதாக ஒன்றிய அமைச்சர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார நிலையம்:அமைச்சர் ரிஷாத்

pregnant-lady.jpgவன்னியிலி ருந்து வரும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன்கருதி வவுனியா ஆயுர்வேத வைத்திய நிலையத்தில் விசேட மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார். வன்னியில் இருந்து சுமார் 700 கர்ப்பிணித் தாய்மார்கள் வவுனியாவுக்கு வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரசவத்தின் பின்னர் இவர்கள் முகாம்களுக்கு அனுப்பப்படாமல் மேற்படி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளும் அளிக்கவுள்ளதாகவும் அவர்களின் குழந்தைகளின் நலன்களை கவனிக்கவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சுகாதார அமைச்சினூடாக இவர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர வவுனியா வந்துள்ள மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் மு.கா.தனித்து போட்டி

SLMC Gen Sec M T Hasan Aliமேல் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் வேட்பாளர் பட்டியல்கள் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி இன்று செவ்வாய்க்கிழமை அல்லது நாளை புதன்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேல்மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ஹஸன் அலி அந்த இரண்டு மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று காலை பூர்த்தி செய்யப்படவிருப்பதாகவும் அப்பணி நிறைவுற்றதும் தாமதமின்றி இன்று அல்லது நாளையே வேட்புமனுதாக்கல் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் ஆயுதங்களை கீழே போடலாம்: யுத்தநிறுத்தம் என்பது கிடையாது – அமைச்சர் கெஹெலிய

rambukwela.jpgவிடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டிய எத்தகைய தேவையும் அரசாங்கத்துக்குக் கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே வைப்பார்களானால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளனர். நாம் யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாரென அதில் குறிப்பிட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தருணத்திலேயே புலிகளின் இக்கோரிக்கைக்குப் பதிலளிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று வெளியிட்ட தகவல் அமைந்துள்ளது.

அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக விடு தலைப் புலிகளுடனான அனுபவம் அரசாங்கத்துக்கு உண்டு. இத்தகையதொரு நிலையில் விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் 98 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யுத்த நிறுத்தமொன்றுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

vanni.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவிவகாரங்களுக்கான கவுன்சில் இலங்கையில் மோசமடைந்துவரும் மனிதநேய நெருக்கடி குறித்தும் பெருமளவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் போர் தொடர்பிலான சட்டங்களை இந்த மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக போர்நிறுத்தம் ஒன்றையும் கோரியிருக்கிறது என பி.பி.ஸி. செய்திச்சேவை நேற்று அறிவித்துள்ளது. .

விடுதலைப்புலிகள் மோதல் நடக்கும் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க வன்முறை மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து அங்கு தங்கியிருப்போரைப் பார்க்க வருபவர்களைக் கண்காணித்து அனுமதிக்கும் முறை சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம் , அங்கு சுயாதினமான கண்காணிப்பு அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஐ.நா. செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற மனித நேய அமைப்ப்புகள் அந்த முகாம்களுக்கு வர முழு அனுமதி தரப்படவேண்டும் என்றும் அது கோருகிறது.

இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை என்பதை வலியுறுத்தும் ஒன்றியம், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவது என்பது அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே அமையும் என்று கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் முடிவாகத் துறந்து, சிறார்களை படையணியில் சேர்ப்பதை நிறுத்தி, நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வை அடைய ஒரு அரசியல் வழிமுறையில் பங்கேற்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது

இறைவரித் திணைக்கள பணிகள் இன்று முதல் வழமைபோல் தொடரும் -திணைக்கள ஆணையாளர் நாயகம்

colombo-01.jpgஇறைவரித் திணைக்கள நடவடிக்கைகள் யாவும் இன்று (24) வழமைபோல இடம்பெறும் என இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எஸ். அங்கம்மன தெரிவித்தார்.

புலிகளின் விமானம் விழுந்து நொறுங்கியதால் இறைவரித் திணைக்கள 12ம் மாடி கூடுதலாக சேதமடைந்தது. ஏனைய மாடிகளிலும் சிறுசிறு சேதங்கள் ஏற்பட்டன. 12ம் மாடி தவிர்ந்த ஏனைய மாடிகளில் இன்று முதல் பணிகள் வழமைபோல இடம்பெறும் எனவும் விமானம் வீழ்ந்ததால் கணனி வலைமைப்பிற்கோ ஆவணங்களுக்கோ சேதம் ஏற்படவில்லை எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

12ம் மாடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வேறு இடமொன்றுக்கு மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை துரிதமாக திருத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

விசுவமடுவில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு பாதுகாப்பு படையினரால் மீட்பு

uthaya_nanayakara_.jpgமுல்லைத் தீவு, விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  படையினரால் விடுவிக்கப்பட்ட விசுவமடுவின் பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதல்களின்போதே இந்த ஆயுதக்கிடங்கை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 81 மி.மீ. ரக 250 மோட்டார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர். 52 பீப்பாய் எரிபொருள்கள், 150 பெட்டிகளைக் கொண்ட இரும்புக் குண்டுகள், 35 ஆயிரம் வெடிபொருட்கள் என்பனவற்றையும் படையினர் அங்கிருந்து கண்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புப் படையினர் இந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.