இலங்கை யில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்துமாறும் மனிதாபிமான உதவிகள் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்றடைவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேற அனுமதியளிக்குமாறும் கேட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் ஆயுதங்களையும் பயங்கரவாதத்தையும் சகல வன் முறைகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறது.
பிரசெல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பின் போதே இது தொடர்பான அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்துவருவது தொடர்பாகவும் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் மோதல் பகுதிகளில் அகப்பட்டிருப்பது குறித்தும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையிட்டும் கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த மோதலில் ஈடுபடும் தரப்பினர் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் யுத்தவிதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசும் புலிகளும் இந்தச் சட்ட விதிகளுக்கு அமைவாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்திருக்கிறது. மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுக்க புலிகள் வன்முறையையும் அச்சுறுத்தலையும் மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன் ஆயுதங்களையும் வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் புலிகள் கைவிட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை போருக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக ஆட்திரட்டல் ஆகியவற்றை கைவிட்டு நிலையானதும் நீதியானதுமான தீர்விற்கான அரசியல் நடவடிக்கைகளில் புலிகள் பங்குபற்ற வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. அதேசமயம் சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான கவலைகளுக்கு தீர்வு காணும் வகையில் சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் நடவடிக்கைகளை இலங்கை அரசதரப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதானது இறுதியான சமாதானத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வின் தேவையை மீள அழுத்தி நிற்பதாக ஒன்றிய அமைச்சர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.