புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் அதிகளவிலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்றைய தினம் (06) மட்டும் சுமார் 5,500 பேர் இவ்வாறு வந்து சேர்ந்துள்ளார்கள். இது தொடர்பாக பிரிகேடியா சவேந்திர சில்வா தகவல் தருகையில் இன்றும் (07) அதிக எண்ணிக்கையான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தவண்ணமுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
07
07
விமானப் படையின் கிபிர் ஜெட் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த புலிகளின் கடற்புலித் தளபதி சூசையின் மறைவிடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 11 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி களமுனைச் செய்திகள் தெரிவிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் புலிகளின் கடற்புலி தளபதி சூசையும் அங்கே இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் புதுக்குடியிருப்பு திரணைப்பாலை என்ற இடத்தில் உள்ள பங்கர் ஒன்றின்மீதே நடத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலையே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விமானப் படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கிபீர் மற்றும் எப் 7 ரக ஜெட் விமானங்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.
இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார். நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து….தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.
உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை உயிரிழந்தார் ரவிச்சந்திரன். மரணவாக்கு மூலத்திலும் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தாக கூறி உள்ளார்.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதனாலேயே படையினரின் நடவடிக்கைகள் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி., இல்லாவிட்டால் படையினரின் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முடிந்திருக்கும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை திருத்தம் செய்யப்பட வேண்டும். நோர்வேயின் அனுசரணை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளே இருந்தன. ஆனால், இன்றோ அரசாங்கம் போர் நிறுத்தத்தையே முடிவுக்கு கொண்டு வந்து, நோர்வேயின் பாத்திரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, அதற்கு அப்பால் சென்று விடுதலைப் புலிகளை தடையும் செய்துள்ளது.
எனவே, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை இன்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் அதைப் பெற உரைத்தவர்கள் என்ற வகையில் நாம் சந்தோஷமடைய வேண்டும். படையினர் இன்று புலிகளை இறுதி நிலைக்குக் கொண்டு சென்று சிக்க வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளுக்கு நேரடியாகவே தூதுபோகும் ஒரு சில உறுப்பினர்கள் படையினருக்கு கடலுக்குள் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்கள். ஆனால் இன்றோ புலிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இன்று இராணுவ வெற்றிகளை பாராட்டும் நிலைக்கு வந்துள்ளார். எனினும் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றிய போது கூட இதை அவர் கூறவில்லை. அதன் போது எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறே கூறினார். ஆனால், படையினர் முல்லைத்தீவையும் கைப்பற்றி இறுதி வெற்றிக்குச் செல்லும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் படையினர் வெற்றிகளை பாராட்டத் தொடங்கியுள்ளார்.
இதேநேரம், போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் வலியுறுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத்திற்கும் உட்பட்டு, இறுதித் தோல்வி நிலையில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் ஒட்சிசன் வழங்க மீண்டுமொரு போர் நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தாது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே படையினர் தங்களது மனிதாபிமான நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டு வருகின்றனர். இல்லாவிட்டால் படையினரினர் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்கும், ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போன்றோ அல்லது காஸாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டது போன்றோ பொதுமக்களின் நலன் குறித்து கருதாமல் இலங்கைப் படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை. இவ்வாறான நிலைமையில் அமெரிக்காவுக்கும் சரி, பிரிட்டனுக்கும் சரி இலங்கைப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது, புலிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒட்சிசன் வழங்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்றார்.
சுமார் மூன்று தசாப்த காலமாக செயலிழந்துபோயுள்ள யாழ் குடாநாட்டுக்கான ரயில் சேவையை இந்தியவின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளில்; சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விடயம் தொடர்பாக அனைத்து உரிய தரப்பினருடனும் கலந்துரையாடி வரும் அமைச்சர் இதற்காக இந்தியாவின் உதவிகளையும் நாடியுள்ளார்.
வெகுவிரைவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் மூலம் யாழ் குடாநாட்டு மக்களும் ஏனைய பிரதேச மக்களும் பாரிய நன்மைகளை அடையவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா நகர சபையின் கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நகர சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிக்கோட் திட்டத்தின் கீழ் 500 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கலாசார மண்டபத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர் டிக்சன் சரத் சந்திரடிலா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை அழைத்துப் பேசுவதைச் சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்கு தொடரப் போகிறார்களாம். நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு குறைகளைச் சுமத்துகிறார்கள்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டம் உள்ளிட்ட வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொருட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமார் 3000 பேர் மத்தியில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறியதாவது,
இந்த ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை வரவழைத்து அவர்கள் மத்தியில் நான் பேசுவதாக சிலர் குறைபடுகிறார்கள். இங்குள்ளோரை கிராமங்களுக்கு வந்து சந்திக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. பலரை இவ்விடத்திற்கு அழைத்து இந்த மாளிகையை அசிங்கப்படுத்துவதாக ஒரு வேட்பாளர் கூறியிருக்கிறார். இந்த மாளிகைக்கு அப்பாவி மக்கள் வந்து பல அனுபவங்களைப் பெற்றதன் மூலம் அவர்களது உள்ளங்களில் ஏற்பட்டுள்ள ஆனந்தத்தையும் அபிலாஷைகளையும் நான் நன்கு உணர்ந்தேன். நான் உங்களை எல்லாம் இங்கு அழைத்துப் பேசுவதை சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆடம்பரமான வகை தொகை படைத்தவர்களை அழைத்துப் பேச வேண்டுமென்பதே.
இந்த நாட்டின் கிராமப்புறப் பகுதியில் பிறந்து வளர்ந்து மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு என்மீது குறை கூறுகிறார்கள். இவ்வாறு மக்களுடன் நான் தொடர்பு கொள்வதை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.
இந்த நாடு பல்லின மக்களைக் கொண்ட நாடாகும். இவர்களின் சமய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் பல வகைப்பட்டவை. அவர்களின் எழுச்சிக்கும் வாழ்க்கைக்கும் உதவும் வகையில் அவர்களை ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஆதரிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். முஸ்லிம் மக்களின் கல்வி பல நிலைகளிலும் பின்னடைவை நோக்கி இருப்பதாக எனக்குப் பலராலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆரய வேண்டியுள்ளது. இது குறித்து நான் மிகுந்த கவனத்தை எடுப்பேன்.
புலிகளின் கெடுபிடியால் பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் பாரிய வெற்றியே நாம் அடைந்துள்ளோம். இதன் பொருட்டு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளது. அங்கெல்லாம் மக்கள் கல்வியையும் மற்றும் இயல்பு வாழ்க்கையையும் இன்று இட்டுச் செல்லக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருக்கிறார்கள். இவர்களில் முஸ்லிம்கள் பெரும் அளவில் அரசுக்கு ஆதரவை வழங்க முன்வந்திருக்கிறார்கள். இது நல்லதோர் அறிகுறியாகும். ஐ.தே.கட்சியைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருப்பதன் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் உள்ள எனது முயற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அப்பாவி தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதே எமது தலையாய பணியாகும். இதனையே நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.எனவே புலிகள் இத்தருணத்திலாவது இந்த நிலைப்பாட்டை உணர்ந்து அப்பாவி மக்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவான ராதா படையணியின் தலைமையகத்தை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.57 வது படைப் பிரிவும், இராணுவத்தின் மூன்றாவது செயலணியும் இணைந்து இதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவின் விசுவமடுவுக்கு கிழக்கே இந்த முகாம் அமைந்திருந்தது. இராணுவத்தின் மேற்படி இரண்டு பிரிவுகளும், ராதா படைப் பிரிவு தலைமையகக் கட்டடத் தொகுதியை கைப் பற்றும் போது அங்கு புலிகளின் ஈழக்கொடி பறந்து கொண் டிருந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பிரிவாக இருந்த இந்த படையணி தலைமையகத்திலிருந்தே சகல பாதுகாப்பு மற்றும் யுத்த கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.
பிரபாகரனுக்கும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த முக்கிய தலைவர்களுக்கும் ராதா படையணியே பாதுகாப்பு வழங்கி வந்தது. அதேநேரம், புலிகளின் விமானப் படைப் பிரிவுக்குரிய பாதுகாப்பையும் இந்த படையணியே வழங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ராதா படையணி தலைமையகம் பாரிய மண் அணைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.
படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள், இராணுவத்தினர் கட்டடத் தொகுதிக்குள் புகுவதற்கு சற்று முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளனர். படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான் நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரகசியமாக விற்றதால் 2004-ல் கைது செய்யப்பட்டார்.
தனது குற்றத்தைக் கான், ஒப்புக்கொண்டதால் அப்போதைய அதிபர் முஷாரப், கானுக்கு மன்னிப்பு வழங்கினார். எனினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர் இனிமேல் நாட்டின் எந்த பகுதிக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செல்லலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக, கானின் வழக்கறிஞர் இக்பால் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசோ, கான் நினைத்தபடி சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவரது பாதுகாப்பு நலன் கருதிதான் இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவியிலிருந்து அர்ஜுனா ரணதுங்கவை நீக்கியதன் மூலம் சர்வதேச ரீதியில் அவர் சம்பாதித்துள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதை பார்த்த உடனயே தெரியவருவதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஆட்சேபித்து அர்ஜுனா ரணதுங்க தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே உயர் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் 25 வருட அரசியல் வாழ்க்கையின் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கு கொண்டவர்களின் உணவுப்பட்டியலுக்கான கட்டணத்தை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செலுத்த மறுத்ததையடுத்தே இடைக்கால கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து அர்ஜுனா நீக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இடைக்கால கிரிக்கெட் சபையிலிருந்து அர்ஜுனா ரணதுங்க நீக்கப்பட்டமை இயற்கை நியதிகளுக்கான நீதி மற்றும் சகல சட்டங்களுக்குமான நியமனங்களுக்கு மாறானதென அர்ஜுனா சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
கிரிக்கெட் விளையாட்டுத்துறை அரசியல் மயமாகிவிடக் கூடாதென்ற காரணத்துக்காக தனது அமைச்சர் பதவியை துறந்த அர்ஜுனா, எந்தவொரு விளம்பரத்திலும் தோன்றாமல் இருந்ததன் மூலம் சிறந்த உதாரணத்துக்குரிய விளையாட்டு வீரராக திகழ்ந்தாரென இதன்போது சஞ்சீவ ஜயவர்தன குறிப்பிட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் நடவடிக்கையின் மூலம் அர்ஜுனா ரணதுங்க தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சம்பாதித்திருந்த நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்தது.
இதன் பிரகாரம் அர்ஜுனா ரணதுங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை முழுமையாக விசாரணை செய்ய அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி நடத்தவும் தீர்மானித்தது. இந்த மனு பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, அசோக டி.சில்வா, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.