பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதனாலேயே படையினரின் நடவடிக்கைகள் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி., இல்லாவிட்டால் படையினரின் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முடிந்திருக்கும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை திருத்தம் செய்யப்பட வேண்டும். நோர்வேயின் அனுசரணை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளே இருந்தன. ஆனால், இன்றோ அரசாங்கம் போர் நிறுத்தத்தையே முடிவுக்கு கொண்டு வந்து, நோர்வேயின் பாத்திரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, அதற்கு அப்பால் சென்று விடுதலைப் புலிகளை தடையும் செய்துள்ளது.
எனவே, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை இன்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் அதைப் பெற உரைத்தவர்கள் என்ற வகையில் நாம் சந்தோஷமடைய வேண்டும். படையினர் இன்று புலிகளை இறுதி நிலைக்குக் கொண்டு சென்று சிக்க வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளுக்கு நேரடியாகவே தூதுபோகும் ஒரு சில உறுப்பினர்கள் படையினருக்கு கடலுக்குள் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்கள். ஆனால் இன்றோ புலிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இன்று இராணுவ வெற்றிகளை பாராட்டும் நிலைக்கு வந்துள்ளார். எனினும் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றிய போது கூட இதை அவர் கூறவில்லை. அதன் போது எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறே கூறினார். ஆனால், படையினர் முல்லைத்தீவையும் கைப்பற்றி இறுதி வெற்றிக்குச் செல்லும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் படையினர் வெற்றிகளை பாராட்டத் தொடங்கியுள்ளார்.
இதேநேரம், போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் வலியுறுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத்திற்கும் உட்பட்டு, இறுதித் தோல்வி நிலையில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் ஒட்சிசன் வழங்க மீண்டுமொரு போர் நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தாது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே படையினர் தங்களது மனிதாபிமான நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டு வருகின்றனர். இல்லாவிட்டால் படையினரினர் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்கும், ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போன்றோ அல்லது காஸாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டது போன்றோ பொதுமக்களின் நலன் குறித்து கருதாமல் இலங்கைப் படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை. இவ்வாறான நிலைமையில் அமெரிக்காவுக்கும் சரி, பிரிட்டனுக்கும் சரி இலங்கைப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது, புலிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒட்சிசன் வழங்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்றார்.
palli
ஓகோ அதுதான் தமிழர் (வன்னியில்) தூங்கும் போது குண்டுகளை அரசு தூவிகிறதா???