விடுதலைப் புலிகள் சார்பாக செயற்படும் அனைவரும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவார்கள் என்று வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிற்சர்லாந்து மற்றும் ஜேர்மனியின் தூதுவர்கள் மற்றும் சி.என்.என், பி.பி.சி.செய்திச் சேவைகள், அல்ஜசீரா என்பன இவ்வாறாக ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தேசிய நாளேடு ஒன்றுக்கு வழங்கிய விஷேட பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; புலிகளை இறுதிக் கட்டத்தை அடைய வைக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும் நேரத்தில் குறித்த ஊடகங்களின் அறிக்கைகள் பாதுகாப்பு படையினருக்கு களங்கம் விளைவிக்கின்றன. இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களை விடுவிக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது போல சர்வதேச சமூகம் செயற்படுவது கண்டனத்திற்குரியது.
மக்களின் உணர்வலைகளைத் தூண்டக்கூடிய வகையிலான காட்சிகளை இந்தத் தொலைக் காட்சிச் சேவை ஒலிபரப்புச் செய்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில வெளிநாட்டுத் தூதுவர்கள் செயற்பட்டனர். விடுதலைப்புலிகளுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்க முயற்சிப்பதற்காக இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர்.
இதனை வெளிநாட்டு ஊடகங்கள் பொதுமக்கள் புலிகளுக்கு ஆதரவாக அப்பகுதியிலுள்ளதாக பொறுப்பற்ற முறையில் விமர்சித்து வருகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் உதவி அமைப்புகள் பணியாற்ற தடைசெய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.