எஞ்சியிருக்கும் புலிகளும் சரணடைய வேண்டும் தவறினால் படையினர் பணிய வைப்பர் – ஜனாதிபதி

Mahinda Rajapaksaஆயுதங் களைக் கைவிட்டு எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். தவறும் பட்சத்தில் இராணுவத்தினரால் பணிய வைக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஹங்குரன்கெத்தவில் தெரிவித்தார். பாதுகாப்பு படையினரிடம் சரணடையும் புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று சகல வசதிகளும் வழங்கிக் கவனிக்கவும் தயாராகவுள்ளோம். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹங்குரன்கெத்த ரிக்கில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட பகுதியில் நடைபெறுவது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல, மாறாக பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை.

வெண்ணிறச் சீருடை அணிந்து பாடசாலை செல்ல வேண்டிய அப்பாவி குழந்தைகள் ரி – 56 ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி, சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்துகொண்டு குற்றச்செயலில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களிலிருந்து இக்குழந்தைகளைப் பாதுகாப்பது மூன்று குழந்தைகளின் தந்தையான எனது பொறுப்பாகும். பயங்கரவாதம் இந்த நாட்டிலிருந்து முழுமையாக ஒழித்துக் கட்டப்படும். புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவே 48 மணித்தியால கால அவகாசம் வழங்கினோம்.

எமது பாதுகாப்பு படையினர் கிளிநொச்சியை விடுவித்த சமயம் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்று புலிகள் இயக்கத்தினரின் பல உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். அவர்களை எமது பாதுகாப்பு படையினர் தெம்பிலி இளநீர் வழங்கி மனமார வரவேற்றனர். இவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவர்களாக புலிகள் இயக்கத்தினரின் உடையுடன் வந்துதான் சரணடைந்தனர். அதனால்தான் புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ள உறுப்பினர்களையும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றேன். எமது வேண்டுகோள்படி சரணடைபவர்களை, கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று கவனிக்கவும் தயாராகவுள்ளோம். இவ்வாறு சரணடையத் தவறும் பட்சத்தில் புலிகளை எமது பாதுகாப்பு படையினர் பணியவைப்பார்கள். இதனை எவராலும் தவிர்க்க முடியாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *