திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனிக்கிழமை அன்று உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக் கோரியும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் தீக்குளித்ததாக ரவியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆனால் காவல்துறையினர், ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை என்றும் ரவி 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்றும், இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தீக்குளித்துள்ளார் என்றும் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரவி இலங்கை தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தான் என்று வைகோ, திருமாவளவன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மரணம் அடைந்த ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, பழ.நெடுமாறன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட தமிழின ஆதரவாளர்கள் மதுரை விரைந்துள்ளனர்