திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வில்லியம்ஸ் ரோட்டில் ஓட்டல் வளாகத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் இன்று மாலை திடீரென்று சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அருகே சென்று இலங்கை ராணுவத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலக கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதில் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறின.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பர போர்டுகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டு அலுவலகத்துக்குள் பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். கண்ணாடிகளை நொறுக்கும் சத்தம் கேட்டு ஓட்டல் வளாகத்தில் இயங்கி வந்த மற்ற கடை ஊழியர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து நொடிப் பொழுதில் தப்பி ஓடி விட்டது. இது குறித்து அலுவலக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணாடிகளை உடைத்த நபர்களை தேடி வருகிறார்கள்.