பாண்டியன் தம்பிராஜா

பாண்டியன் தம்பிராஜா

வன்னிப் படுகொலைகளும் அதன் நினைவு கூரலும்! : பாண்டியன் தம்பிராஜா

May_18_Remembranceபுலி துதிபாடிகள் வன்னிப் படுகொலைகளை நினைவு கூரத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு பிரபாகரன் கோமணத்துடன் வீழ்ந்து கிடந்த நாள்தான் நினைவிற்கு வருகின்றது. இந்த வியாபாரிகளுக்கு அரச இராணுவத்தாலும் புலிகளாலும் கொல்லப்பட்ட எம் சகோதரர்கள் மேல் எந்தவித நினைவும் இல்லை.

மனித நேயத்தின் அடிப்படையில்தான் பிறர் மீது அன்பு செலுத்துவது ஆகும். பாசிச புலித்தலைமைக்கு அது பற்றி கவலை ஒரு போதும் இருந்ததில்லை. அவர்களுக்கு புலியினது இருப்பே பிரதானமானது. புலி அமைப்பு என்பது மக்களுக்காகவே அன்றி புலிக்காக மக்கள் அல்ல. மாறாக புலி மக்களின் அழிவில் தம்மை பாதுகாக்க முயன்றனர் என்பது உங்களுக்கு தெரிந்ததே.

மறுபக்கமாக மனித நேயத்தின் அடிப்படையில் புலிகளின் இந்த மனித விரோத நடவடிக்கைகளை விமர்சித்த ஜனநாயக வெங்காயங்கள் வன்னி படுகொலைகளை மறுத்து மறைக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது.

நண்பர்களே! ஏங்களுக்கு இந்த படுகொலைகளை கண்டித்து நினைவு கூர மிகுந்த விருப்பம் உண்டு. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும் வரை அவர்கள் இப்படுகொலையில் புலிகளின் பங்கை ஏற்கும் வரையில் அவர்களுடன் இணைந்து நினைவு கூருவது சாத்தியமில்லை.

ஐயோ என் சொந்தங்களே, உங்களை எண்ணி அழக் கூட முடியவில்லை. ஏனெனில் அதற்கு கூட இங்கு வியாபாரிகள் உண்டு!

யதார்த்தத்திலிருந்து சுத்துமாத்துவரை! : த பாண்டியன்

Jaffna_Roadபுலம்பெயர்ந்த தமிழர்கள் என்று குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழு இலங்கை சென்று தமது அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி சமைக்கின்றனர். யார் இவர்கள்? கலாநிதி நொயல் நடேசன், கலாநிதி நரேந்திரன் , திரு. கொன்ஸ்ரன்ரைன், திருமதி. ராஜேஸ்பாலா (இவரை அண்மையில் கழற்றி விட்டு விட்டதாக கேள்விப்படுகின்றேன்) ……… போன்றோர். முதலில் இவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என்பதை கருத்திற் கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை. இங்கு ஏராளமான நல்ல உள்ளங் கொண்ட நபர்கள், தமது உறவினரின் நலன்களில் மிக அதிக அக்கறை கொண்டவர்கள்   இலங்கை அரசுடன் இணக்கப்பாடாக வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால் ஏதோ மேற்குறிப்பிட்ட நபர்கள் தங்களுக்குத்தான் யதார்த்தம் புரிவதாகவும் மற்றையவர்கள் ஏதோ கேணையர்கள் எனவும் சொல்லிகாட்ட முனைகின்றனர்.

முன்பு தேசம்நெற்றில் எனது நண்பர் வடக்கான் ஆதாம் மேற்குறிப்பிட்ட நபர்களை நீங்கள் யார்? (போர் முடிந்த பின் இலங்கை சென்ற 24 பேர்) என்ன அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கை சென்றீர்கள் என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் அவற்;றிற்கு மதிப்பிற்குரிய திருவாளர் கொன்ஸ்ரன்ரைன் பதிலளித்தாரில்லை. ஏதாவது சந்தேகம் எழுப்பினால் புலிகளின் பாணியில் ‘எங்கள் மேல் விமர்சனம் வைக்க இவர்கள் யார்” என திட்டி பின்னூட்டம் விடுகின்றார்கள்.

Jaffna_Univercity_Templeமுதலாவதாக யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவோம். இலங்கையின் மற்றைய பல்கலைக்கழகங்களில் எத்தனை வாகனங்கள் உண்டு என முதலில் அறிய வேண்டும். அங்கும் அதே நிலைதான் எனில் எல்லா பல்கலைக்கழகங்களிற்கும் உதவ முன்வர வேண்டுமேயன்றி யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவுவது சரியானதாக எனக்குபடவில்லை. ஏனெனில் யாழ்மாவட்டத்தில் வசதிகள் அதிகம் என அங்கு படித்து விட்டு இங்கு புலி எதிர்ப்பு வாதம் பேசும் நபர்கள் தரப்படுத்தலுக்கு ஆதரவாக பேசிவருவதை நாம் அறிவோம். இது என்னைப் போன்ற பல்கலை அனுமதி கிடைக்கப் பெறாத ஏராளமான வறியவர்களின் பிள்ளைகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு விடும்.

இதற்கிடையில் திரு கொனஸ்ரன்ரைனுக்கு எதிராக எழுதுவதாக நினைத்து கொண்டு சிலர் பின்னூட்டங்களில் மதங்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ணும் விதமாக கருத்தெழுதுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மிசனரியின் பாடசாலைகளில் படிக்கலாம். நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் மிசனறிகளை பிடிக்காது என்பவர்களை என்ன சொல்வது? (எனக்கும் எல்லா மதங்களின் மேலும் மிசனறிகள் உட்பட விமர்சனங்கள் உண்டு). மேலும் இணையத்தளங்களிலும் புலிக்கு எதிராக எழுதுகிறோம் என நினைத்து மதரீதியான பிளவுகளை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். மறந்து விடாதீர்கள். புpரபாகரன் ஒரு இந்து மதவாதி. மதமாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்திருப்பார் என எண்ண சாத்தியமில்லை.

வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்ற பொருளில் தொடங்கிவிட்டு பாரம்பரிய பிரதேசம் சம்மந்தமாக அரசியல் பேசுவது நல்லதல்ல. அதை அங்கு இருக்கும் மக்களின் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வரட்டும். இதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன். மேலும் இந்த விடயம் எனக்கு உங்கள் எண்ண ஓட்டத்தின் மேல் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் பரப்பளவில் (65610கி.மீ) வடக்கு (8884 கி.மீ) கிழக்கு (99996 கி.மீ) மாகாணங்கள் 28 வீதமானவை. 2001 ல் மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழ் முஸ்லிம் மக்களின் தொகை 20 வீதம். போரினால் ஏற்படுத்தப்பட்ட இடப்பெயர்வுகளை கணக்கில் எடுக்க அதிகம் என்பதே உண்மையான விடயம். ஏனெனில் இன்றைய சூழலில் வன்னியின் மக்கள் தொகை என்ன? எனவே சிங்கள குடியேற்றத்திற்கான வேலை தொடங்கி விடுவதா? தயவு செய்து நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் என பின்னூட்டம் விட தொடங்க வேண்டாம். பாவம் அவர்கள். அரசு அவர்களை தனது அரசியலுக்கு பாவித்து கொள்ளுகின்றது. இக் குடியேற்றவாதிகள் மேல் புலிகள் செய்த கொடூரங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. முக்கியமாக சிறுபான்மை இனங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். பெரும்பான்மை மக்கள் இதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்ரேலியாவில் அங்குள்ள பழங்குடியினருக்கு சில குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது போல் சிறுபான்மையினருக்கு இவ்விடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

Tilko_Hotelஇனி முக்கியமான விடயத்திற்கு வருவோம். முதலீடடிற்கும் மேற் குறிப்பிட்ட உதவிகளுக்கும் உள்ள வேறுபாடுகள். லாபம் கருதிய நோக்கில் செய்யப்படும் முதலீடுகளை ஏதோ ‘மக்கள் சேவை” என்ற மட்டத்தில் கொண்டு செல்வது நல்லதல்ல. ரில்கோ, ரைம்ஸ் ரவல் போன்ற புலிவாதிகள் அடிப்படையில் வியாபாரிகள். இந்த வியாபாரிகளுக்கு வரிச்சலுகை, குறைந்த விலையில் இட ஒதுக்கீடு அல்லது இலவச நில ஒதுக்கீடு இத்தியாதி……….! இலங்கை என்ற நாட்டின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் எங்களால் இதை ஏற்க முடியாது.  இங்கு சுப்பர்மாக்கெற்றிலும், பேக்கரிகளிலும் ,ஓட்டல்களிலும், பெற்;றோல் நிலையங்களிலும் வேலை செய்யும் சாமானிய தமிழர்கள் அவர்கள் புலி ஆதரவாளர்களாயினும் புலி எதிர்ப்பாளராயினும் தமது குடும்பங்களுக்கும், சொந்தங்களுக்கும் பணத்தை அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். ஆனால் உங்களைப் போன்று கணக்கு வழக்கில்லாமல் பணத்தை சேர்த்த நபர்கள் யதார்த்தம் என்ற பெயரில் அரசிற்கு மாத்திரம் வாக்கு போடுங்கள் இல்லை என்றால் அரசு கோபம் கொண்டு விடும் என கூறுவது …..! இது போன்ற ஜனநாயக மறுப்பை மக்கள் மேலும் மேலும் தாங்க மாட்டார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய அரசுடன் இணைந்து வேலை செய்வதை ஒருவரும் குறை கூறவில்லை. மறுதலையாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மந்திரி பதவிகளுக்காக சிக்கலான பிரச்சனைகளில் தான்தோன்றி தனமாக பேசுவது, எழுதுவது தான் பிழையானது. பொன்சேகாவை ஆதரிப்பது என்பது கூட ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ விரும்புகிறார்கள் என்பதேயாகும். அதை விடுத்து அவருக்கு வாக்களித்தது சிங்கள பெரும்பான்மை இனத்தை மேலும் கோபத்திற்கு உள்ளாக்குவதாக கூறுவதெல்லாம்………

 இங்கு கொன்ஸ்ரன்ரைன் இடது சாரிகளை போகின்ற போக்கில் திட்டி விட்டு செல்லுகின்றார். தேசம் ஆசிரியர் குழுவும் ஏதோ ஒரு திட்ட அடிப்படையிலேயே செய்திகளை வெளியிடுவதாக நினைக்கின்றேன். ஏனெனில் முக்கியம் வாய்ந்த பல செய்திகளை வேண்டுமென்றே இவர்கள் தவிர்த்து விட்டனர். இதுபற்றி சோதியுடன் பேசினேன். அவர் இலங்கையில் இருந்துதான் பல விடயங்கள் போடுகின்றார்கள் என ஏதோ கூறினார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கி போர்ட் மாக்ஸிஸ்டுக்களில் அநேகமானோர் மக்களை விற்பதில்லை. அவர்களின் தந்திரோபாய முறையில் பிழைகள் இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி என்று பேசி சுரண்ட நினைப்பவர்களை விட நல்ல உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் கூறும் பாடசாலை பிரச்சனையில் இருந்து கோவில் பிரச்சனை வரை போர் நடைபெற்ற நாளில் இருந்து ஏன் அதற்கு முன்பிருந்து இருக்கிறது. இப்போது நீங்கள் பேசுபவை எழுதுபவை என்பவற்றைக் கொண்டு பார்த்தால்; உங்களுக்கும் அங்குள்ள மக்களுக்குமான தொடர்பு கடந்த காலங்களில் இல்லை எனபதும்; நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு மிக வசதியாக நிலைத்து விட்டீர்கள் என்பதும் புரியக் கூடியதாக உள்ளது. இந்த கஸ்ரங்களுக்கான உதவிகளை நீங்கள் அப்போதே செய்திருக்க முடியும். ஏனெனில் 95 லிருந்து யாழ்ப்பாணம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அப்போதும் மக்கள் இதே கஸ்டங்களுடன்தான் இருந்தார்கள்.

நாடு நிலையான சமாதானத்தை எட்டி சுமுகமாக இயங்கும் போதே இப்பிரச்சனைகள் களைந்து எறியப்படும். ஆனால் இங்கு இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள், தனிப்பட்டவர்கள் உதவுகின்றார்கள். உதவ வேண்டும். ஆனால் இந்த சங்கங்களை முன்பு கேலி செய்த நீங்கள் இப்போது உதவி செய்யச் சொல்வதை என்னவென்று சொல்வது?

மொத்தத்தில் தரப்படுத்தலுக்கு காரரணமாக இந்த மேட்டுக்குடிகளும், ஸ்ரேசன் மாஸ்டர், போஸ்ற்மாஸ்ரர் போன்றோரின் குடிகளும் வெளிநாடுகளில் புலியை ஆதரித்து விட்டு அல்லது எதிர்த்து விட்டு இப்போது ஒன்றாக இலங்கை போய் அபிவிருத்தி, யதார்த்தம் என்ற பெயரில் மீண்டும் அவ் ஏழை எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்க தொடங்குகிறார்கள். நண்பர்களே! இவர்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்கள் உறவுகளுக்கு தொடர்ந்து உதவுங்கள். உதவிக் கொண்டே இருங்கள். எமது இந்த வாழ்க்கை ஒரு லட்சம் பிணங்களின் மேல் கட்டப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் தரப்படுத்தல் இல்லாமல் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.