2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

2020 இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே” – பழனி திகாம்பரம் 

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வானொலி நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை நாட் சம்பளமா? என்பது பற்றி விபரிக்கப்படவில்லை.

இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, இதுவொரு ஏமாற்று வித்தை. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்கமாட்டார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

”சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும்” – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து , கொரோனா பரவலைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் கூடினால்  அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளைக்‍ கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நண்பர்கள், குடும்ப சந்திப்புகளில் 6 பேருக்கு மேல் கூடினால் தொடக்கத்தில் 9 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அடுத்தடுத்து இந்த விதிகளை மீறினால் 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், அலுவலகங்கள், கொரோனா விழிப்புணர்வுடன் நடக்கும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!!

மழை வரும் வராமலும் இருக்கும்!
சம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்!!
கோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்!!!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.

த சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.

த சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

அணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா?

மேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.

விருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால் தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.

வெளியானது  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விபரம் ! –

தேர்தல் முடிவடைந்தது தொடக்கம்  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் யார் ..? என்பது தொடர்பான இழுபறி தொடர்ந்து வந்த நிலையில்   ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாரிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுப்பதவிகளில் ராஜபக்க்ஷக்களே ஆதிக்கம் !

நேற்றை தினம் இலங்கையினுடைய புதிய அமைச்சரவை கண்டி மகுல்மடுவவில் பதவியேற்றுக்கொண்டது.  இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளமையை கண்டித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராஜபக்ஷ குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப்பதவிகளின் பிபரங்கள் வருமாறு ..,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம், மத விவகாரம், கலாசாரம், நகர அபிவிருத்தி அமைச்சர்

சமல் ராஜபக்ஷ – நீர்பாசன அமைச்சர் மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சஷிந்திர ராஜபக்ஷ – நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரியின் புதல்வர் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர்களை தவிர ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி !

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த முடிவை எடுக்கும் போது கூட்டமைப்பினுடைய தலைவர் தங்களுடன் கலந்துரையாடவில்லை என நேற்றையதினம்  மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதீக்கப்படுகின்றனர்.

அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்திலாவது கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

சம்பந்தன் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன விடையத்திலே இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சேனதிராஜாவிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. குறித்த தேசிய பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்மந்தன் ஒரு வயது முதிர்ந்தவர்.அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும்.

எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் அங்கு குறிப்பிட்டார்.

2020 பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்டோரும் நிராகரிக்கப்பட்டோரும் !

இலங்கையில்  நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து ,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – அங்கஜன் ராமநாதன்

இலங்கை தமிழரசு கட்சி – சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – சீ.வி. விக்னேஸ்வரன்.

திருகோணமலை.

இலங்கை தமிழரசு கட்சி – இரா.சம்பந்தன்.

வன்னி

இலங்கை தமிழரசு கட்சி – சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி –  குலசிங்கம் திலீபன்

மட்டக்களப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

இலங்கை தமிழரசு கட்சி – சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எஸ். வியாழேந்திரன்,

கொழும்பு

ஐக்கிய மக்கள் சக்தி – மனோ கணேசன்.

கண்டி

ஐக்கிய மக்கள் சக்தி – வேலு குமார்

நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி – பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.

பதுளை

ஐக்கிய மக்கள் சக்தி – வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார்

ஆகியோர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இதே நேரத்தில் முன்னைய நாடாளுமன்றங்களில் இருந்த அதே நேரம் புதிய நாடாளுமன்றங்களில்  ஆசனங்களை இழந்த தமிழ் வேட்பாளர்களுடைய பெயர் விபரங்கள் வருமாறு …

01. யாழ். தேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • தலைவர் – மாவை சேனாதிராசா
  • ஈஸ்வரபாதம் சரவணபவன்

ஐக்கிய தேசியக் கட்சி

  • விஜயகலா மகேஷ்வரன்

02. வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா
  • எஸ். சிவமோகன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

  • சிவசக்தி ஆனந்தன்

03. திகாமடுல்ல மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • கவிந்தன் கோடீஸ்வரன்

ஐக்கிய மக்கள் சக்தி (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

  • மொஹமட் நசீர்
  • எம்.ஐ.எம்.மன்சூர்

தேசிய காங்கிரஸ்

  • எம்.மொஹமட் இஸ்மாயில்

அகில இலங்கை தமிழர் மகா சபை

  • விநாயகமூர்த்தி முரளிதரன்

04. மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • ஞானமுத்து ஶ்ரீநேசன்
  • சீனித்தம்பி யோகோஸ்வரன்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

  • அலி ஸாஹிர் மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

  • அப்துல்லாஹ் மஹ்ரூப்

இவர்களே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளின் உறுப்பினர்களாகவுள்ளனர்.

 

வெளியானது பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம் – முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன்ராகவனும் உள்ளடக்கம்.ன்

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சி சார்பில் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று கையளித்துள்ளது. இந்த பெயர்ப்பட்டியலில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன்ராகவன் அவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம் வருமாறு,

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

சாகர காரியவசம்

அஜித் நிவாட் கப்ரால்

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

மஞ்சுள திஸாநாயக்க

பேராசிரியர் ரஞ்சித் பண்டார

பேராசிரியர் சரித ஹேரத்

கெவிந்து குமாரதுங்க

மொஹமட் முசாமில்

பேராசிரியர் திஸ்ஸ விதாரன

பொறியியலாளர் யாமினி குணவர்தன

கலாநிதி சுரேன் ராகவன்

டிரான் அல்விஸ்

வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல

ஜயந்த கெடுகொட

மார்ஜன் பலீல்

ஆகியோரே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரங்கள்.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759

இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21, 422

மட்டக்களப்பின் விருப்புவாக்கு விபரங்கள் – பிள்ளையான் முதலிடத்தில் !

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விருப்பு வாக்கு விபரங்களினடிப்படையில் சிறையிலிருந்தவாறே பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி

சாணக்யா ராஹுல் – 33,332

கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன

சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599