![]()
._._._._._.
தேசம்நெற் கருத்தாளர்களில் ஒருவரான நாதன் இக்கட்டுரையைக் கருத்துக் களம் பகுதியில் பதிவு செய்திருந்தார். இன்றைய காலத்தேவையின் அடிப்படையில் நாதனின் கருத்துக்கள் தொடர்பான விவாதத்திற்குக் களம் கொடுக்க வேண்டிய அவசியமும் இருப்பதால் கருத்துக் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கருத்தை பிரதான கட்டுரையாக பிரசுரிக்கிறோம். இக்கட்டுரை ஆசிரியரை ‘நாதன்’ என்ற பெயரிலேயே தேசம்நெற் அறிந்துள்ளது. நாம் அறிந்தவரை இக்கட்டுரை வேறு இணையத் தளங்களில் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு பிரசுரமாகி இருந்தால் மீள்பிரசுரத்திற்கு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
._._._._._.
மனித அவலங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கையில் எதனை தலையங்கமாக வைத்து தொடங்குவது எனத் தெரியிவில்லை. பலகொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்காலத்தில் இராணுவ நடவடிக்ககையின் காலத்திலும் பின்னரான காலத்திலும் கவனிக்கபட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
சிறிலங்கா அரசு…
இன்று மூர்க்கத்தனமாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசம் மீதான தாக்குதல். அரசே அறிவித்திருக்கின்றது சில நூற்றுக்கணக்கான போராளிகள் தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து போராடுவதாக அப்படியாயின் அரசின் இலக்கானது எவ்வகை விலை கொடுத்தாவது இடத்தைக் கைப்பற்றுவதாகும். இதன்காரணமாக மனிதாபிமானம் என்பதற்கே இடமில்லாதவாறு அரச படைகள் செய்ற்படுகின்றன.
அரசிடம் வந்து சரணடைபவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு
வடிகட்டி கைது செய்யப்படல்
காயப்பட்டவர்களையும் உறவினரையும் பிரித்து வைத்தல்
காயப்பட்டவர்களை கவனிப்பதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை
காணாமல் போதல்
குண்டு போட்டுக் கொல்லப்படுபவர்கள் அவர்கள் தங்கியிருந்து பதுங்குமுழிகளே அவர்களின் புதைகுழிகளாக மாறியிருக்கின்ற நிலமை. இதனால் தமது உறவுகளின் முகத்தைக் இறுதியாகக் கூட பார்க்க முடியாத அலவம். என அவலங்கள் தொடர்கின்றன. இவைகள் வெறும் ஊடகச் செய்திகள் அல்ல மாறாக எமது உறவுகளிடம் இருந்து நேரிடையாகப் பெறப்பட்ட கள தகவல்களாகும். பாசீட்டுக்களுக்குள்ளாக உளவியல் நிலையினை சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது.
இன்றையப் பொழுதில் அனைவரும் புலிகள் அழிய வேண்டும் எனக் கொள்கின்றனர். ஆனால் அழியப்படுவது அடிமட்டப் போராளிகளும் மக்களுமாவர். புலிகளின் தலைமையானது ஆயுதங்களையும் தமது குடும்பத்தையும் தம்மையும் பல போராளிகள் புடைசூழ பாதுகாப்பாக வாழ்கின்றனர். இதனை அறியாதவர்களாக அனைவரும் நடந்து கொள்கின்றனர்.
யுத்த நிறுத்தத்தை கொண்டுவரமாட்டேன் என்று கூறுகின்ற பாசீச அரச தலைமை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடியவர்களும் வெளியே வர முடியாது இருக்கும் மக்களுக்கும் பற்பல காரணங்கள் இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலே புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விட்டார்கள். இதனால் அனைவரும் அழிக்கப்படுவதற்கு துணை போக வேண்டுமா? அப்படி அரசிடம் சரணடைந்தால் அவர்களை புனருத்தாரனம் செய்யும் வகையில் வெளிப்படையாக ஒரு நிர்வாக அலகு இருக்கின்றதா? சுதந்திரமானதும் ஜனநாயக விழுமியங்களுக்கும் அமைய கட்டமைக்கப்பட்ட நிர்வாக அலகு இல்லாது வந்து சரணடையுங்கள் எனக் கூறுவதில் எவ்விதமான நேர்மையாக செயல்முறை அங்கு இல்லை. இது ஓரு பாசீசக் கட்டமைப்பு சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்டிருக்காது. சுதந்திரமான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற ஒரு அலகை உருவாக்கப் கோருவது அவசியமாகும்.
புலியெதிர்ப்பாளர்கள்…
நேரிடையாகவே அரசுடன் சேர்ந்தியங்கும் டக்கிளஸ், கருணா, பிள்ளையான், சிறிரொலோ எனவும் – புளொட், இபிஆர்எல்எவ நாபா, ஈரோஸ், சங்கரி எனவும் இவர்களின் மூலம் தமிழ் மக்களுக்காக உரிமையை பெற்றுக் கொடுக்க முடியுமா? இன்று புலியெதிர்ப்பாளர்கள் பக்கத்தை எடுத்துக் கொண்டால் கிழக்கின் விடிவெள்ளிகள் தங்களுக்கிடையே ஆப்பு வைத்து யார் யாரை முதலில் போடுவது எனப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கருணா தேசிய நீரோட்டத்தில் இணையப் போகின்றாராம். ஏனெனில் அவரை தலைவர் என ஏற்றுக் கொள்ளவில்லையாம். பிள்ளையானோ 13 சட்டதிருத்தத்திற்கு அமைய அதிகாரம் இல்லை எனக்கூறுகின்றார்.
இதில் இவர்களின் மூத்த அண்ணா டக்கிளஸ் வடக்கிலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். இதில் சங்கரிக்கு பெரிய இடைஞ்சலாக டக்கிளஸ் இருக்கின்றார். வடக்கினதும் கிழக்கினதும் நிர்வாகிகள் தமிழ் மக்களுக்கு புலிகளே பிரச்சனை என்பதை மறக்காது அரசவிசுவாசமாக நடந்து கொள்கின்றனர். மற்றைய ஜ.த.தே.கூட்டமைப்பினர் சங்கரியை வைத்துக் கொண்டு ஆங்காங்கே தமது குரலை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலையானது அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதாகும்.
புலம்பெயர் மக்கள்…
புலம்பெயர் நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது என்பது இலகுவான விடயம் அல்ல. மக்களைத் திரட்டுவது என்பது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கூப்பிட்டு தமது ஊர்வலங்களில் அல்லது கூட்டங்களின் பேசவைப்பது என மாத்திரம் என்று தான் விளங்கிக் கொள்கின்றனர். இதன் காரணத்தினால் அரசியல் கட்சி உறுப்பினர்களை தமது கூட்டங்களில் பேசவைப்பதில் திருப்பி அடைகின்றனர்.
மக்களின் ஆதரவிற்கு சிறந்த உதாரணமாக பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் நடைபெறும் போராட்டத்தையே உதாரணமாக கொள்ள முடியும். பலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவிற்கு இணையாக வேண்டாம், ஒரு சிறிய அளவில் தன்னும் அந்தந்த நாட்டு மக்கள் குரல்கொடுக்க ஏன் முன்வரவில்லை என்பதை புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குத் தாமே கேள்வி கேட்கவேண்டும். ஏன் அவ்வாறு நடைபெறவில்லை என நாம் காரணம் கூறுகின்ற போது அவை புலயெதிர்ப்பாளர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள் என்ற கருத்தியலுக்குள் கொண்டுபோய் விடும்.
புலிகள் மக்களை அனாதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என புலிகளின் விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இன்று புலிகளைப் பொறுத்தவரையில் மக்களுடைய இழப்புக் மூலமாக தமது குறிக்கோளை அடைய முடியும் என தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். அதாவது இழப்புக்கள் மூலமாக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். புலம்பெயர் மக்கள் போராட்டம் மற்றும் தமிழக மக்களிடையே ஏற்றபட்ட எழுச்சி மூலமாக தமக்கு சாதகமான நிலை உருவாகும் என நம்புகின்றனர். மக்களின் இழப்பைக் கொண்டு பணம் சேகரிக்க முடியும்.
புலம்பெயர்ந்த மக்களிடையே இழப்பினால் ஏற்படும் அனுதாப அலையென்பது கசப்பான நினைவுகளை மறப்போம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தமது போராட்ட முறையில் ஏற்பட்ட தவறுகளுக்கு விமர்சனம் செய்ய இவர்களால் முடிவில்லை. இழப்பினால் பெறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் குறுகிய காலத்தில் தமது தேவையை அடைந்து விடலாம் என்பதே புலிகள் மாறாத யுக்தியாக இருக்கின்றது.
ஆனால் இன்றைய நிலையில் புலிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பது என்பது முடியாத நிலையாகும். அப்படி அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே எதிர்பாராத பகைமுரண்பாடு ஏற்பட்டால் தவிர வேறு சந்தர்ப்பமே இல்லை.
மக்களை அணிதிரட்டவதானது புலம்பெயர் மக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தவருடன் ஒன்றிணைவதாககும். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களை திரட்டுவது என்பது 1984களில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பி மாத்திரமே அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பெரும் கட்சிகளை மையப்படுத்தியே அரசியல் வேலைகள் இடம்பெற்றன. அவ்வாறில்லாது. உழைக்கும் மக்களை அடிஅத்திவாராமாக கொண்டு ஆதரவுத்தளமானது உருவாக்கப்பட வேண்டும்.
சிவாஜிலிங்கம் கூறுவது போல இந்துக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காக சிறுபான்மையினரின் உரிமையை ஒடுக்கும் பா.ஜ.க என்ற இந்துத்துவவாத பாசீசக் கட்சியை நோக்கி செல்ல முடியாது. மற்றையது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையாது சிவாஜிலிங்கத்தின் பேட்டியை அவதானித்த பின்னர் அவர்களிடையே ஒற்றுமையான கருத்து இல்லை என்பதை அறிய முடிகின்றது. இவர்கள் ஒன்றாகச் செயற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார். சிவாஜிலிங்கத்தின் கருத்தென்பது இன்றும் சுயாதீனமாக இயங்கவல்ல கருத்துக்கள் அவரிடம் இல்லை. தற்காலச் சூழலை மையமாக் கொண்டு ஒரு போராட்டத்தை செயற்படுத்த முடியாத நிலையைத் தான் சிவாஜிலிங்கத்தின் பேட்டியின் மூலம் அறிய முடிகின்றது. இன்றைக்கு மக்கள் புலி என்ற எல்லைக்குள் மாத்திரம் நின்று சிந்திக்கின்றார்களோ அவ்வாறே த.தே.கூட்டமைப்பினர் கருத்து ரீதியாக வளராது மலடாகிப் போய்யுள்ளனர்.
தீக்குளிப்பது முதலான அரசியல் நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் மக்களை புலிப்பாசீசம் தமக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றனர். ஆழமான அரசியல் உள்ளடக்கம் இல்லாத போராட்ட வடிவங்களும் பணம் திரட்டுவதை மையமாகக் கொண்ட கோரிக்கைகளையுமே புலிகள் திரைமறைவில் செயற்படுகின்றனர்.
இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை தான் என்ன?
புலிகளின் ஆதரவு தொலைக்காட்சிகள் தற்கொலையை தூண்டுவதிலும் இனவாதத்தை விதைப்பதிலும் பணம் பிடுங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியாது. இன்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் பல பிரிவுகளாகவும் உதிரிகளாகவும் பிரிந்திருக்கின்றனர். இவர்கள் வெறும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் இன்றும் இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்துவிட முடியாது. இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு தகுத்தாற் போன்றதான அரசியல் செயல் வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறுபோல இந்தக்க காலத்திலும் விடக் கூடாது.
பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும். பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும்.
எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் சுயநிர்ணயஉரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்லமுடியும். அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப் புள்ளபெற்றதாக இருகக்கூடாது. சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.