23

23

புலிகளின் வேண்டுகோள் இராணுவப் பேச்சாளரால் நிராகரிப்பு

uthaya_nanayakara_.jpgசர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரரென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் விடுத்த வேண்டுகோளை இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார்.

நிபந்தனையுடன் கூடிய யுத்த நிறுத்த அறிவிப்புத் தொடர்பான வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார, தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித நிபந்தனையுமின்றி ஆயுதங்களை முதலில் கீழே வைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் விமானியின் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன – பிரேத பரிசோதனையில் தெரிவிப்பு

colombo-04.jpgகடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்கா குரன வெலப்பனப் பகுதியில் வீழ்ந்த விடுதலைப்புலிகளின் உடல் விமானத்தின் விமானியின் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரி டாக்டர் சன்ன பெரேரா பிரேத பரிசோதனை அறிக்கையை நீர்கொழும்பு நீதிவானிடம் சமர்ப்பித்திருந்தார். விமானியின் நெஞ்சில் சன்னம் துளைத்துக்கொண்டு சென்றதும் இருதயத்தில் காற்று நிரம்பியிருந்தும் மரணத்துக்குக் காரணம்.

இரு சன்னங்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்டன. அத்துடன் பல துப்பாக்கிச் சூட்டு காயங்களும் காணப்பட்டன. உடலின் மூட்டுக்கள் எக்ஸ் கதிர் படம் பிடிக்கப்பட்டன. பற்களும் உடலின் சில பகுதிகளும் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சடலம் பலத்த பாதுகாப்புடன் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் தொடர்பாக சர்வதேச பொலிஸாரின் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் சட்டவைத்திய அதிகாரி நீதிவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இதுவரை 35,819 பேர் வருகை

uthaya_nanayakara_.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு 35,819 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புலிகள் புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றருக்குள் முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; “வன்னி, முல்லைத்தீவு பகுதிகளை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தற்போது புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், படையணிகள் தொடர்ந்து மும்முனைகளால் முன்னேறி வருகின்றன. 53 ஆவது படையணி தெற்குப்பக்கமாகவும் 4 ஆவது விசேட படையணியும் 45 ஆவது படையணியும் ஏ 35 வீதியூடாகவும் 58 ஆவது படையணி கிழக்குப் பக்கமாகவும் புதுக்குடியிருப்பு மையப்பகுதியை நோக்கி படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து 35,819 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 3,848 பேரே வந்தனர். ஆனால் பெப்ரவரி மாதத்தில் இதுவரையில் 31,971 பேர் வந்துள்ளனர். இவர்களனைவரும் மெனிக் பார்ம் மற்றும் விஷேட இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டு அவசியமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது’ எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து மக்களை வெளியேற்ற இந்தியா உதவுமாயின் அவர்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இந்தியா உதவியளிக்குமாயின் அம்மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதற்கும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு உதவியளிக்கத் தயாரென இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பி.பி.சி. செய்திச் சேவைக்கு வெளியிடும் போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இதன் போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) மற்றும் ஐ.நா. முகவரமைப்புகளின் உதவியுடன் இந்தியா அவ்வாறு செயற்பட முன்வருமாயின் அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம். நிச்சயமாக அதற்கு எமது ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவே இருப்போம். ஆனால், இலங்கை அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, மக்கள் தங்களது கிராமங்களிலிருந்து வெளியேறி வந்து வேறு இடங்களில் நீண்ட காலத்துக்கு வாழ முடியாது. மிகவும் குறைந்த காலப்பகுதிக்குள் மக்கள் மீண்டும் அவர்களது கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.

பாதுகாப்பை காரணம் காட்டி தமிழ் மக்கள் சரித்தர ரீதியாக வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து அம் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை வேறு இடங்களில் வாழவைக்க இந்த அரசாங்கத்துக்கு இருக்கும் நோக்கத்தை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு போனால் அரசாங்கம் தங்களை மீண்டும் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியமர்வதற்கு இடமளிக்காது என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே, மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சந்தேகமே அவர்கள் வெளியேறி வருவதில் முக்கியமான தடையாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, இந்தியா இவ்விதமான முயற்சியில் ஈடுபட்டால் இம் மக்களை முழுமையாக அவர்களது சொந்த வதிவிடங்களில், கிராமங்களில் மீள குடியேற்றுவதற்கும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் புத்தளம் மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்கள்

sri-lanka-election-01.jpgவடமேல் மாகாண சபைத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கிங்ஸ்லி பெர்னாண்டோ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் கிடைத்துள்ள வாக்குகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி ஐந்து ஆசனங்களையும் பெற்றுள்ளன.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ;

1. அருன்திக பெர்னாண்டோ 45,837
2. அன்டனி விக்டர் பெரேரா 42,944
3. இந்திராணி தசநாயக்க 33,487
4. அசோக வடிகமங்காவ 32,277
5. பியசிறி ராமநாயக்க 30,637
6. சனத் நிசாந்த பெரேரா 29,416
7. சுமல் திசேரா 26,739
8. ஜனக சொய்சா 24,153
9. குமார ராஜபக்ச 18,812
10.மல்ராஜ் பீரிஸ் 17,756
11.மொஹமட் தாஹிர் 14,733

ஐக்கிய தேசியக் கட்சி:

1. சாந்த சிசிர குமார 17,876
2. சுகத் சந்திர சேகர 14,117
3. கிங்ஸ்லி லால் பெர்னாண்டோ 14085
4. டொன் ஹெக்டர் 13,435
5. ஆப்தீன் யஹ்யா 12,724

புதிய விசா தடைகள்; விரைவில் அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgபிரிட்டனில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் வந்து குடியேறுபவர்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.  வேலை வாய்ப்புகளில் உள் நாட்டவர்களுக்கு முதலிடம் வழங்கும் பொருட்டே தொழில்சார் நிமிர்த்தமான குடியேற்றத்துக்கான இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படவிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேறுதல் முறையின் முதலாவது வரிசைப் படுத்தல் பகுதியின் கீழ் பிரிட்டனில் குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் உயர்த்தப்படவிருக்கின்றன.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் தற்போது நடைமுறையிலிருக்கும் தகைமை மற்றும் குறைந்தப்பட்ச சம்பள மட்டங்களாக இருந்த பட்டதாரி கல்வி கற்பவர் மற்றும் 17 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் புதிய விதிமுறைகளின் பிரகாரம் முழுநிலை பட்டதாரி மற்றும் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸாக உயர்த்தப்படவிருக்கிறது.

பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜெக்கியூ ஸ்மித் வெகு விரைவில் இந்த புதிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார். அடுத்த வருடம் முதல் அனைத்து மட்டங்களிலுமான குடியேற்றங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கத்திலான திட்டத்தின் கீழேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிட்டனுக்கு வேலைக்கு வருபவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டியது முக்கியமென நாம் எப்போதுமே கூறி வந்திருக்கிறோம். ஐரோப்பாவிற்கு வெளியிலிருந்து தகைமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று பிரிட்டன் வருவதை நாம் ஏற்கனவே நிறுத்தியிருந்தோம். எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார வீழ்ச்சி பிரிட்டன் தொழிலாளர்களை பாதிப்பதால், நாம் எமது தெரிவு நடவடிக்கையை எப்படி மேலும் இறுக்கப்படுத்துவது என்பது பற்றி செயற்பட்டு வருகிறோம்’ என்று பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஸ்மித் சண்டே ரெலிகிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

புதுக்குடியிருப்புப் பகுதியில் 2 நாள்களாக கடும் சண்டை

SL_Army_in_Killinochieமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புக்கு மேற்குப் பகுதியிலும் அம்பலவன்பொக் கணைக்குக் கிழக்குப் பகுதியிலும் நேற்று முன்தினம் தொடக்கம் இராணுவத்தினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சண்டை இடம்பெற்று வருகிறது எனப் படைத்தரப்பு நேற்றுச் செய்தி வெளியிட்டது. இச்சமர்களில் நேற்று முன்தினம் வரை 36 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் 11 சடலங்களைத் தாங்கள் மீட்டனர் என்று இராணுவத்தினர் நேற்றுக் கூறினர்.

புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சண்டையில் விடுதலைப் புலிகள் 20 பேர் உயிரிழந்தனர். 18 பேர்வரை காயமடைந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளில் இருவரின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்மைப்புத் தளம் ஒன்றையும், ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றையும் இதேவேளை 57 படையணியால் விசுவமடுவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கிளைமோர்க்குண்டுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆவது டிவிசனின் படையணி கைப்பற்றியது என்றும்  அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதேசமயம், அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சண்டையில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

பிந்திய செய்தி: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் -ஏகாந்தி

ar-rhman.jpgஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 81ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் வைபவமாகும். இதுகாலவரை இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு திரைப்படக் கலைஞருக்கும் இந்த ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்த அடிப்படையில் இந்தியரைச் சேர்ந்த ஒருவர் முதல் ஆஸ்கர் விருது வென்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

ஸ்லம்டாக் மில்லினர்’திரைப்படம் 10 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் இதுவரை இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொததம் 8 விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறந்த திரைக்கதை தழுவல் (Best Adapted Screenplay) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லம்டாக் பெற்றுள்ள 8 ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் – ஏ.ஆர்.ரஹ்மான்
“ஜெய் ஹோ…” பாடல் – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

”எல்லாப் புகழும் இறைவனுக்கே”: ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது. இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது (‘ஜெய் ஹோ’) வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள். எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

டாகுமெண்டரி- இந்திய சிறுமியின் கதைக்கு ஆஸ்கர்:

அதே போல இந்தியாவைச் சேர்ந்த பிங்கு சோங்கர் என்ற 8 வயது சிறுமி குறித்த குறும்படமான ஸ்மைல் பிங்கி (Smile Pinki) படத்துக்கு இநத ஆண்டுக்கான சிறந்த டாகுமெண்டரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மிர்ஸாபூரைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் உதடு பிளந்த தோற்த்தால் (cleft lip) சமூகத்தால் ஒதுக்கப்படுகிறாள். அந்தச் சிறுமி படும்பாடு தான் இந்தப் படம். 40 நிமிடம் ஓடும் இந்தப் படம் இந்தி மற்றும் போஜ்பூரி மொழிகளில் தயாரிக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் மேகன் மைலன்.

ஏ.ஆர்.ரஹ்மான் சில குறிப்புகள்

இன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைற்கல்லை ஏற்படுத்தியுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சில குறிப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர் அவர்களது புதல்வனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார். இவரின் பெயர் ஏ.எஸ்.திலீப் குமார். 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் இவரின் குடும்பம் பல நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு தன்சுயவிருப்பின் பேரில் இஸ்லாம் சமயத்துக்கு மாறினார். தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக தன்னை வளர்த்துக் கொண்டார் ரஹ்மான். இவரது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார். கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார். எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார். இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக 1992ம் ஆண்டு அமைந்தது. இவ்வாண்டில் தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை ரஹ்மான் ஆரம்பித்தார். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் ஆரம்பித்தார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது. இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் ஆரம்பித்த பின் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று மணிரத்தினம் ரஹ்மனைக் கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பை ரஹ்மானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற நிலையை ரஹ்மான் ஏற்படுத்திக் கொண்டார்.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார். இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான் மாறினார். அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான். குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறியிருந்தார் என்றால் பிழையாகாது.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் தந்துள்ளார் ரஹ்மான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்று இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான். 2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான். இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார். கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான். 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அலாதிப் பிரியம். ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.

ரஹ்மானின் முதல் படங்கள்

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது. இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா. மலையாளத்தில் முதல் படம் யோதா. தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ். ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்

ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது

தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)—–

இங்கினியாகலை மக்கள் மீது கொடூரம்: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக நேற்று உயர்வு

ranjith-gunasekara.jpgஅம்பாறை இங்கினியாகலையில் புலிகளின் ஆயுதக் குழுக்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களுள் இரண்டு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இங்கினியாகலையிலிருந்து 35 கிலோமீற்றர் தொலை விலுள்ள கிரிமிட்டியாவ என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 தொடக்கம் 5 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

கிராமத்துக்குள் புகுந்த புலி ஆயுதக்குழு கண் மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மற்றும் வாள் வீச்சுக்களை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அன்றையதினம் மேலதி கமாக ஆறுபேர் உயிரிழந்தனர். நேற்றுடன் இச்சம்பவத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து ள்ளது. உயிரிழந்துள்ள இரண்டு சிறுவர்களுள் இரண்டு வயதுக் குழந்தையும் எட்டு வயது சிறுவனும் அடங்குவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக அந்தப் படைக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார். அந்தப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து கூட்டாக தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தப்பி வந்த கிராமவாசிகளின் தகவல்களின் படி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அங்கு வந்த ஆயுதம் தரித்த நபர்கள் குடிசைகளுக்கு தீ வைத்து பின்னர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்ததாக அறிய வருகின்றது. சம்பவத்தையடுத்து கிராமவாசிகள் தற்போது இடம் பெயர்ந்து அங்குள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர்

இதேவேளை இந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மன்மோகன் சிங் பூரண குணம்: பணிக்கு திரும்ப டாக்டர்கள் அனுமதி

india-man-mogan.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த ஒருமாதமாக ஓய்வில் இருந்து வரும்  பிரதமர் மன்மோகன்சிங் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், பணிக்கு  அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த மாதம்,  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு வாரமும் அதனைத் தொடர்ந்து வீட்டிலும் அவர் ஓய்வு பெற்று வந்தார். டாக்டர்கள் குழு ஒன்று பிரதமர் வீட்டில் தங்கி அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மருத்துவ ஆலோசனை அடிப்படையில் ஒரு சில உடற்பயிற்சிகளை மன்மோகன் சிங் செய்துவந்தார்.

மேலும் வீட்டில் இருந்தபடியே பைல்களையும் பார்க்க தொடங்கினார்.  இந்நிலையில் பிரதமரின் உடல்நிலை நன்கு தேறிவிட்டதாகவும், முழுநேர பணிக்கு திரும்ப  அவர் தயாராகி விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் விஜய் டி சில்வா  நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காயங்கள் அனைத்தும் முழுமையாக குணமடைய 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறுவை சிகிச்சை முடிந்து 4 வாரங்கள் முடிந்து விட்டன.

அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் தனது பணியை தொடங்கலாம் என்றார்.