இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த ஒருமாதமாக ஓய்வில் இருந்து வரும் பிரதமர் மன்மோகன்சிங் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், பணிக்கு அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த மாதம், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு வாரமும் அதனைத் தொடர்ந்து வீட்டிலும் அவர் ஓய்வு பெற்று வந்தார். டாக்டர்கள் குழு ஒன்று பிரதமர் வீட்டில் தங்கி அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மருத்துவ ஆலோசனை அடிப்படையில் ஒரு சில உடற்பயிற்சிகளை மன்மோகன் சிங் செய்துவந்தார்.
மேலும் வீட்டில் இருந்தபடியே பைல்களையும் பார்க்க தொடங்கினார். இந்நிலையில் பிரதமரின் உடல்நிலை நன்கு தேறிவிட்டதாகவும், முழுநேர பணிக்கு திரும்ப அவர் தயாராகி விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் விஜய் டி சில்வா நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காயங்கள் அனைத்தும் முழுமையாக குணமடைய 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறுவை சிகிச்சை முடிந்து 4 வாரங்கள் முடிந்து விட்டன.
அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் தனது பணியை தொடங்கலாம் என்றார்.