December

December

டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்த 2 லட்சம் சுற்றுலா பயணிகள் !

இலங்கையில் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 200,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்தில் வந்த வருகையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான மொத்த வருகைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார், இது ஜனவரி 2023 இல் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்காகும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் சுற்றுலாத் துறை மீட்சியடைந்துள்ளது.

 

சுற்றுலாத் துறையின் மீட்சியானது 2022 இல் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்த இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்த உதவியுள்ளது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எப்போது..? – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

அரசியலமைப்பின் பிரகாரம், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நாளை முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

 

அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

 

அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக தற்போது, முன் ஆயத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் நாளை முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

 

வழக்கமாக ஆண்டு தோறும் தேருநர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் பெப்வரி முதலாம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது.

 

எனினும், இந்த ஆண்டு தேர்தல் காலமாக இருப்பதனால் ஆணைக்குழுவானது அப்பணியை முற்கூட்டியே ஆரம்பித்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

விஷம் குடித்து மூன்று பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய் !

மாலம்பே, கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

உயிரிழந்த பெண் 35 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

உயிரிழந்த சிறுவர்களில் இருவர் 09 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

யுக்திய விசேட நடவடிக்கை – கைப்பற்றப்பட்ட 85கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

யுக்திய விசேட நடவடிக்கையின்போது 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (31) தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேற்கின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது..? – பெத்லகேம் பாதிரியார் முன்தார் ஐசாக் [Thesam thirai YouTube]

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில் , மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார் .

 

மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர் , பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் . டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது .

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம் . வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை . ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை . இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது .

இதன் தொடர்ச்சியான தேசம் திரை காணொளியை காண கீழை உள்ள YouTubeபக்கத்துக்கான Link ஐ Clickசெய்யுங்கள்..!

 

 

 

பொலிஸ் சுற்றிவளைப்புக்களில் பொதுமக்கள் எவரேனும் பாதிப்படைந்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடலாம் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் என்பன பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், அவற்றால் பொதுமக்கள் எவரேனும் பாதிப்படைந்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதியமைச்சினால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினாலும், அதன்விளைவாக ஏற்பட்ட வன்முறைகளாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது, நாட்டைப் பொறுப்பேற்று சீரான பாதையில் வழிடத்திச்செல்வதற்கு எவரும் முன்வரவில்லை. இருப்பினும் நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான அமைச்சுக்களைக்கொண்ட அமைச்சரவையை ஸ்தாபித்து பாரிய சவால்களை சிறந்த முறையில் வெற்றிகண்டோம். அதனூடாக பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரநிலைக்குக் கொண்டுவந்தோம்.

அடுத்ததாக நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்புக்கள் ஒன்றும் புதிதல்ல. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் நாடு மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்தே அண்மையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டோம்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் பொதுச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகளால் பொதுமக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடலாம். மாறாக எந்தவொரு தவறையும் செய்யாவிடின், பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கலாம். ஒட்டுமொத்த நாட்டையும் பீடித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார்.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன்.” – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவேண்டுமென நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இதுபற்றிய உங்களது கருத்து என்ன?’ என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எப்போதும்போல் இதிலும் அவரது கருத்து நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல. விடுதலைப்புலிகள் இருந்தபோது தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை அவர்களால் உறுதிசெய்யமுடிந்தது. ஆனால் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் எவ்வாறு உறுதிசெய்யமுடியும்?

அதேபோன்று சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான ஏனைய உள்ளகத்தரப்பினர் வாக்களிப்பதைத் தடுக்கமுடியாது. எனவே தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோருவதன் மூலம் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கான தனது ஆதரவினை கஜேந்திரகுமார் உறுதிப்படுத்த விரும்புகின்றாரா?

ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ்மாவட்டத்துக்கான வாக்கு எண்ணும் பணிகளில் பல்வேறு குழறுபடிகள், தவறுகள் இடம்பெற்றதாகக் கூறுப்படுகின்றது.

இந்நிலையில் தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால், வேறு எதனைத்தான் செய்யமுடியாது? வாக்களார்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் மாத்திரம் பயன்படுத்தப்படும்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. அநேகமான பத்திரிகைகள் குறிப்பிடத்தக்களவிலான வாக்குப்பதிவு இடம்பெறவில்லை என்றே செய்தி வெளியிடும். அல்லது அரசியல் கட்சிகள் அவற்றின் இராணுவத்தின் துணையுடன் போதிய நடவடிக்கைகளை எடுத்தால், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்து வீட்டில் இருந்தாலும் போதிய வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவே செய்திப்பத்திரிகைகள் கூறும்.

அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்று மும்மொழிகளையும் அறிந்த ஒரு பொதுவேட்பாளரால் தமிழ்மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றமுடியும். வாக்காளர்கள் மத்தியில் இடம்பெறக்கூடிய ஆள்மாறாட்டத்தையும் குறைக்கமுடியும். போதியளவான வாக்குப்பதிவு இடம்பெறுவதை உறுதிசெய்யமுடியும்.

மேலும் மும்மொழிகளையும் அறிந்த பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவதன் மூலம் தொலைக்காட்சிகளில் வேட்பாளர் ஒருவருக்காக ஒதுக்கப்படக்கூடிய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இன்றளவிலே சிங்களமொழி மூலமான எந்தவொரு ஊடகமும் குறிப்பாக வட, கிழக்கு தமிழர் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை.

ஆங்கில ஊடகங்கள்கூட எமது பிரச்சினைகளை வெளியிடுவதில் பின்நிற்கின்றன. ஆகவே தமிழர்கள் சார்பில் களமிறங்கும் பொதுவேட்பாளர் எமது பிரச்சினைகள் குறித்து சிங்களமக்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியவகையில் தமக்குரிய தொலைக்காட்சி நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதேபோன்று தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறுவதைத் தடுக்கமுடியும். அத்தோடு சிங்களமக்கள் பலர் தமது இரண்டாம் விருப்புவாக்கை தமிழ் வேட்பாளருக்கு அளிக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

ஆகவே எமது பிரச்சினைகளைப் பரந்த அடிப்படையில் உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நிச்சயமாகக் களமிறக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன். ஆனால் அதற்கு அவர் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்களமக்களை அறிவூட்டக்கூடிய விதத்தில் தொலைக்காட்சியில் சிங்களமொழியில் உரையொன்றை நிகழ்த்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இணையம் மூலம் அதிகரிக்கும் பண மோசடிகள் – 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் !

இந்த வருடம் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி குற்றப்பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி தெரிவித்தார்.

தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெருமளவில் பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை – இளைஞர் கைது !

யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே கல்வியங்காடு பகுதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன் போது  கைது செய்யப் பட்டவரிடமிருந்து   7 கிலோகிராம்  பாக்கினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த  நபரை  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா குற்றச்சாட்டு !

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது.

இனப்படுகொலை இடம்பெறுவதை தடுக்கவேண்டிய கடப்பாடுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிக்குப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா கண்மூடித்தனமான படைபல பிரயோகமும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுதலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் போன்றவை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன இனப்படுகொலை அல்லது அதனுடன் தொடர்புபட்ட குற்றங்கள் என தெரிவிக்ககூடிய சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.