22

22

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன் – நீதியரசர் விக்னேஸ்வரன்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது எனது விருப்பம்.தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன்.” என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(21) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்படும்போது சிலர் இவர் ரணிலின் ஆள் என்றனர். நான் யாருடைய ஆளுமல்ல தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்தேன் அது நடைபெறவில்லை.

 

நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேடிச் செல்லவில்லை. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் என்னை அவர் சந்தித்தபோது இணைந்து செயல்பட வருமாறு அழைத்தார்.

ஒரு ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் மக்களுக்காக சென்று பேசுவது அரசியல் நாகரீகம் நான் கொமிஷன் வேண்டுபவன் அல்ல. சிலர் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முன்னரே சரி வராது என கூறுவது சிறுபிள்ளைத்தனம் பேசிப் பார்த்து சரி வராது என்ற பின விலகுவது அறிவாளித்தனம். அதையே நான் செய்தேன்.

 

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க போவதாக பலர் பேசுகின்றனர். ரணில் விக்ரமசிங்கவை இன்று நேற்று அறிந்தவன் நான் அல்ல. என்னை விட பத்து வயது இளமை என்றாலும் பாடசாலை காலத்திலிருந்து அவரை எனக்கு நன்கு தெரியும்.

சிங்களத் தலைவர்களுடன் ஒப்பிடும் போது இனவாதம் அற்றவர். அவரது குடும்ப பின்னணி எல்லோருடனும் இணைந்து செயற்படக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது.

ஆனால் பல சந்திப்புகளை மேற்கொண்டேன். 13 திருத்தம் தொடர்பில் நடைமுறை தன்மையை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைப்பதற்கு இணங்கினார்.

ஆறு துறை சார்ந்த நிபுணர்களின் பெயர்களை வழங்கினேன் குழு அமைக்கப்படவில்லை. தற்போது நடைபெற்ற வரவு செலவு திட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

 

தேர்தலில் தமிழ் வேட்பாளராக களமிறங்க தயார்! தனது நிலைப்பாட்டை கூறிய விக்னேஸ்வரன் | Presidential Election Candidate Cv Vigneswaran Ran

 

மாகாண சபையை இல்லாத ஒழித்து மாவட்ட அபிவிருத்தி குழு ஒன்றின் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக காத்திருக்கிறார் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

13 ஆவது திருத்தத்தை அரசியல் அமைப்பில் இருந்து அகற்றுவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க செய்ய நினைக்கிறார்.

இவ்வாறானவருடன் இணைந்து செயல்பட முடியாது தமிழ் மக்களும் எந்த ஒரு சிங்கள அதிபரிடமும் தமக்கான தீர்வுகளை எதிர்பார்ப்பது கடினமான விடயம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவது சிறந்ததா அல்லது ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை கட்டுவது சிறந்ததா என பார்த்தால் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது எனது விருப்பம்.

 

ஒலிம்பிக்கில் சாதித்த எதிர் வீரசிங்கத்தை தொடர்பு கொண்டு பேசினார் ஜனாதிபதி வேட்பாளராக வாருங்கள் சிங்கள மக்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உள்ளது என்றேன் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் இயலாது என்றார்.

 

 

நான் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தபோது பலரின் வற்புறுத்தலின் பேரில் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக வந்தேன் . வந்த பின் என்னையே அப்புறப்படுத்தும் வேலைகளை எம்மவர்களே செய்தார்கள் மக்களின் ஆதரவினால் தப்பினேன்.

 

ஆகவே தமிழ் கட்சிகள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கோரினால் அப்போதைய கள நிலவரங்களைப் பார்த்து பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் இலங்கையில் 21000 வீதிவிபத்துக்கள் – 2000 மரணங்கள்!

2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவிதார்.

 

இந்த விபத்துகள் இடம்பெறுவதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

மேலும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது !

வவுனியாவில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16,00 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று வியாழக்கிழமை (21) இரவு வவுனியா பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் தலமையில் திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள டயர் திருத்தக வியாபாரநிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து, அதனை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களது வீடுகளும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டருந்தது.

 

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் செயற்பாடு – ஒரே வாரத்தில் 10000 கைதுகள்!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியாக கடந்த ஒருவார காலமாக பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை 134 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களில் மொத்தமாக 10 ஆயிரத்து 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் தொடரும் பொருளாதார மந்த நிலை – 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் !

ஏமனில் கடந்த ஆண்டு மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு இடம்பெயரந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளைஅந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும், பெரும்பாலான மக்கள் முறையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும் சிறுமிகளும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த பிரதான போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய புள்ளியான அங்கஜன் இராமநாதனின் தம்பி கைது..? – தகவலை மறைக்கும் ஊடகங்கள்!

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவரது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

 

இவரிடமிருந்து குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு புதிய வகையான போதைப்பொருளாகும். இன்னும் இலங்கையில் இந்த போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜனின் மகன் சிலவேளை பிணையில் வர சந்தர்ப்பம் உள்ளதாக தெரியவருகின்றது.

 

இவர் கைது செய்யப்பட்டு 3 நாட்களாகியும் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தவொரு பத்திரிகையும் இவனது கைது தொடர்பாக செய்தி வெளியிடவில்லை என்பதிலிருந்து ராஜனின் செல்வாக்கு எந்த அளவில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ராஜனுக்கு சொந்தமாக யாழில் பல எரிபொருள் நிலையங்களும் பல பிரபல வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண முக்கிய அரச அதிகாரிகளை தென்பகுதி அரசியல்வாதிகளின் துணையுடன் இடம்மாற்றம் செய்வதில் ராஜன்  செயற்பட்டு வந்துள்ளதையும் பலர் குறிப்பிட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் ஏனைய சட்டவிரேதாத நடவடிக்கைகளுக்காக தனக்கு தேவையானவர்களை யாழ்ப்பாணத்தில் அதிகாரிகளாக வைத்திருப்பதற்கு ராஜன் முயன்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கை பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனது பணபலத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பல அதிகாரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து ராஜன் அகற்றியமை குறிப்பிடத்தக்கது. ராஜனின் செல்வாக்கில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முக்கிய அரச அதிகாரி ஒருவரின் மகனும் போதைப்பொருள் பாவித்து பிரபல பாடசாலையிலிருந்து துரத்தப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ராஜன் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜனின் அப்பா இராமநாதனின் தம்பியாவான். ராஜனுக்கும் அங்கஜனின் அப்பா மற்றும் அங்கஜனுக்கும் இடையில் கடந்த ஓரிரு வருடங்களாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் கார்கில்ஸ் கட்டடத்திற்கு அருகில் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக பலரும் அங்கஜனை குற்றம் சாட்டியிருந்த போது அந்த எரிபொருள் நிலையம் தன்னுடையது இல்லை என அங்கஜன் பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

ராஜன் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது மகனை யாழ் பல்கலைக்கழக உயர் பீடமான பல்கலைக்கழக பேரவைக்கு உறுப்பினராக போட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் எவ்வாறு உயர்பீடங்களில் கௌரவமான தோற்றத்தில் காணப்படுகின்றார்கள் என்பதையே இது காட்டி நிற்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.