01

01

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று – ஒரே வருடத்தில் 43 பேர் பலி !

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

 

தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல் 427 நோயாளிகளைக் கண்ட 2022 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவிகித அதிகரிப்பை இது பிரதிபலிக்கிறது.

 

செப்டெம்பர் வரை பதிவான எயிட்ஸ் நோயாளர்களில் , 72 ஆண்களும் ஏழு பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள், மீதமுள்ள எயிட்ஸ் நோயாளர்களில் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.

 

2023 இல் பதிவாகியுள்ள எச்.ஐ.வி நோயாளர்களில் ஆண்-பெண் விகிதம் 8.7:1 ஆக உள்ளது.

 

இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 2009 முதல் ஒரே காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

மேலும், 2023 இல் இதுவரை எய்ட்ஸ் தொடர்பான 43 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இலங்கையில் உத்தியோகபூர்வமாக திருநங்கைகள் மத்தியில் 10 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , 2009 முதல் இதுவரை மொத்தம் 4,095 ஆண்களும் 1,391 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆகவே கருத்து சுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியாவில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் வவுனியா பொதுய் வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01.) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை எச்.ஐ.வி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது. இங்குள்ள சனத்தொகை அடிப்படையில் 0.1 வீதத்துக்கு குறைவானவர்களே தொற்றுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இதில் 86 விதமான எச்.ஐ.வி தொற்று பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படுகின்றது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடிய அளவில் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக 52 வீதமாக காணப்படுகின்றார்கள்.

 

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 2002 ஆம் ஆண்டு முதல் 33 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இதில் 12 பேர் இறந்துள்ளார்கள். தற்போது வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் சிகிச்சை சுகதேகிகளாக உள்ளனர். இவர்களில் 12 ஆண்களும், 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வருடம் 2 பேர் அடையாளங்கள் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆண்களாக காணப்படுகின்றனர்.

 

2030ல் எயிட்ஸ் முடிவுக்கு கொண்டுவரும் மகத்தான இலக்கை நோக்கிய முதலாவது படியாக எச்.ஐ.வி பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனையை இலங்கையில் உள்ள அனைத்து எஸ்டிடி சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாக செய்ய முடியும். அதன் முடிவுகள் இரகசியமாகவும் பேணப்படும்” இவ்வாறு அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிராமங்களில் அதிகரிக்கும் நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை – பாலியல் இலஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்!

கிராமப்புறங்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன் நிறுவனங்களிடம் சிக்கொண்டுள்ளன. இந்தக் கடனை அடைக்க முடியாத போது பாலியல் இலஞ்சம் பெறும் நிலைக்கு ஆளாகுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

ஆய்வுகளின் பிரகாரம் கிராமப்புற மக்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை காரணமாக காதணிகளைக் கூட அடகு வைத்து வருகின்றனர்.

 

நாட்டில் தற்போது 11,000 நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. கிராமங்களில் ‘படுக்கைக் கடன்’ என்று அழைக்கப்படும் இந்தக் கடனை அடைக்க முடியாத போது,பாலியல் இலஞ்சம் பெறும் நிலை காணப்படுகிறது.

 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளதன் பிரகாரம்,கடந்த மாதம் 15 வயதுக்குட்பட்ட 169 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதோடு,அதில் 26 சிறுவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர்.

 

அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்கள் தடுப்பு பணியகத்தின் அறிக்கையின் படி, கடந்த 9 மாதங்களில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மேலும் 1086 பாலியல் வன்கொடுமைகள்,கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 425 பதிவாகியுள்ளன. இந்நிலையில் இருந்து சிறுவர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

 

அத்துடன் இதுவரை 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு 533858 பேர் வேலை இழந்துள்ளனர். 20 சதவீத ஆடைத் தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுள்ளன. இதில் 10 நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.இதனால் அவர்களது குடும்ப நலன் நடவடிக்கைகள் கூட முடங்கியுள்ளன. வேலையிழந்ததால் பெண்கள் வேறு வழிகளில் பணத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மேலும் பொருளாதார நெருக்கடியை படிப்படியாக தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும்,சாதாரண மக்களைப் பார்க்கும் போது அவர்களின் பரிதாப நிலை குறையவில்லை. பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுவர்களே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023 மே மாதத்திற்குள் 39 இலட்சம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பின்றிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷாவில் கூட அப்ளாடோக்சின் என்ற நச்சு இரசாயனம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

அண்மையில் சுகாதார அமைச்சு,”தேசிய போஷாக்குக் கொள்கை 2021-2030” பத்தாண்டு கொள்கையை வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் என்ன என கேட்கிறோம். ,2023 இல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka குறியீட்டின் பிரகாரம், இலங்கை 0.026A தரப்படுத்தல் நிலையில் உள்ளது,10 பேரில் 6 பேர் பன்முக ஆபத்தில் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 55.7 வீதமாகும் என்றார்.

ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்தனர் – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் குற்றச்சாட்டு!

மகிந்த ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தேசிய ரீதியில் புகையிரத, அரச மற்றும் தனியார் பேரூந்து என ஒரு இணைந்த சேவையாக போக்குவரத்து திட்டமிடல் அமைய வேண்டும்.

 

மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப் பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை.

 

குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை.

 

மகிந்த ராஜபக்ஷவினர் எப்போதும் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்.

 

தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புனரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுதல் வேண்டும். அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.