24

24

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது – இரா.சம்பந்தன்

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப்பகிர்வை நோக்கிய செயற்பாட்டில் தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒரு வருட கால அவகாசத்துக்குள் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், கருத்து வெளியிடும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் நீண்டகாலமாக இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் அதற்காக தொடர்ச்சியாக தமது ஆணையை வழங்கியும் வருகின்றார்கள்.

 

அந்த வகையில், ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வினை தொடர்ந்தும் காலம் கடத்திச் செல்ல முடியாது. அவர்கள் தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

 

தமிழ் மக்கள் தங்களுடைய கருமங்களை தாங்களே ஆற்றும் வகையில் சுய நிர்ணய அடிப்படையில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் மீளப் பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவது நோக்கி நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள இணையம் மூலமான பண மோசடி – யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத்

விளம்பரங்களின் மூலம் பல லட்சம் ரூபா மோசடிஇடம்பெறுவதாக யாழ். மாவட்டத்தில் பலர்முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர் என யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

இணையம் ஊடாக பணம் உழைக்கலாம் என்று ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் சுமார் பல லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் தற்போது பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

 

இணையத்தின் ஊடாகப் பணம் உழைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரங்களை நம்பியே இவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விளம்பரத்தை நம்பி 30 லட்சம் ரூபா, 16 லட்சம் ரூபா என அவர்கள் இழந்துள்ளனர்.

 

விளம்பரம் மூலம் தொடர்பு கொள்வோர், சிறு தொகையை முதலீடு செய்யக் கூறுவார்கள். அந்தத் தொகையை அனுப்பியதும் ஒரு சிறிய வேலை (டாஸ்க்) ஒன்று கொடுக்கப்படும். அதைச் செய்ததும் அவர்கள் வைப்பிலிட்ட பணத்தை விடவும் அதிக பணம் மீண்டும் வழங்கப்படும்.

 

இது சிறிதுகாலம் தொடர, இதன்மூலம் பணம் ஈட்டலாம் என்ற நம்பிக்கை ஏற்படும்போது, மெல்ல மெல்ல பெரிய தொகைகளை முதலீடக் கூறுவார்கள். பணத்தை மீளப் பெறலாம் என்ற நம்பிக்கையில் இங்குள்ளவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்யும்போது, பணத்தைச் சுருட்டிக்கொண்டு அவர்கள் காணாமல் போகின்றனர். யாழ். மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

 

இது தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்ததாவது-

 

இவ்வாறான மோசடிகள் தற்போது அதிகம் நடக்கின்றன. மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமே மக்களைக் குறிவைக்கின்றனர். இந்த மோசடிகளில் சிக்கிப் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் – என்றார்.

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். – தொடர் கைதுகள் தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் !

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளது, தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாக குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

பாரியளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், நெத்தலிகளே கைது செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அந்த கருத்தில் ஒரு உண்மையும் இருக்கிறது. நெத்தலிகள் போதைப்பொருளுடன் வீதிக்கு இறங்கும்போதே அவர்களை கைது செய்ய காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

 

அவர்களை அவ்வாறே விட்டுச் செல்ல முடியாதல்லவா? போதைப்பொருள் பாவனையாளர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களும் இருவேறு தரப்பினர் அல்ல.

 

 

கடந்த 17ஆம் திகதியின் பின்னரும் அதற்கு முன்னரும் உள்ள நிலைமையும் நான் அவதானித்தேன். நாம் கண்டறிந்துள்ள 1,091 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முழு நாட்டிலும் இருக்கின்றனர்.

இவர்கள் காலையில் குற்றங்களை செய்துவிட்டு இரவில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்கிறார்கள்.

காலையில் கொலை செய்துவிட்டு இரவில் வெளிநாட்டுக்கு செல்லும் முறைமை ஜனவரியிலிருந்து மாற்றமடையும்.

 

ஜனவரி மாதம் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். மேலும், 31 பாதாள குழு உறுப்பினர்கள் சிறைச்சாலையில் இருந்து குற்றங்களை வழிநடத்துகின்றனர்.

 

 

இவர்களையும் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாதாரண மக்களுக்கு எதிராகவோ அல்லது காவல்துறையினருக்க எதிராகவோ பாதாளக் குழு உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தி செயல்படும்போது அவர்களுக்கு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் தகுந்த பாடம் புகட்டப்படும்.” என்றார்.

போதைப்பொருள் சுற்றி வளைப்பில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கைது செய்யப்படவில்லை – வேடிக்கையாகவுள்ளது என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் !

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்து பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

 

தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மீதான போர், வேடிக்கையான விடயமாக தோற்றமளிப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10,000-இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் 7.7 கிலோகிராம் ஹெரோயின், 3.8 கிலோகிராம் ஐஸ், 225.7 கிலோகிராம் மற்றும் 44,267 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகத்தில் புழக்கத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் அளவு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கைகளின் அடிப்படையில் செலவழித்த நேரம் மற்றும் பயன்படுத்திய வளங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் அளவு மிகக் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனூடாக பொலிஸார் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்தே சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதைக் காட்டுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

இவர்கள் நடுத்தர மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுப்பார்களாயின் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் பொலிஸாரால் கூற முடியாது எனவும் இந்த தொடர்பிலான போர் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்ததிலிருந்து இவர்களிடம் தகவல் இருந்திருக்க வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள டெங்கு – உலக சுகாதார ஸ்தாபனம் அதிர்ச்சி!

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

 

உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலகளவில் டெங்கு நோய்த்தொற்றாளர்களில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

 

இந்த ஆண்டு உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, 5,000க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், தமது 11 உறுப்பு நாடுகளில் 10 நாடுகள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த ஆண்டில், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உட்பட பல நாடுகளில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக டெங்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் முதல் 30 நாடுகளின் தரவரிசையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.