03

03

காசா பகுதியில் அகதி முகாமை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – குழந்தைகள் உட்பட 13 பேர் பலி !

மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள பல வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை இரவு இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாமில் உள்ள அசார் மற்றும் ஜாகவுட் குடும்பங்களின் குடியிருப்புகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 

காயமடைந்தவர்கள் காசாவின் மத்திய மாகாணத்தில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்.

நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு மேலதிகமாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரில் உள்ள அல்-ஜலா வீதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதியிலும் தாக்குதலை மேற்கொண்டன.இங்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒக்டோபர் 7 ம் திகதி காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து, 6,500 குழந்தைகள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 16,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 38,000 பேர் காயமடைந்துள்ளனர்.

போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்ததால் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரிப்பு !

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் ஆகியோர் அந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், மதுவரி சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், எழுமாறான சோதனைகள் தொடர்வதும் மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவதை மேலும் குறைக்கும் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

R.A.M.I.S அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய அரச நிறுவனங்களுடன் இந்த அமைப்பை இணைப்பதன் தற்போதைய நிலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த தரவு முறைமை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள 07 இலட்சம் வரி ஆவணங்களை எதிர்வரும் காலங்களில் 10 இலட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மனித – யானை மோதலில் கடந்த ஆண்டு 433 யானைகள் பலி !

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, மனித – யானை மோதலால் கடந்த ஆண்டு 433 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானை – மனித மோதலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபா நிதி !

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்.

அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவது;

தங்களுடைய மரண தண்டனை தொடர்பில் 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். அதில் 07 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டு பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர். சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள்.

அத்துடன், சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களை கைது செய்யும் இஸ்ரேலிய படைகள் !

இஸ்ரேலிய படைகள் இன்றையதினம் 12 பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக காசா தகவல்கள் தெரவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3415 ஆக உயர்வடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய ஒரு யுவதியையும் சோதனைச் சாவடியில் படைகள் தடுத்து வைத்ததாக அவர்கள் கூறினர்.

Nablus, Tubas, Jenin, Hebron மற்றும் Qalqilya ஆகிய பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடர்ந்ததாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அத்துடன் சோதனையிட்ட வீடுகளையும் படைகள் சூறையாடியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.