15

15

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் / எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு செயற்திட்டத்துக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினர் அழைப்பு !

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம்.

 

எதிர்வரும் 17.12.2023 அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்றை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் கிளிநொச்சி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் தேசம் நெட் இற்கு வழங்கிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார். “அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை இளைஞர்களை தாண்டி நம் சமூக பாடசாலை மாணவர்கள் இடையேயும் ஊடுருவி எதிர்கால சந்ததியை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. எனவே கிளிநொச்சி மக்களாக நாம் விழித்துக்கொள்ள வேண்டிய ஓர் கட்டத்தில் இருக்கிறோம்.

 

எனவே “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான நமது கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தில் கலந்து கொண்டு நமது சமூக மாற்றத்திற்கான செயற்திட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்” என கிளிநொச்சி மக்களுக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இடம் :- கிளிநொச்சி பொதுச் சந்தை – கிளிநொச்சி பொது பேருந்து நிலையம்.

திகதி:- 17.12.2023

நேரம் :- காலை 10.00 மணி

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் சனத் ஜயசூரிய !

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி ரணில்

மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களின் பின்னர் மஹபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியை மீள ஆரம்பிப்பதன் மூலம் அதிகமானவர்களுக்கு உயர்கல்விக்கான கதவுகள் திறக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை ஆரம்பித்து வைத்து இலங்கையின் கல்விக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீதாவக பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி மையமான Post Graduate for Research நிறுவனத்திற்கு அவரது பெயரிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மஹபொல 2023 கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று (14) மாலை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் மிகப்பெரிய கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியான ‘மஹபொல 2023’ கண்காட்சி கடந்த 13 ஆம் திகதி ஜா-எல நகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நாட்டின் வறிய பெற்றோரின் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றும் நோக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியினால் ஆரம்பிக்கப்பட்ட மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதிக்கு ஆதரவாக மஹபொல வர்த்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

10 வருடங்களின் பின்னர் இந்த வருடம் 226 ஆவது மஹபொல கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இக்கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இக்கண்காட்சியானது 350இற்கும் மேற்பட்ட பல்துறைசார் கண்காட்சிக் கூடங்களைக் கொண்டுள்ளது. இது புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளுக்கான சந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

லலித் அத்துலமுதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்திற்கான ஒன்லைன் நன்கொடை (online donation facility) வசதிக்காக www.eservices.mahapola.lk என்ற இணையத்தளத்தையும் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

பிரித்தானியாவில் அதிகளவான சொத்துக்களை வைத்துள்ள இலங்கை அமைச்சர் – வெளியானது பண்டோரா அறிக்கை !

கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் சொத்துக்களை வைத்திருக்கும் இரண்டு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளின் நிறுவனங்களுக்குச் சொந்தமானவர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் தரவு காட்டியுள்ளது.

 

200 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா ஆவணம் பல விடயங்களை வெளியிட்டு வருகின்றது.

 

அதன்படி பொது பாதுகாப்பு அமைச்சரின் ப்ரொம்ப்டன் ப்ரொப்பர்டீஸ் லிமிடெட், லண்டனில் உள்ள ஒரு வசதியான பகுதியில் 2006 இல் சுமார் 960,000 டொலருக்கு வாங்கப்பட்டதாகவும் இரண்டாவது பான்ஹாம் வென்ச்சர்ஸ் லிமிடெட், 2008 ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு கசிந்த ஆவணங்களில் உள்ள ஒரு அறிவிப்பின்படி, பி.வி.ஐ நிறுவனங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்ட நிதி, ஒரு தொழிலதிபராக டிரன் அலஸ்ஸிடம் இருந்து வந்ததை காட்டுகின்றது.

இமயமலை பிரகடனத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

 

அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது’ என்று குற்றஞ்சாட்டினார்.

 

இக்குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 

இந்தப் பிரகடனத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அதேபோல் இதில் எமக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.

 

உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்தப் பிரகடனமாகும்.

 

இதில் அதிகாரப்பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் மிகமுக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ‘ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு’ என்ற சொற்பதம் புத்த பிக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

 

அதேபோன்று பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

 

எனவே அடுத்தகட்டமாக இப்பிரகடனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்திறன் தங்கியுள்ளது.

 

அதேவேளை உலகத்தமிழர் பேரவை எம்முடன் நடத்திய சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் இப்பிரகடனத்தை வரவேற்று எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். இவற்றுக்கு அப்பால் எமக்கு இதில் எவ்வித தொடர்புமில்லை என்றார்.

இலங்கையில் அடித்து துன்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் மனநோயாளிகள் -மனித உரிமைகள் ஆணைக்குழு அதிர்ச்சி அறிக்கை !

இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழுஆ வெளியிட்டுள்ள அறிக்கையொன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவிக்கிறது.

மன நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போதான சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவதைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.

 

மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

அதன் இடைக்கால அறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த டிசம்பர் 10ஆம் திகதி வெளியானது.

 

அந்த இடைக்கால அறிக்கையில் மனநலம் தொடர்பில் நாட்டில் புதிய சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தேசிய மனநல நிறுவனத்தில் ஊழியர்களின் தவறான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில், அந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முக்கிய முறைப்பாடுகளை அடுத்தே அவர்களின் இந்த கவலையும் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

 

அவர்களது கண்டுபிடிப்பில் சில விடயங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில், நோயாளிகளை இழிவுபடுத்தும் வகையில் இருந்துள்ளது.

 

கண்காணிப்பு கமராக்கள் இல்லாத இடங்களில் ஊழியர்கள் நோயாளிகளை அடிப்பது போன்ற முறைப்பாடுகள் அந்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதுமாத்திரமின்றி, ஊழியர் ஒருவரின் நடவடிக்கை காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்ததும் அவர்களது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

தமக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மன நோயாளிகளின் நலன் மற்றும் சுதந்திரம் குறித்து முன்னெடுத்த உண்மையை கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அறிக்கை வந்துள்ளது.

 

இதையடுத்து, அந்த ஆணைக்குழு சுகாதார அமைச்சு, தேசிய மனநல நிறுவனம், இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விடுத்துள்ளது.

 

அதன்படி, சர்வதேச மருத்துவ தரம் மற்றும் அரசின் மனித உரிமைக் கடப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனநலச் சட்டம் ஒன்று இயற்றப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக பரிந்துரை செய்துள்ளது.

 

11 பக்கங்கள் கொண்ட விரிவான இந்த ஆவணம் அந்த ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது பொது வெளியிலும் வெளியானது.

 

”குறிப்பிடத்தக்க கவலைகள்’ என அந்த ஆணைக்குழு கூறுவது தொடர்பில், மன நல நோயாளிகளின் புனர்வாழ்வு காலத்தில் அரசு அவர்களின் நல்வாழ்வு பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எழுப்பியுள்ள கவலைகளில் நோயாளிக்கான தண்ணீர் வசதிகள், உணவு, இடவசதி, வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை, அதை அளிப்பவர்களின் நடவடிக்கை ஆகிய விடயங்களை பிரதானமாக உள்ளடக்கியுள்ளது.

மன நோயாளிகளின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுவது குறித்து, தனது ஆழ்ந்த கவலையை ஆணைக்குழு எழுப்பியுள்ளது.

அதேவேளை, பல சந்தர்ப்பங்களில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஆண் நோயாளிகள் தங்கியுள்ள பிரிவுகளில் பெருபான்மையாக பெண் தாதியரே உள்ளனர்.

அந்த சமயத்தில் நோயாளிகளின் பராமரிப்பு என்பது உரிய பயிற்சி இல்லாத உப சேவகர்கள் மூலமே செய்யப்படுகிறது.

எனவே, நோயாளிகளின் பராமரிப்பு எந்தளவுக்கு காத்திரமாக உள்ளது என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான நேரங்களில் உபசேவகர்கள் நோயாளிகளை கையாள்வதில் நிலவும் வழிகாட்டல்களை ஏற்று நடக்க மறுக்கின்றனர்.

முறையாக நிர்வகிக்கப்படாத சிகிச்சைக்கு அப்பாற்பட்டு, மாற்று வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படுவது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படியான மாற்று சிகிச்சை முறைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அத்துடன், சிகிச்சை அளிப்பதிலுள்ள குறைபாடுகள் தொடரும் அதேவேளை, தேசிய மனநல நிறுவனத்தில் பல மருந்துகள் தரமில்லாமலும் இருந்துள்ளன. அந்த மருந்துகள் கையிருப்பில் இல்லாதபோது, சிகிச்சைக்கு மாற்று வழிமுறைகள் கையாளப்படுகின்றன. எனினும், உயர்தர மருந்துகள் கையிருப்பில் இல்லாத நிலையில், இப்படியான மாற்று வைத்திய வழிமுறைகளில் கூடுதலான பக்கவிளைவுகள் உள்ளன.

 

இவை மட்டுமின்றி, மனநல நோயாளிகளுக்கான வைத்திய சிகிச்சை கட்டணமும் கவலையை ஏற்படுத்தி நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

உயர்ந்த கட்டணம் காரணமாக வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நோயாளிகள் மருந்துகளை வாங்க சிரமப்படுவதால், அவர்கள் நோய்வாய்ப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சூழல் ஏற்படுகிறது.

 

தண்ணீர் வசதி, சுகாதாரம் ஆகிய இரண்டும் முக்கியமான கவலைகளாக அந்த ஆணைக்குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

மன நோயாளிகள் அறியாமல் தமது உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை அழுக்காகிவிடக் கூடும். அதை உடனடியாக சுத்தம் செய்ய தடையில்லா தண்ணீர் விநியோகம் தேவை. இந்த ‘தொடர்ச்சியான தண்ணீர் விநியோகம்’ தேசிய மனநல நிறுவனத்தில் சீராக இல்லாதது மட்டுமின்றி, அவர்களின் தண்ணீரை சேமித்து வைக்க வசதியும் இல்லை. அது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் போது அது மேலும் சிக்கலாகிறது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

 

தொடர்ச்சியாக, தண்ணீர் வசதி இல்லாததொரு சூழலுக்கு அப்பாற்பட்டு, நுளம்புக்கடியிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதும் தேசிய மனநல நிறுவனத்தில் சவாலாக உள்ளது. தற்கொலை அபாயம் காரணமாக நுளம்புவலைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

 

“முன்னர் நுளம்பு மருந்து அடிப்பது போன்ற தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டாலும், இப்போது அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல் தடையவியல் பிரிவில் மூட்டைப்பூச்சிகளின் இருப்பும் தொடரும் ஒரு பிரச்சனையாக உள்ளது”.

 

மனநோயாளிகளை சமாளிப்பதிலும் அவர்களுக்கு வைத்தியம் அளிப்பதிலும் மொழிப் பிரச்சினை ஒரு பெரும் தடங்கலாக உள்ளது. தேசிய மனநல நிறுவனத்திலுள்ள பெரும்பாலான ஊழியர்கள் தமிழ் பேசும் நோயாளிகளிடம் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகிறது. நோயாளிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள முயன்றாலும், தொடர்பாடல் பிரச்சினைகள் நிலவுகின்றன என்று கூறும் அந்த ஆணைக்குழு இப்போது வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் ஊழியர்களுக்கான தமிழ் மொழிப் பயிற்சி அளிப்பதையும் பரிந்துரை செய்துள்ளது.

தேசிய மனநல நிறுவனம் இதர நோயாளிகளிடம் உதவி கோரும் அதேவேளை, உபசேவகர்கள் ‘கூகிள் மொழிபெயர்ப்பு’ போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர் எனவும் அந்த ஆணைக்குழு, “எனினும் நோயாளிகன் தேவைகளை துல்லியமாக அறிந்துகொள்ள அவர்களால் முடியுமா என்பது தெளிவாக இல்லை” என்றும் கூறியுள்ளது.

 

மன நோயாளிகளை கையாள்வதில் இப்படியான சவால்கள் இருக்கும் சூழலில், இலங்கையில் ’புதிய மனநல வைத்திய சட்டம்’ ஒன்று தேவை எனவும் அச்சட்டம் சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கான முன்னுரிமை வழிகாட்டலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அங்கொடையிலுள்ள தேசிய மனநல நிறுவனத்திலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு தொடர்பிலும் அந்த வழிகாட்டல்கள் கவனம் செலுத்தியுள்ளன.

 

இலங்கையிலேயே மனநல வைத்தியத்துக்கான மிகப்பெரிய மையமாக அங்கொட வைத்தியசாலை காணப்படுவதோடு, அங்கேயே அதிகளவானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

 

தேசிய மனநல நிறுவனத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மேம்பட்ட உணவு வழங்கல் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஆகியவையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

அவர்கள் விடுத்துள்ள வழிகாட்டல்களின் ஒரு பகுதியாக அந்த வைத்தியசாலையில் பொலிஸ் காவல் மையம் ஒன்றையும், மனநோய் உள்ள சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக்காவலர்கள் அங்கொட வைத்தியசாலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதிகரித்த கேள்வி – இளநீரை ஏற்றுமதி சார்ந்த பயிராக பயிரிட விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீருக்கு அதிகளவான கேள்வி இருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மாதாந்தம் 200 இளநீர் கொள்கலன்கள் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்நிலையில், முதன்முறையாக தோட்டப் பயிர்களாக பயிரிடப்பட்ட இளநீரை ஏற்றுமதி சார்ந்த பயிராக பயிரிட விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இன்று (14) நடவடிக்கை எடுத்துள்ளது.

 

அதன்படி முருதவெல மேல் பிரதேசத்தை இலங்கையின் முதலாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

 

முன்னோடித் திட்டமாக இந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களில் முதலில் 1,500 இளநீர் மரங்கள் நடப்படும். அதற்காக உயர்தர இளநீர் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சரினால் இன்று இடம்பெற்றது.

 

ஒரு வீட்டுத் தோட்டத்துக்கு 10 இளநீர் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்நாட்டில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர், அந்நாட்டின் கடலோரப் பகுதியில் 2,500 ரூபாய் என்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தற்போது அந்நாட்டில் இளநீருக்கான தேவை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

 

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு இளநீருக்கு துறைமுகத்தில் 0.8 டொலர்கள் (சுமார் 296 ரூபாய்) கிடைக்கிறது.

 

வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

கடந்த ஆண்டு (2022) இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

 

இந்த ஆண்டு (2023) ஆறு பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

 

உலகில் பல நாடுகள் இளநீரை பயிரிட முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

 

உலகிலேயே மிகவும் சுவையான இளநீர் இலங்கையின் இளநீர் என்றும் அதனால் Sri Lanka Sweet Coconut வர்த்தக நாமத்துடன் எதிர்காலத்தில் இந்த நாட்டின் இளநீரை உலகில் பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொலிசாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் என்னவாகின்றன ..? – பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கம்!

பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“பொலிஸாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்ற மாபெரும் பிரச்சினை பொதுமக்களுக்கு இருக்கின்றது.

 

குறித்த போதைப்பொருட்கள் மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளை சென்றடைகின்றது என்ற பிழையான கருத்தும் மக்களிடையே காணப்படுகின்றது.

 

அதேபோன்று இவ்வாறான சில சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

 

ஆனால் இதன் பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மிகவும் குறுகிய காலத்தில் அழித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.