13

13

யாழ்ப்பாணத்தின் தீவுகளில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம் – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை !

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதிகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.

 

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஹைபிரிட் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் தற்போது வீரவசனம் பேசுபவர்கள் எவரும் கடந்த ஆண்டு நாட்டை பொறுப்பேற்கவில்லை. – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட இரண்டாம் தவணை கடன்தொகையை இலங்கைக்கு வழங்க நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும், வங்குரோத்து நிலை என்பதில் இருந்து நீங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

 

இதேவேளை, பாராளுமன்றத்தில் தற்போது வீரவசனம் பேசுபவர்கள் எவரும் கடந்த ஆண்டு நாட்டை பொறுப்பேற்கவில்லை.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். உண்மையை மக்கள் அறிவார்கள். தாய் நாட்டை பாதுகாத்துள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

 

பொருளாதார மீட்சிக்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைத்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் எவரும் ஒத்துழைப்பு வழங்க முன் வரமாட்டார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

20,000 ரூபா சம்பளம் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். இது கவலைக்குரியது.நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு தரப்பினருக்கு சம்பளத்தை அதிகரித்தால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டில் இலங்கையில் 20000க்கும் அதிகமான பெண்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிப்பு!

நாட்டில் இவ்வருடம் 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் நெதாஞ்சலி மபிடிகம தெரிவித்துள்ளார்.

 

மேலும், நாட்டில் கருவுற்ற பெண்கள் கூடுதலாக வன்முறைக்கு ஆளாகுவதாக தெரிவித்தார்.

 

பெண்களுக்கு எதிரான பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தடுப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு செயலமர்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

இந்த நிகழ்வு பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவி வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

 

வீடுகள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுப்பதற்கு திட்டங்கள் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

அதன்படி, பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் கீழ், 18 துறைகளில் கவனம் செலுத்தும் 13 அமைச்சகங்களின் செயற்திட்டங்கள் தொடர்பாக இந்த பல்துறை தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி தொழில்வாய்ப்பு வழங்கும் செயற்றிட்டம் !

மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயம் மட்டு மாநகரசபையின் அனுசரனையுடன் நீதிமன்றத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த விற்பனை நிலையமானது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் திறந்து வைக்கப்பட்டது.

 

மட்டக்கப்பு பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முகம்மட் ஸப்றீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாநகர ஆணையாளர் நீதவான் நீதிமன்ற பதிவாளர் மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை நிலையப்பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குங்கள் – அமெரிக்காவில் செலன்ஷ்கி !

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் தலைநகர் வொஷிங்டன் DC-இல் தலைவர்கள் பலரைச் சந்தித்துள்ளார்.

 

61 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி முயற்சிகளை அவர் இந்த சந்திப்புகளின் போது மேற்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

 

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய தவறான செயற்பாடுகளை காரணங்காட்டி அமெரிக்க காங்கிரஸை சமரசப்படுத்தினாலேயே இந்த உதவித் தொகையைப் பெற முடியுமென ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

“ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டை மீட்டெடுத்துள்ளது.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்று என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடாக இருந்த எமது நாட்டை, மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிறப்பான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளது.

யுத்தம் மற்றும் கோவிட் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் எமது நாடு பின்னடைவை அடைந்திருந்தது. இலங்கை எப்படி நெருக்கடிகளில் இருந்து இவ்வாறு மிக வேகமாக மீண்டு வந்தது என்று எனது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது அந்நாட்டவர்கள் ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள்.

 

அதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டல், சிறப்பு ஆளுமை, அதற்கு பக்க பலமாக இருந்து இந்த அரசாங்கத்தை முன்னெடுப்பவர்கள் தான் காரணம் என்று நான் அவர்களுக்கு கூறி வருகின்றேன்.

அதேபோன்று இலங்கை மக்களும் இந்த நெருக்கடிகளை விளங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து வருகின்றார்கள் என்பதையும் நான் அங்கு குறிப்பிடுகின்றேன். 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8400 மில்லியன்கள் ஒதுக்கப்ட்டுள்ளது. அதில் 6077 மில்லியன்கள் மூலதனச் செலவாகவும் 2323மில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் உட்பட அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் எவ்வாறு நாங்கள் சிறப்பாக முன்னெடுக்கலாம் என்றும் எதிர்காலத்தில் அதனை ஒரு அடிப்படையாக வைத்து முன்னேறலாம் என்றும் வகுத்திருக்கின்றோம்.

அரசாங்கத்தின் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக எமது நாட்டின் கடற்றொழிலை வளப்படுத்தும் வகையில் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகின்றோம். மேலும், எரிபொருள் விலை உயர்வு எமது கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரதான விடயமாக உள்ளது.

 

பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலைகள் அதிகரிக்கின்றன. இதற்கு அரசாங்கத்தைக் குறை கூற முடியாது.

கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி இந்நாட்டின் கடற்றொழில் துறையை முன்னேற்றும் வகையிலேயே எமது திட்டங்களை வகுத்து செயற்படுகின்றோம்.

எரிபொருள் செலவு போன்ற உற்பத்திச் செலவுகளைக் குறைக்க பல்வேறு மாற்று வழிமுறைகளை பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றோம். அந்த வகையில், படகுகளில் Battery Motors பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இது மீனவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் எரிபொருள் பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். அது தொடர்பில் பரீட்சார்த்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதேபோன்று கடற்றொழில் சட்டத்தைப் பொறுத்தவரை எமது அமைச்சு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில் சட்டமொன்றை தயாரித்து வருகின்றது.

 

அது தற்போது சட்ட வரைவு என்ற நிலையிலேயே உள்ளது. ஆனால் இதனைப் பற்றி சரியாக விளங்கிக்கொள்ளாமலும் உள்நோக்கத்திலும் பலர் தவறான கருத்துகளைக் கூற முற்படுகின்றார்கள். இது ஒரு வரைபே அன்றி முடிவல்ல. துறைசார் நிபுணர்களில் கருத்துகளையும் பெற்றே இதனை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரச்சினையைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் இடையிலான விடயம் என்பதால் இராஜதந்திர ரீதியிலேயே அதனை அணுக வேண்டியுள்ளது.

 

இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் மீன்படி விடயம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே அது தொடர்பில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

 

 

 

108 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் !

108 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். இதன்படி, அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் இலங்கையின் காலனித்துவ நிர்வாகத்தால் அரசாங்கத்திற்கு எதிரான கலவரம் செய்தமை மற்றும் தேசத்துரோகத்திற்காக இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

 

ஜூலை 7, 1915 இல், (அவரது 27 வது வயதில்) எந்த மேல்முறையீட்டையும் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

ஹென்றி பெட்ரிஸின் உடல், இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளியை தகனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

அப்போது நாட்டைக் கட்டுப்படுத்திய மூத்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தினாலேயே அவர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

 

இதன்படி, கொலைச் சம்பவம் தொடர்பான உண்மைத் தகவல்களைக் கண்டறியும் வகையில், அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இரத்துச்செய்யப்பட்டது இலங்கையின் இடைக்கால கிரிக்கெட் குழு !

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

இடைக்கால குழுவை நியமிக்கும் முடிவை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதாக ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் அவதானிப்புகளுக்கான கணக்காய்வு அறிக்கை குறித்து எழுத்து மூலம் தங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.