21

21

செயற்கை நுண்ணறிவால் பிரித்தானியாவின் தேர்தலுக்கு அச்சுறுத்தல் !

உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஜனநாயகத்திற்கு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தாக கருதும் இந்த விடயத்தை சமாளிக்க இன்னும் அதிகளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நீதித்துறை செயலாளர்  Robert Buckland வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய தவறான தகவல்களால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை ஏற்படுத்தும் என முன்னாள் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஜனவரிக்குள் நடக்க வேண்டிய அடுத்த பொதுத் தேர்தல், 2017ல் காணப்பட்ட இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணிக்குழு மூலம், வெளிநாட்டு தலையீட்டிலிருந்து தேர்தலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தடை !

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ(Colorado) உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பு மீதான மேன்முறையீடு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இந்த தீர்ப்பு கொலராடோ மாநிலத்திற்கு வௌியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வேகமாக பரவிவரும் கொரோனா – எச்சரிக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம் !

புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

 

எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.