16

16

மூன்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு ஆணைக்குழு அங்கிகாரம் அளித்துள்ளது! மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் தரம் உயர்ந்துள்ளது!!!

அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கக்கூடிய மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவிக்கின்றார். கிளிநொச்சி திருநகரில் பதின்னான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற லிற்றில் எய்ட் யுத்தம் முடிவுக்கு வந்த மே 18, 2009இல் லண்டனிலும் பின்னர் இலங்கையிலும் பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது வரை ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வெளியேறிய நீண்ட வரலாற்றைக் கொண்ட லிற்றில் எய்ட் நீண்டகால முயற்சியைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிலையை எட்டுவதற்கு தனக்கு ஊக்கத்தை அளித்த லண்டன் லிற்றில் எய்ட் நிறுவனத்தினருக்கும் இம்முயற்சிக்கும் தனக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து உதவிய சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஹம்சகௌரி சிவஜோதி தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் அமைப்பானது மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கி அவர்களை பொருளாதார செயற்பாடுகளுக்கு தயார்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துவிடுவதன் மூலமும் அவர்களுடைய ஆளுமைகளை விருத்திசெய்வதன் மூலமும் அடுத்த தலைமுறையை செப்பனிடுவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதாக லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். அதனையொட்டிய சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் லிற்றில் மேற்கொள்வதாக மையத்தின் துணை இயக்குநர் பா கஜீபன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நாளை டிசம்பர் 17 அன்று “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவள் / எதிரானவன்” என்ற தொனிப்பொருளில் லிற்றில் எய்ட் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை கிளிநொச்சியின் மையப்பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தற்போது லிற்றில் எய்ட் இல் கல்விகற்கின்ற மாணவர்களும் லிற்றில் எய்ட் இன் பழைய மாணவர்களும் கூட்டாக ஈடுபடவுள்ளனர். கவனயீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் லிற்றில் எய்ட் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் திருநகர் லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெறவுள்ளது.

மாணவர்களுடைய வளர்ச்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் தமது ஆசிரியர்களையும் மேலதிக பயிற்சிகள் கற்கை நெறிகளுக்கு அனுப்பி அவர்களது திறனையும் ஆற்றலையும் வளர்ப்பதிலும் லிற்றில் எய்ட் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாணவ மாணவியரது வெற்றிக்குப் பின்னும் ஆசிரியர்களது உழைப்பு உன்னதாமானது. அந்த வகையில் லிற்றில் எய்ட் தனது ஆசிரியர்களது முன்னேற்றத்திலும் அவர்களது பொருளாதார எதிர்கால முன்னேற்றத்திலும் கவனம்கொண்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி மையமாக லிற்றில் எய்ட் க்கு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு லிற்றில் எய்ட் ஆசிரியர்களது அயராத உழைப்பைப் பாராட்டிய லிற்றில் எய்ட் தலைவர் க நத்தகுமார் (சிவன்) லிற்றில் எய்ட் தனது இலக்கில் தொடர்ந்து பயணிப்பதற்கான தொடர்ச்சியான பொருளாதார பலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் க நந்தகுமார் தலைமையில் லிற்றில் எய்ட் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு பலவகையிலும் ஒத்துழைத்தவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இன்னமும் அந்த ஆதரவை வழங்கி வருகின்றமைக்கு தனது நன்றிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் செயலாளர் ஆர் சுகேந்திரன், டொக்டர் பொன் சிவகுமார் மற்றும் லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமது தொழிற்கல்வி மையம் அடுத்த நிலைக்கு நகர முன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தற்போது கிளிநொச்சியில் முதன்மைத் தொழிற்கல்வி நிலையமாக வளங்களைக் கொண்ட நிலையமாக ஜேர்மன் ரெக் இருந்தபோதும் அங்கு கிளிநொச்சி மாணவர்கள் பெருமளவில் இல்லை. அந்த வகையில் இன்றைய நிலையில் கிளிநொச்சியில் கிளி மாணவர்களுக்கு இலவசமாக அங்கிகாரம் பெற்ற முன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வியை வழங்கும் முதன்மை நிறுவனமாக லிற்றில் எய்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் தன்னை முக்கியதொரு அங்கமாக இணைத்துள்ள லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையம்இ கிளிநொச்சி கல்வி வலயத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சி நெறியையும் அண்மையில் ஆரம்பித்துள்ளது. 40 முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் லிற்றில் எய்ட் இல் ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர். இவர்களுக்கான ஆங்கில வகுப்புகளை கனடாவில் மொழிபெயர்ப்பியலில் செயற்பட்ட தற்போது யாழ் பல்களைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக உள்ள மணி வேலுப்பிள்ளை வழங்கி வருகின்றார். இவர்களுக்கு ஆரம்ப கணணிப் பயிற்சியையும் அளிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை லண்டனில் உள்ள தொழிலதபர் ஒருவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் லிற்றில் எய்ட் இல் விடியோ எடிட்டிங் கற்கை நெறிக்காண கணணிகளையும் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் அதன் பெயருக்கமைவாக சிறிய நிறுவனமாக இருந்த போதும் அதன் செயற்பாடுகள் மிகவும் பரந்தும் ஆழமான தாக்கத்தை கிளிநொச்சி மண்ணில் ஏற்படுத்தி வருகின்றது. சுயதொழில் வாய்ப்பு பயிற்சி நெறிகள், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல், ஆளுமை தலைமைத்துவப் பயிற்சிகள், இளவயதுத் திருமணங்கள் – வீதி விபத்துக்கள் – போதைப்பொருள் பாவன தொடர்பான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என லிற்றில் எய்ட் ஒரு சமூக இயக்கமாக செயற்ப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்துவது, சமூக செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது என லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் பரந்து விரிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு லிற்றில் எய்ட் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையோடு முப்பது வரையான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிறார்களுக்கு கல்வி உதவி அளித்து வருகின்றது. அவ்வாறு உதவி பெற்ற மாணவர்கள் அண்மைய கபொத சாதாரண தரப் பரீட்சையில் சாதனை நிகழ்த்தி உள்ளனர். த புகழரசன் 9A, த கலைக்குமரன் 8A 1B, அ தர்சிகா 7A 2B, மா தேனன் 2A 5B 1C, சி நிரேகா 3A 3B 1C 1S எடுத்துள்ளனர். த புகழரசனின் பாடசாலை வரலாற்றில் இவ்வாறான பெறுமேறுபெற்றது இதுவே முதற்தடவை.இவர்களது அடுத்த கட்ட கல்விச் செயற்பாடுகளுக்கும் லிற்றில் எய்ட் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது.

லிற்றில் எய்ட் க்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சிறு உதவியும் சிந்தாமல் சிதறாமல் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதானாலேயே தான் தொடர்ந்தும் அவர்களுக்கு நிபந்தனையில்லாமல் முடிந்த உதவியை வழங்கி வருவதாக நீண்ட காலமாக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகின்ற பெயர்குறிப்பிட விரும்பாத லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போது லிற்றில் எய்ட் குடும்பத்துடன் ஜேர்மனியில் உள்ள நண்பர்களும் இணைந்து மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாய் லிற்றில் எய்ட் செயற்பாடுகளுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது லிற்றில் எய்ட் மாதாந்த செலவீனம் 6 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை லிற்றில் எய்ட் இலும் அதன் இலக்கிலும் நம்பிக்கை கொண்டபலர் செலுத்தி வருகின்றனர்.

இலங்கை இராணுவத்தின் பெருமையைப் பேணுவது அதனுடன் இணைந்த அனைவரினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.

 

இன்று (16) முற்பகல் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

 

தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ மரியாதை வழங்கி பெருமையுடன் வரவேற்கப்பட்டார்.

 

தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த உத்தியோகத்தர் பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் 98 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். மேலும் பயிற்சியை நிறைவு செய்த 274 கெடட் உத்தியோகத்தர்கள் இன்று அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். வெளிநாடுகளைச் சேர்ந்த 06 கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

 

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு வாளையும் வழங்கினார்.

 

1972 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி, அப்போதைய யுத்தப் பயிற்சி நிலையம் என்று அழைக்கப்பட்ட இந்த கல்வியற் கல்லூரிக்கு ஆற்றிய விலைமதிப்பற்ற மற்றும் போற்றத்தக்க சேவைக்காக முதன்முறையாக அப்போதைய ஜனாதிபதியாக இருந்த வில்லியம் கோபல்லவ அவர்களால் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டன.

 

மேலும், 1997 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால், அந்த ஜனாதிபதி வர்ணங்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு மீள்வழங்கல் மற்றும் புதிய கல்வியற் கல்லூரி வர்ணங்களும் வழங்கப்பட்டன. 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவையாக இன்று மீண்டும் வர்ணங்களை வழங்கிவைத்தார்.

 

பின்னர், கலைந்து சென்ற கெடட் அதிகாரிகளுடன் ஜனாதிபதி குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டார். இதனை முன்னிட்டு தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நட்டார்.

 

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை இராணுவம் பெருமை மிக்க வரலாற்றைக் கொண்ட திறமையான இராணுவம் எனவும், அதன் பெருமையைப் பேணுவது அதனுடன் இணைந்த அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

 

தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் அச்சமின்றி தலைமைத்துவத்தை வழங்குமாறு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இக்கட்டான காலங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும், அதனை மனதில் கொண்டு நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

 

தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரி சர்வதேச புகழ் பெற்ற ஒரு நிறுவனமாகும். அத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்தில் உங்கள் பயிற்சியை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இன்று முதல் இலங்கை இராணுவத்தில் இணைகிறீர்கள்.

 

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் 1948 முதல் இறையாண்மை கொண்ட நாடாக செயற்பட்டு வருகிறோம். அந்த இறையாண்மை கொண்ட நாட்டின் அதிகாரம் மக்களுக்குரியது. அரசாங்கங்கள் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும் இந்த நாடு இலங்கை தனித்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இலங்கையர்கள். இலங்கையர்களாகிய நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எமது தேசியத்தை பாதுகாப்பதுடன் இலங்கையர் என்ற நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும்.

 

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும்.

 

பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பு ஜனாதிபதி முதல் கீழ்நோக்கிச் செல்கிறது.

 

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும்.

 

இலங்கை இராணுவம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆசியாவில் நவீன இராணுவங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது.

 

1881 இல், இலங்கை காலாட்படை ஆரம்பிக்கப்பட்டபோது, ​​நாங்கள் அந்த நிலையை அடைந்தோம். மேலும், வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரிய போர்களிலும் நமது பாதுகாப்புப் படைகள் பங்கேற்றுள்ளன.

 

இந்த பெருமைமிக்க இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும். நீங்கள் தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அச்சமின்றி அந்தத் தலைமையை உங்களுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்குங்கள். உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக கடினமான காலங்களில்தான், தலைமைத்துவம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் கடமையை நினைவில் வைத்து நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுக்கும் செயற்பாட்டை பொலிஸார் செய்கின்றனர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதை நேற்றைய சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரினால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிர் தலைமையிலான குழுவினர் வருகைதந்து விளைவித்த குழப்பத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

 

இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலையும் மீறிய வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்பட்டதாகவும் இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில் !

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன.

மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், மாநாடு அதற்கு இணங்கியுள்ளது. இதனால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டு, பின்னர் நிரந்தரக் கட்டிடத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகதமிழர் பேரவை மற்றும் அதன் கூட்டாளிகளின் துரோக முயற்சியை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.” – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிக்கை !

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் கூட்டாளிகளின் துரோக முயற்சியை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் – அவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை-என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கூட்டாக விடுத்துள்ள அறிக்கையொன்றில் புலம்பெயர் அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

2009 ஆம் ஆண்டு, தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உலகளாவிய தமிழ் குடை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உலகளாவிய தமிழ் அமைப்புகள் உணர்ந்தன. ஆரம்பத்தில், அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படை வேணவாக்களை முன்னேற்றுவதற்காக உலகத் தமிழர் பேரவையை (GTF) உருவாக்கினர்.

 

ஒரு சில ஆண்டுகளுக்குள், GTF ஒரு சில நபர்களால் சனநாயகமற்ற முறையில் கையகப்படுத்தப்பட்டதனால், தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படையான வேணவாக்களிலிருந்து விலகியது. இதன் விளைவாக, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தவிர மற்ற அனைத்து அங்கத்துவ அமைப்புகளும் GTF இலிருந்து தாமாகவே விலகிக்கொண்டதனால் இந்த அமைப்பை அடிமட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவின்றி நிற்க வழிவகுத்தது. இன்றுவரை, GTF மற்றும் CTC ஆகிய இரண்டும் நடந்த இனப்படுகொலைக்காக அல்லது தமிழ் மக்களின் நியாயமான மற்றும் அடிப்படை கோரிக்கைகளுக்காக வாதிட மறுத்துவிட்டதன் மூலம், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தமிழ் மக்களைக் கைவிட்டுள்ளனர்.

பின்னர், GTF இலிருந்து வெளியேறிய 14 நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை அனைத்துலக ஈழத்தமிழர் அவையை (ICET) உருவாக்கினர். இதில் 2008 முதலாவது மக்களவை ஆரம்பிக்கப்பட்டு இன்று 14 நாடுகளில் மக்களவைகள் இயங்குகின்றன இது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து வாதிட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல், ICET உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியையும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நீண்டகால அரசியல் தீர்விற்காகவும் அங்கம் வகிக்கும் நாட்டு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை மோசமாகி, அவர்களின் தாயகத்தில் அடிப்படை உரிமைகள் அற்ற திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையினால் ரத்துசெய்யுமாறு பணிக்கப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நினைவுகூரும் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது.

தொல்பொருள் திணைக்களம் மற்ற மதத் தலங்களை அழித்து, அந்த புனிதத் தலங்களுக்குப் பதிலாக பௌத்த நினைவுச்சின்னங்களைக் இரவோடிரவாக திணித்து அந்த இடங்களை பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு உரிமை கோருகிறது. பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழர் தாயகத்தில் 1000 பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

கடந்த ஏழு தசாப்தங்களில் தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ததற்கான நீண்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

அவ்வாறாயினும், தீர்மானங்களின் பரிந்துரைகள் எதிலும் இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உறுதியான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் உள்ள 30 சரத்துக்களையும், இலங்கை தண்டனையின்றி மீறியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு காரணமான ஒவ்வொரு சிங்கள சிப்பாயையும் பாதுகாப்பதாக சபதம் செய்து இலங்கையில் தற்போதைய தலைமை உட்பட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தன.

எனவே, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை எந்த வகையிலும் உண்மையான நீதியை நிலைநாட்டும் அல்லது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது.

2024 ஆம் ஆண்டில், UNHRC க்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை ஏமாற்ற விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, GTF மற்றும் அதன் சதிகாரர்களின் சில தனிநபர்களின் துரோக முயற்சியானது, ஏமாற்றுக்காரர்களுடன் பேரம் பேசும் போலிக்காரணத்தின் கீழ் இலங்கையை சர்வதேச சமூகத்திலிருந்தும் UNHRC ஆய்விலிருந்தும் பாதுகாக்கும் வெறுக்கத்தக்க முயற்சியாகும்! தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் சீர்குலைக்கும் முயற்சியே இந்த “நிகழ்ச்சி.”

இந்த ஏமாற்று முயற்சிகளை புறக்கணிக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அரைகுறையான தீர்வு தமிழ் தேசத்தின் பாதுகாப்பை மேலும் சீரழிக்கும். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் பரிகார நீதியை வழங்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண உதவ வேண்டும்.

“கொவிட் பெருந்தொற்று தாக்கம்,பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள்.” – பஷில் ராஜபக்ஷ

விமர்சனங்களை கண்டு பொறுமையாக இருப்பதால் எம்மை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம்,பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்,முன்னாள் நிதியமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2016 ஆம் ஆண்டு பாரிய சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டு பாரம்பரியமான அரசியல் கட்சிகளை வீழ்த்தி சகல தேசிய தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிப்பெற்றோம். ராஜபக்ஷகளுக்கு எதிராக கடந்த ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட சகல வன்முறைகளையும் மக்களாணையுடன் வெற்றிக் கொண்டு வெற்றிப்பெற்றுள்ளோம்.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சகல தேசிய தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.பொதுஜன பெரமுனவே பலமான அரசியல் சக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.ஆட்சியில் உள்ளபோதும்,ஆட்சியில் இல்லாத போதும் நாங்கள் எவர் மீதும் வைராக்கியம் கொள்ளவில்லை.பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு அரசியல் பழி தீர்க்கப்பட்டது.எமது கட்சி ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.இவற்றுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.

30 வருடகால பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்து பஸில் ராஜபக்ஷர்களே நாட்டை அபிவிருத்தி  செய்தார்கள்.இந்த உரிமையை எவருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.சமூக வலைத்தளங்களில் எம்மீது சேறு பூசப்படுகிறது.நாங்கள் பல விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகிறோம்.

விமர்சனங்களை கண்டு அமைதியாக இருப்பதால் எவரும் எம்மை கோழைகள் என்று கருத கூடாது.சிங்கத்தை சீண்டினால் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.எமது அரசியல் எழுச்சி அடுத்த ஆண்டு உறுதிப்படுத்தப்படும் என்றார்.

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” – மஹிந்த ராஜபக்ஷ

“எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு சுஹததாஸ உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை எமது பாரிய பலமாகும்.எமது நம்பிக்கையை மக்கள் பாதுகாத்துள்ளார்கள்.பாரிய சவால்களுக்கு மத்தியில் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பது பலவிடயங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் விமர்சனங்கள், தவறான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளோம்.போலியான குற்றச்சாட்டுகள்,சேறு பூசல்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்தோம்.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நான் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் ஒருசில அரச தலைவர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.ஒருசிலர் பிரபாகரனுக்கு ஆயுதம் வழங்கி புலிகளின் போராட்டத்தை தூண்டி விட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ்,சி;ங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை ஏற்படுத்தினேன்.பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். இவ்வாறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மாற்றத்தை  எதிர்பார்த்தார்கள். நான் அதற்கும் இடமளித்தேன்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எமது பொருளாதார கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.தவறான தீர்மானங்கள்,காட்டிக் கொடுப்புகள் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தின. 2015 ஆம் ஆண்டு அரசாங்கமே வரையறையற்ற வகையில் வெளிநாட்டு கடன்களை பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.

2019 ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்ட நிதி நிலைமையை நாங்கள் பொறுப்பேற்றோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம்.பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டு அரகலய என்பதொன்றை தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதியின் ஆடையை அணிந்துக் கொள்ள இன்று பலர் தயாராகவுள்ளார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல், தப்பிச் சென்றவர்களிடம் மக்கள் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.

ஒருசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களை தவறான வழிநடத்துகிறார்கள்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைய அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

எமது கைகளில் இரத்தக் கறையில்லை.புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ்,முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்.எமது பயணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.