28

28

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவி – வௌ்ளை மாளிகை அனுமதி !

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளுக்கு வௌ்ளை மாளிகை அனுமதி அளித்துள்ளது.

 

இதில் வான் பாதுகாப்பு, ஆட்டிலரி மற்றும் ஆயுதங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ரஷ்யாவுடனான போரில் மேற்குலக நாடுகளின் உதவிகள் கிடைக்காவிட்டால் போர் முயற்சி மற்றும் தனது திறைசேரி மிகவும் ஆபத்தான நிலையை அடையுமென உக்ரைன் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதேவேளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவே தொடர்ந்தும் உக்ரைனுக்கு போர் உதவிகளை வழங்கி போரை தூண்டுகிறது என குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

 

இருப்பினும் இதற்கு பல எதிர்ப்புக்கள் வெளியானதை அடுத்து திருத்த முன்மொழிவுகள் கோரப்பட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

 

எவ்வாறாயினும் அன்றையதினம் இணையப் பாதுகாப்பு சட்டமூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது. எனவே இந்த திருத்தங்கள் அடங்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஜனவரியில் சமர்ப்பிப்பதாக விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க விசேட அறிக்கை மார்ச் மாதத்தில் என்கிறார் ஜனாதிபதி ரணில்!

நாடு எதிர்நோக்கும் இரு முக்கிய சவால்களில் ஒன்று நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றொன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே கட்சி வேறுபாடின்றி இந்த இலக்குகளை அடைவதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளை நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

 

இதற்கு தீர்வு காணும் பொருட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.