கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் பொலிஸார் விபரம் கோருவது குறித்தும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும் குறித்த விபரத்தில் என்ன சமயத்தவர் என்று கேட்பது தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து அனுப்பவா என்றும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதேநேரம் குறித்த பதிவு நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று பாராளுமன்றத்தில் , அதிகரித்து வரும் குற்றச் செயல்களை அடுத்து இலங்கையின் முழு மக்களும் பொலிஸில் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
“எந்த இனத்தவர் என்பதை பொருட்படுத்தாமல் முழு மக்களையும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட பதிவு படிவங்கள் விநியோகிக்கப்படுவதை நான் பார்க்கிறேன்,” எனவும் அவர் தெரிவித்தார்
எவரையும் எந்த நேரத்திலும் அடையாளம் காணக்கூடிய வகையில் இலங்கை மக்கள்தொகையின் இணையத் தரவுத்தளத்தை நாங்கள் உருவாக்குவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.