23

23

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே சர்வதேச சமூகத்திற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது.  இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக தெளிவாக சொன்னது இவை அனைத்தும் ஒரு நாடகம், இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படடுள்ள நிலையில் பிச்சை கேட்கும் நாடாக மாறியிருக்கின்ற நிலையில் இந்த நிலைமை உருவாகுவதற்கான அடிப்படை காரணமே இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அதுவொரு யுத்ததிற்கு இட்டுச் சென்று இறுதியில் அந்த யுத்திற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தான் கடனுக்குள் இலங்கை மூழ்குவதற்கு முக்கிய காரணியென்றும் இன்று வரவு செலவிட்டத்தில் சுமார் 15 வீதம் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகின்றது. என்றால் நாடு முன்னேற முடியாது, இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்ட சூழலில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே தவிர ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் இந்த பிரச்சினையை தீர்க்கமாட்டார் என்று கூறி நாங்கள் சவால் விட்டோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாகயிருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர் தேசத்தினை அங்கீகரிக்கின்ற இறைமையினை அங்கீகரிக்கின்ற ஒரு சமஸ்டி தீர்வு, பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி இந்த பிரச்சினை சமஸ்டியின் அடிப்படையில் தீர்க்கப்படுவதாக அமையும் என்ற உண்மையினை ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்களுக்கு வெளிப்படையாகவே கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியும்.

 

அதனை செய்யாமல் வெறுமனே தீர்வுக்கு வாருங்கள் பேசுவோம்,பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினை கொடுப்போம் என்பதெல்லாம் பம்மாத்து, அப்பட்டமான பொய்கள், சர்வதேச நெருக்கடிகளை சமாளித்தப்பது மட்டுமேயாகும். அதனாலேயே பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு மறுத்தோம். நாங்கள் ஏமாறுவதற்கும் தயாரில்லை, ஏமாற்றப்படுவதற்கும் தயாரில்லை.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்ததேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக மட்டும் செல்லும் இந்த பாதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. எங்களை ஏமாற்ற முடியாது என்பதற்காக எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை.

 

அதற்காக ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார் ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் சரியா கண்டுபிடித்துள்ளார்.

 

ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் தொடக்கம் கூறிவந்த பொய்யை நேற்றைய சந்திப்பில் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

அடுத்த தேர்தலின் பின்னர் ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்குவேன் என்று கூறியிருக்கின்றார். கடந்த ஒன்றரை வருடமாக சொன்ன பொய்யை நம்பி ஏமாந்தவர்கள் தற்போது கூறும் புதிய பொய்யையும் நம்பி ஏமாறப்போகின்றார்களா? என்ற கேள்வியிருக்க இவ்வாறான ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம்.

 

தற்போது இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தயாரில்லை, தேர்தலின் பிறகுதான் பேசலாம் என்று ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தெளிவான செய்தியை வழங்கிய பின்னரும் தமிழர் தரப்பு அவருக்கு முன்டுகொடுக்குமானால் வெறுமனே ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று நிரூபிக்கப்படும்.

 

தயவுசெய்து நீங்கள் எடுக்கும் தமிழ் வாக்குகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ஸ தரப்பையும் தொடர்ந்து காப்பாற்ற வேண்டாம்.

இந்த 13 ஆவது திருத்தம் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கின்ற விடயம் அதில் உச்ச நீதிமன்றம் ஆழமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் கிட்டத்தட்ட முப்பது தீர்ப்புகள் இந்த 13 ஆம் திருத்தத்திற்குள் அதிகாரம் பகிரப்பட முடியாது ஒற்றையாட்சி இருக்கும் வரைக்கும் அதிகார பகிர்வு நடக்கவே நடக்காது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்ற சூழ்நிலையில் அந்த உண்மை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பலப்படுத்தி இன்று மக்களும் அதை உணரத் தொடங்கி இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ தாங்கள் சரியானதற்காக தான் தொடர்ந்தும் இருப்பதாக காட்டிக் கொல்வதற்காக இப்போது 13 ஆவது திருத்தம் என்பதனை பெரிய அளவில் வலியுறுத்தாமல் அவர்கள் ஒரு புது உபாயத்தை இன்று நமது மக்கள் மத்தியில் காட்டப் போகின்றார்கள்.

 

அது என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்கின்ற புதிய கோஷத்தை கதைப்பதன் ஊடாக 13 ஆம் திருத்தத்தை மெல்ல அமைதியாக வலியுறுத்துவதை மூடி மறைக்கலாம் என்று நினைக்கின்றார்கள்.

 

அனைவருக்கும் தெரியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்ந்த மற்றைய அனைத்து தரப்பினர்களும் 13 ஆவது திருத்தையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர். நாங்கள்தான் அதனை பிரித்து பார்க்கின்றோம். நாங்கள் தான் கூறுகின்றோம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை அதில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை.

 

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற பெயரிலே கொண்டு வந்திருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை தான் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

 

அந்த வேறுபாட்டை நாங்கள் தெளிவுபடுத்தி இந்தியாவிடமும் எமது மக்களிடமும் தெளிவாக கூறியிருக்கின்றோம். இலங்கை அரசிடமும் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதில் ஆரம்பப் புள்ளி கூட இல்லை. இந்த யதார்த்தம் மக்கள் மத்தியில் இன்றைக்கு தெளிவாகிக் கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் அதே நேரம் இந்த தமிழ் தரப்புகள் தொடர்ந்து 13 வலியுறுத்த விரும்புகின்ற ஆனால் வெளிக்காட்ட முடியாது தேர்தலும் வருகின்றது தேர்தலில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தி சென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்கின்ற பயம் இருக்கின்றது இதனால் அவர்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் கெட்டித்தனமாக 13 பெரிதாக கதைக்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னால் அதிலிருந்து தப்பலாம் என நினைக்கின்றார்கள்.

 

தமிழருக்கு நன்றாக தெரியும் இந்த ரணில் விக்ரமசிங்க எதுவுமே செய்யப் போவதில்லை என்று அவருக்கு ஒரு எண்ணம் இருந்தாலும் கூட ஒன்றும் செய்ய மாட்டார்.

 

ஏனென்றால் தேர்தல் வரப்போகின்றது தேர்தலில் வெள்ளம் வேண்டும் என்பதனை தான் சிந்திக்கப் போகின்றார். ஆகவே கடைசி வரைக்கும் அவருக்கு எண்ணம் இருந்தாலும் அவர் செய்யப் போவதில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட எண்ணமே கிடையாது.

 

இதனை தெளிவாக விளங்கிக் கொண்டுதான் நாங்கள் தொடர்ச்சியாக இவருடைய ஆட்சியை நம்பாதீர்கள் இவருடைய வார்த்தைகளை நம்பாதீர்கள் என மக்களுக்கு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகின்றோம்.

 

இந்த ரணில் விக்கிரமசிங்க நம்பாதீர்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் கூட 2005 ஆம் ஆண்டு எமது மக்களிடம் சொன்னார்கள்.

அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த உண்மையை மக்களிடையே சொல்ல மக்கள் குழம்பி விட்டனர். தமிழ் ஆய்வாளர்கள் குழம்பினர். ஏதோ புலிகள் வந்து பிழையாக இந்த விடயங்களை கணக்குப்போகின்றார்கள் என்று. எந்த அளவு தூரத்திற்கு ஒரு தீர்க்கதரிசனம் என்பது இன்று இந்த ரணில் விக்ரமசிங்கவின் செயல்பாடுகளினால் நிரூபித்து இருக்கின்றார். அதுதான் உண்மை.

 

ஆகவே இந்த ரணில் விக்கிரமசிங்கமிடம் வந்து உண்மையைக் கூறினால் எதையும் எதிர்பார்க்க முடியாது ராஜபக்ஷர்களிடம் எதிர்பார்ப்பதை போன்று ரணில் விக்கிரமசிங்கமிடம் இருந்து எதிர்பார்ப்பது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏதோ உள் மனதிலே செய்ய வேண்டும் என நினைத்தால் அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தால் ஆக குறைந்தது இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே ஆண்டாண்டாக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாமல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லாத போலியான பொய்யான வாக்குமூலம் பெற்று சிறையில் இன்று வாடிக் கொண்டிருக்கின்ற நம்முடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

 

அதை செய்து இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீங்களே வந்து மிக கொடூரமான ஒரு சட்டம் என்று சொல்கின்ற நிலையில் அதற்காவது மதிப்பு கொடுங்கள். 2015 இல் உங்களுடைய அரசாங்கம் உலகத்துக்கு சென்று கூறியது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்துவோம் என்று அந்த சட்டத்தை அமல்படுத்துவது யாவது அந்த சட்டத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 11 பேரை கைது செய்தீர்கள். சர்வதேச மட்டத்திலேயே வருகின்ற கடும் அழுத்தத்தினால் ஒரு சிலரை பிணையில் விடுவித்து இருக்கின்றீர்கள்.

 

அந்த விடயத்திலாவது ஒரு மனசாட்சியை தொட்டு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கைகளை வாபஸ் பெறுங்கள் என்பதை நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். ஆக குறைந்தது வேறு ஒன்றும் வேண்டாம். எனில் எமக்குத் தெரியும் நீங்கள் ஒன்றும் செய்யப் போவது இல்லை என்று. எங்களது மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் நமது மக்களும் ஏமாறக்கூடாது எதையும் எதிர்பார்க்க வேண்டாம் செய்யப் போவதில்லை இதையாவது செய்யுங்கள்.

 

நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள் இது ஒரு மிக மோசமான கொடூரமான ஜனநாயக விரோதமான சட்ட ஒழுங்குக்கு மாறான ஒரு சட்ட வரைவு என்பதனை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்ற வகையில் ஆகக் குறைந்தது நடந்த அநியாயம் கடந்த மாதம் நீங்களே அனுமதித்த நீங்களே கூறினீர்கள் நினைவு கூறலாம் என்று அப்படிப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் தொடர்ந்து நீங்கள் பிடிக்கிற தன்மையை நிறுத்துங்கள் பிடித்திருப்பவர்களை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்தார்.

அரசியல் தீர்வற்ற வெறும் நல்லிணக்கக் கொடியைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள் – ஜனாதிபதியிடம் இரா.சம்பந்தன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஒப்பந்தமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் தீர்வற்ற வெறும் நல்லிணக்கக் கொடியைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள் எனவும், நாம் தொடர்ந்தும் ஏமாறத் தயாரில்லை என்றும் இரா.சம்பந்தன், ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கடும் தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின் இந்த நாட்டுக்கு எதிராகச் சர்வதேச சமூகத்தை நாங்கள் நாடுவோம். எனவே, அந்த நிலைமைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

மாகாண சபைகள் வெள்ளை யானை அல்ல. அவற்றுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – முன்னாள் தேர்தல் ஆணையாளரஷ் மகிந்த தேசப்பிரிய

இலங்கையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீப்பிள்ஸ் பவுண்டேசன் (Peoples Foundation) ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் கண்டியில் இடம்பெற்ற செயலமர்வில் அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் அதிபர் மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர்.

 

மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும். தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவுசெய்தலை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அநேகமானோர் மாகாண சபையை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1வீதமளவே செலவாகுகின்றது” எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வேகம் எடுக்கும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு – மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

 

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.​

 

எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

 

காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.

 

ஆகவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

லக்ஸம்பேர்க் இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த J N 1 OMICRON உப பிறழ்வு தற்போது இந்தியாவில் பரவி வருகின்றது.

 

இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2660 ஐ கடந்துள்ளது.

 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவிய இந்த உப பிறழ்வு தற்போது கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொவிட் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் J N 1 கொரோனா பிறழ்வு கவனம் செலுத்தப்பட வேண்டிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஒரே வாரத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் 3500க்கும் அதிகமானோர் கைது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் 4665 பேரில் 06 நாட்களில் மாத்திரம் 3640 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பாக மேலும் பொதுபாதுகாப்பு அமைச்சு அறியத்தருகையில்,

 

“போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்கள்,சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகளுக்கமைய 2023.12.22. முதல் 2023.12.23 அதிகாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1967 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய (2023.12.22 முதல் 2023.12.23.அதிகாலை) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளுக்கமைய 692 கிராம் ஹெரோயின்,393 கிராம் ஐஸ் , 42 கிலோகிராம், 100 கிராம் கஞ்சா, 235,680 கஞ்சா செடிகள், 438 கிராம் ஹசீஸ்,11 கிலோ கிராம் மாவா,534 கிராம் உஸ்,32 கிராம் தூள், 01 கிலோகிராம்,200 கிராம் போதை குழிசைகள் மற்றும் 20,615 போதைப்பொருள் குழிசைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 1676 பேரில் 119 சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.

 

அத்துடன், 45 சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 

மேலும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள 112 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

அத்துடன், காவல்துறை போதைப்பொருள் தடுப்பு மற்றும் விசேட அதிரடி படையினரின் பெயர் பட்டியலில் இருந்த 132 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

போதைப்பொருள் வர்த்தகம்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினர் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் 4665 பேரை அடையாளப்படுத்தியுள்ளனர்.

 

மேல்மாகாணத்தில் 1625 பேர்,தென்மாகாணம் 509 பேர்,மத்திய மாகாணம் 346 பேர்,வடக்கு மாகாணம் 312பேர்,சப்ரகமுவ மாகாணம் 414 பேர்,ஊவா மாகாணம் 331 பேர், வட மத்திய மாகாணம் 381 பேர், வடமேல் மாகாணம் 394 பேர்,கிழக்கு மாகாணம் 353 பேர் என்ற அடிப்படையில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாடளாவிய ரீதியில் உள்ளார்கள்.

 

கடந்த 17 ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை (22) வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 3640 போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற இரு அதிகாரிகள் கைது !

போதைப்பொருள், சிகரெட், பீடிகள் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலையின் தொழிற்கல்வி ஆலோசகர் மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

 

விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களிடமிருந்து 110 மில்லி கிராம் போதைப்பொருள் , 2 பிடிகள் , ஒரு சிகரெட் பெட்டி , சிறிய கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைதானவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் கைது !

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

 

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவராவார்.

 

இவர் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் இதுவரை பட்டம் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

கண்டி, கண்ணொரு பிரதேசத்தில் ஹாஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடத்திலிருந்து 15 கிராம் நிறையுடைய ஹாஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இவர் கண்டி, முறுத்தலாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சோதனையின் போது இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.