09

09

இலங்கையில் போதைப்பொருள் பாவனை குற்றங்களுக்காக போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது !

இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

 

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

 

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு !

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நா – வீட்டோவை பயன்படுத்தி நிராகரித்த அமெரிக்கா !

காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தாக்குதலானது 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த பிறகு, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், 1971ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஐ.நா சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய குட்டெரெஸ், காசா அதன் உடையும் புள்ளியில் உள்ளது என கவுன்சிலை எச்சரித்தார்.  அத்துடன் பல லட்சம் அவநம்பிக்கையான மக்கள் மிகவும் மோசமான பட்டினியின் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இவை பொது அமைதியை பாதிக்கும், மக்களுக்கு எகிப்தை நோக்கி இடம்பெயரும் அழுத்தத்தை உருவாக்கும் என ஐ.நா நம்புவதாக தெரிவித்தார்.

 

இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. ஹாமஸ் படையினரிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை  அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக பேசி இருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட், போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் ஈழப் போராட்டமும் – கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்!

நாளை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தேசம் ஊடகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐநா செயலாளார் நாயகம் அன்ரனியோ பூட்ரஸ் அவர்களின் ‘யுத்த நிறுத்தம்’ வேண்டும் என்ற அவசர தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. பிரித்தானியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தது. அமெரிக்கா பிரித்தானியா மற்றும் அவற்றின் நேசநாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தன்னை ‘Genocide Joe’ என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சர்வதேசப் பின்னணியிலேயே இக்கருத்துப் பகிர்வு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 தொடக்கம் இரவு 7மணி வரை 10th village way, Rayners Lane, Pinner இல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், முரண்பட்ட அரசியல் பின்புலத்திலிருந்து தங்கள் அனுபவங்களை வளவாளர்கள் பகிரவுள்ளனர்.

நிகழ்வுக்கு தேசம் எழுத்தாளர் த. ஜெயபாலன் தலைமைதாங்கவுள்ளார். ஒடுக்குமுறைகளும் மக்கள் எழுச்சிகளும் எனும் தலைப்பில் எழுத்தாளரும் Committee for Workers International கட்சியின் International Secretariat ட்டருமான சேனன் உரை நிகழ்த்தவுள்ளார்.

யூடாயிசம் – சியோனிசம் – சர்வதேசம் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் சட்ட வல்லுனருமான சையத் பஷீர் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஹொலக்கோஸ்ட் முதல் காசா வரை : ஜேர்மனியின் அரசியல் போக்கு எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உரை நிகழ்த்தவுள்ளார்.

பாலஸ்தீன – ஈழ மக்களின் எதிர்காலமும் சர்வதேசத்தின் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் Asatic.org இன் Academic Secretriatரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் உரை நிகழ்த்தவுள்ளார்.

வளவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும். தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும் நெருக்கமான உறவுகள் காணப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சிகளை அழித்தது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் இன்னமும் எம்மத்தியில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுமாறு ஆர்வலர்கள் அனைவருக்கும் தேசம் அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் மக்களும் ஒரு நீண்ட போராட்டத்துக்கூடாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் மேற்குநாடுகள் அனைத்தும் இஸ்ரேல் உடன் ஒன்றிணைந்து பாலத்தீனமக்களை கொண்றொழிக்கும் இந்த இனப்படுகொலையைக் கண்டிப்பது ஒவ்வொரு மனிதாபிமான மிக்க மனிதனதும் கடமையும் பொறுப்பும். இவ்வாறான இனப்படுகொலைகளை கண்டிக்கத் தவறுவது இவ்வாறான படுகொலைகள் தொடருவதற்கும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும்.

காசாவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இஸ்ரேலிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் !

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்  வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை,எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என   உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா மத்திய தரைமனித உரிமை கண்காணிப்பாளர் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைதுசெய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார்.

இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.