06

06

பொருளாதார நெருக்கடி எதிரொலி – கல்விச் சூழலில் இருந்து இடைவிலகும் ஆண் மாணவர்கள்!

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் இருந்து மாணவர்கள் குறிப்பாக ஆண் மாணவர்கள் இடைவிலகும் வீதம் அதிகரித்துள்ளதுடன் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் பல்வேறு காரணிகளினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள்ளதாக ஜே .வி.பி. எம்.பி.யான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் கல்வித்துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கல்வித்துறைமை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை நிறைவு செய்வது முழுமையடையவில்லை.அதன்பின்னர் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

 

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் இருந்து மாணவர்கள் குறிப்பாக ஆண் மாணவர்கள் இடைவிலகும் வீதம் அதிகரித்துள்ளது..பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் இலாபமடையும் நோக்கத்துடன் செயற்படுகின்றன.நிர்வாக கட்டமைப்பின் மோசடியால் மாணவர்கள் தான் இறுதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

உணவுகள், உரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் மிகவும் அசாதாரண செயல் – ஹர்ச டி சில்வா விசனம்!

நாட்டில் போசாக்கான உணவுகள், உரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் மிகவும் அசாதாரண செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்

“வரி வருமானம் அத்தியாவசியம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனாலும் வரி அறவிடும் முறையில் சாதாரணத் தன்மை ஒன்று இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

பிரதானமாக பிள்ளைகளின் போசாக்கிற்கு தேவையான உணவு வகைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. உரங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் ஈடுப்படுவர்களுக்கான டீசல் மற்றும் உரங்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும்.

அடுத்ததாக மருத்துவ பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவனைகளுக்கு பொருட்கள் கொண்டு வரப்படும் போது அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்கும்.

தனியார் மருத்துவனைகளுக்கு பணக்காரர் ஏழைகள் என அனைவரும் செல்கின்றார்கள். மருத்துவ உபகரணங்கள் இல்லாமையால் அரச மருத்துவனைகளில் அதிகமான பரிசோதனைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

ஆகவே தனியார் மருத்துவனைகளிலேயே பரிசோதனைகளை செய்ய வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் குறித்த மருத்துவ பொருட்களுக்கு வரி அறவிடுதல் மிகவும் அசாதாரணமாக விடயம்” என தெரிவித்துள்ளார்.

மயிலத்தடு மேய்ச்சல் தரை பிரச்சினை – 80க்கும் அதிகமான கால்நடைகள் கொலை – கண்டுகொள்ளாத அரசாங்கமும் அதிகாரிகளும் !

தமது போராட்டம் கடந்த 82 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இது வரை 80 க்கும் மேற்பட்ட பசுக்களை தாம் பறிகொடுத்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர்.

தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு கோரி சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 82 நாட்களாக பண்ணையாளர்கள் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

அந்தவகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச சார்பான அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் குறித்து மௌனிகளாக இருந்துவருவது கவலைக்குரியது.

 

சட்ட விரோத குடியேற்றக்காரர்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும் அதனை செய்படுத்த பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவில்லை. அதுமட்டுமில்லாது எமது கால்நடைகள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டாளும் அவர்கள் எமது முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. பொலிஸார் வந்துபார்த்துவிட்டு செல்கின்றார்களே தவிர தாக்குதல் நடாத்துவோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 

இதன்காரணமாக பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதால் மனநோயிக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

பழைய பொருளாதார முறைகளை நாம் கைவிட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பழைய பொருளாதார முறைகளை தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அரச அதிகாரிகளும், முழு நாட்டு மக்களும் பெரும் தியாகங்களைச் செய்தனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 

இம்மாத நடுப்பகுதியில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிக்க உள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின்படி முன்னேற வேண்டும்.

 

அப்படி இல்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது. மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்த்தை எட்ட முடியாது.

 

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அரசின் செலவினங்களை குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை தயாரித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – பாடசாலை பணியாளர் கைது !

புத்தளம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவனிடம் கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் குறித்த பாடசாலையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் புத்தளம் – லுணுவில பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் மாணவர்களிடம் ஆபாச காட்சிகளை காண்பிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொள்ளவுள்ளனர்.