பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி தேரா காஜி கான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் மாகாணமாக உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் பலர் காணாமல் போவதாகவும், அரசே பயங்கரவாத அமைப்பு போல தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் பலூச் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பலூச் மக்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவது, போலி என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வது என பலூச் இனப்படுகொலையில் பாகிஸ்தான் அரசு ஈடுபடுவதாகவும், இதனை பலூச் தேசம் ஒருபோதும் ஏற்காது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்கள் கைகளில் காணாமல் போன தங்கள் குடும்பத்தவர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் யாக்ஜேட்டி கவுன்சில் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ”தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆனால், இதில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீசார் நகரின் நான்கு வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் மக்களுக்கு தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அந்த கவுன்சலின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தேரா காஜி கானில் டிசம்பர் 19ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.