17

17

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பிற்கு வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு கிராமத்தை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வருகைதந்ததாகவும் அதற்கு தாமும் மக்களும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

திவ்லபொத்தானை கிராமத்தில் சிங்கள மக்கள் பல வருடங்களாக விவசாயம் செய்துவருகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இந்த விவசாய செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். குறித்த விவசாய நிலங்களை தமிழ் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்தை கால்நடைகளுக்காக வழங்கினால் சிங்கள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள். அதற்கு எதிராகவே நான் குரல் கொடுத்து வருகின்றேன்.

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம் | Pillaiyan Support Sinhalese Mayilathamaadu Affair

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்திலும் தம்மை பாதுகாத்தார்கள். அன்று முதல் தமிழ் மக்களுடன் நான் இருந்துள்ளேன். எனினும் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  இது மிகவும் தவறானது. தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் எமது பங்காளிகள். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு சிதைந்துவருவதால் தற்போதைய ஆட்சியாளர்கள் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் ஏனைய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் இனவாதம் பேசவில்லை. நாடு நெருக்கடியில் இருக்கும் தருணத்தில் இதுபோன்ற செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்  மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளைக்கொடியுடன் வந்த பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் – எதிர்ப்புப்போராட்டத்தில் மக்கள் !

வெள்ளை கொடியுடன் காணப்பட்ட பணயக்கைதிகளையே இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் மேற்கொண்ட இராணுவநடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக்கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

யொட்டாம் ஹைம் சமெர் தலக்கா அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூன்று பணயக்கைதிகளும் ஒரு கட்டடிடத்திலிருந்து சேர்ட் இல்லாமல் வெளியே வந்தனர் ஒருவரின் கையில் தடியுடன் வெள்ளை கொடி காணப்பட்டது என்ற விபரம் தெரியவந்துள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பத்து மீற்றர் இடைவெளியில் காணப்பட்டதால் படைவீரர் ஒருவர் அச்சமடைந்தார் அவர்கள் பயங்கரவாதிகள் என அறிவித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் இருவர் உடனடியாக கொல்லப்பட்டனர் காயமடைந்த மற்றைய நபர் கட்டிடத்திற்குள் ஓடினார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

கட்டிடத்தின் உள்ளேயிருந்து ஹ{ப்ருமொழியில் கூக்குரல் கேட்டது  அந்த பிரிவிற்கான தளபதி உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் எனினும் காயமடைந்த மூன்றாவது நபர்வெளியே வந்ததும் உடனடியாக சுடப்பட்டார் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகளை ஹமாஸ் கைவிட்டிருக்கவேண்டும் அல்லது ஹமாஸ் உறுப்பினர்கள் தப்பியோடியிருக்கவேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இஸ்ரேலில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்

டெல்அவியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் தாயகம் கொண்டுவாருங்கள் என கோசமிட்டுள்ளனர்.

 

 

 

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதல் – இரண்டு பெண்கள் பலி!

காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும்  கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும்  Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என  Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர் காயமடைந்த ஒருவரைதூக்கிசெல்லப்பட்டவர் கொல்லப்பட்டார்என Latin Patriarchate of Jerusalem  தெரிவித்துள்ளது.

எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு வாளுடன் தயாராக இருந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது !

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலைச் சேர்ந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறைப் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞனே வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டுக் கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரை கண்டதும் வாள் வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.

பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிகரிக்கப்படும் வற் வரியானது மேலும் அதிகளவான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்காரணமாக அமையும் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வற் வரியானது, சுகாதாரத்துறைக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில், பல பொருட்களுக்கு புதிதாக 18 வீத வரி விதிப்பது, பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

அம்புலன்ஸ்கள், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களான ஊன்றுகோல், செவிப்புலன் கருவிகள் ஆகியவை, ஜனவரி முதல் புதிய வரிக்கு உட்பட்டது.

‘சுகாதாரத்துறையின் மீது தேவையற்ற சுமைகளை சுமத்துவதன் மூலம், நோயாளர்களுக்கு வழங்க வேண்டிய நன்மைகள் தொடர்பில் பிரச்சினைகள் உருவாக்குகின்றன. இதனால், நாட்டின் சுகாதாரத்துறை, நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்.

‘இறுதியில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அந்த மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.’

அத்துடன், வரி அதிகரிப்பு காரணமாக, மேலும் அதிகளவான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவுறுத்தல் !

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் காவல்துறையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த விடையம் தொடர்பில் உடன் நடைமுறையாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் தொடரும் அடைமழை – 1300 குடும்பங்கள் பாதிப்பு !

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், கரைச்சி – கண்டாவளை பகுதிகளிலேயே பாதிப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அந்த வகையில், மாயவனூர் பகுதியில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும், மலயாளபுரம் பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், செல்வாநகர் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், இரத்தினபுரி பகுதியில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 405 பேரும், ஜெயந்தி நகரில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேரும், மருதநகர் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும், மாவடியம்மன் பகுதியில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேரும், ஆனைவிழுந்தான் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரும், ஸ்கந்தபுரம் பகுதியில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், கனகாம்பிகைக் குளம் பகுதியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், சிவநகர் பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேரும், உருத்திரபுரம் கிழக்கு பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கனகபுரம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், பெரியகுளம் பகுதியில் 101 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேரும், பிரமந்தனாறு பகுதியில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 271 பேரும், தர்மபுரம் கிழக்கு பகுதியில் 220 குடும்பங்களைச் சேர்ந்த 628 பேரும், தர்மபுரம் பகுதியில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேரும், புன்னைநீராவி பகுதியில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேரும், குமாரபுரம் பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரும், ஊரியான் பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும், உமையாளபுரம் பகுதியில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும், பரந்தன் பகுதியில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேரும், கண்டாவளை பகுதியில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேரும், முரசுமோட்டை பகுதியில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 77 பேரும், புளியம்பொக்கணை பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு கை அடையாள செயற்றிட்டம் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் இலவச தொழிற்கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவன் அல்லது எதிரானவள்” என்ற தொனிப்பொருளிலான கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டம் ஒன்று 17.12.2023 அன்று கிளிநொச்சி பிரதான பேருந்து தரிப்பிடம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.

 

கிளிநொச்சி உள்ளிட்ட இலங்கையின் வடபகுதியில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதன் நீட்சியாகவே சமூக சீர்கேடுகள் மற்றும் சமூக வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாக செயற்திட்ட ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருந்தனர்.

 

காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்கள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் – பொதுமக்கள் – மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கை அடையாளங்களை போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பதிவு செய்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு செயற்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் “லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கான தொழில்கல்வியையும் அத்துடன் இணைந்த வகையிலான சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற ஓர் நிறுவனமாகும்.

 

அண்மையில் நமது இளைஞர்கள் இடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கை அடையாள கவனயீர்ப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் தொடங்கி மாணவர்கள் அனைவருடைய ஆதரவும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நிகழ்வுக்கான அனுமதி தந்து – இன்றைய தினம் பாதுகாப்பும் வழங்கி நமது சமூக மாற்றத்திற்கான முயற்சிக்கு ஆதரவு வழங்கிய கிளிநொச்சி மாவட்ட பொலிஸாருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.