07

07

புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

“விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.”  என் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

”போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள்.அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. சட்டம் தன் கடமைமையச் செய்யும்.

நீதிமன்றம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படும்.விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.

 

கடந்த மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

யாழ்.கொடிகாமத்தில் இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத்  தாக்குதல் !

இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத்  தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ், கொடிகாமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி வீதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல், இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

 

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு குறித்த இளைஞர் தப்பியோடியுள்ள நிலையில், இளைஞனின் வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த உடைமைகளை அடித்து உடைத்து சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

 

இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் , கொடிகாம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி – பௌத்த பிக்கு கைது !

ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில் 17 வயதுடைய தேரர் ஒருவர் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை வெலிமடை வீதியில் உள்ள மகிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு வருகை தந்த 26 வயதான போலந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே சந்தேக நபரான தேரர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பிரகாரம் சந்தேக நபரான தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொலிஸார் தெரிவித்தனர் வருவதாக ஹப்புத்தளை பொலிசார் தெரிவித்தனர்.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

 

இதேநேரம் இவ் வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காயிருந்தார்.

 

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏனைய பகுதி வாழும் மக்களும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை !

பதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது 70 வயதான பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், அவரது தந்தை பிறப்பதற்கு முன்பே அவரைக் கைவிட்டதாகவும், அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

 

சந்தேக நபர் பல வாரங்களுக்கு முன்னர் பதுளை காத்தாடி மலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் கல்வி வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

வீடு திரும்பியதும், பாதிக்கப்பட்ட பெண் தனது தோழி ஒருத்திக்கு தான் துஷ்பிரயோகம் செய்ததை SMS மூலம் தெரிவித்துள்ளார்,

 

மேலும் தனது பாட்டி பயன்படுத்திய மருந்துகளை அதிகப்படியாக உட்கொண்டுள்ளார்.

 

அதனால் பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய சந்தேகநபரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் – நாடாளுமன்றத்தில் அலி சப்ரி

அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய நாடுகள் சபையில் அதே நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

நரகாசுரன்களைக் கொண்டாடும் பிரித்தானிய பிரதமர் சுனாக்! கொன்சவேடிவ் நாஸ்திக் கட்சியாகவும் நாஸிக் கட்சியாகவும் மாறுகிறது!! அதன் குடிவரவு அமைச்சர் பதவி விலகினார்!!!

டிசம்பர் 6 சில மணி நேரங்களுக்கு முன் பிரித்தானிய ஆளும் கட்சியின் குடிவரவு அமைச்சர் ரொபேட் ஜென்ரிக் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். ‘அகதிகளை ருவான்டாவுக்கு விமானம் ஏற்றுவதே தனது கனவு’ என்று குறிப்பிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் கடந்த சில வாரங்களுக்கு முன் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். 1968இல் கொன்சவேடிவ் கட்சியின்பா உ (Enoch Powell) எனொச் பவலின் மிகப் பிரபல்யமான “Rivers of Blood இரத்த ஆறுகள்” உரைக்குப் பின் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை நவீன பிரித்தானியாவில் கக்கியவர் ஒரு முன்னாள் குடிவரவாளரான சுவலா பிரவர்மன். எனொச் பவலின் இனவாதக் கருத்துக்கள் அலைமோதிய காலத்தில் 1960க்களில் சுவலா பிரவர்மன்னின் பெற்றோர் கென்யா – மொரிஸியஸில் இருந்து புலம்பெயர்ந்தனர். இவருடைய பெற்றோரைப் போன்ற குடிவரவாளர்களால் தான் பிரித்தானியாவுக்கு பொருளாதார நெருக்கடி, பாடசாலைகளில் நெருக்கடி, மருத்துவமனைகளில் நெருக்கடி என எனொச் பவல் தன்னுடைய இனவாத வக்கிரத்தை கக்கினார். இப்போது அக்குடிவரவாளர்களுக்கு பிள்ளையாகப் பிறந்த சுவலா பிரவர்மன் அகதிகளை மட்டும் ஏளனம் செய்யவில்லை வறுமைக் கோட்டில் வாழ்பவர்களையும் வீடற்றவர்களையும் கூட அது அவர்களின் வாழ்க்கைத் தெரிவு என்று நளினம் செய்கின்றார்.

இனவாதமும் ஸ்லாமோபோபியாவும் கொன்சவேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கியின் பலமாகி உள்ளது. அதனால் அந்த வாக்கு வங்கியை இலக்கு வைத்து சுவலா பிரவர்மன் காய்களை நகர்த்துகிறார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய மற்றுமொரு குடிவரவுத் தம்பதிகளின் புத்திரனான ரிசி சுனாக் மண் கவ்வுவார் என்று கணக்குப் பண்ணியுள்ள சுவலா பிரவர்மன் ருவான்டாக் கனவை வைத்துக்கொண்டு ரிசி சுனாக்கை பந்தாடுகின்றார்.

‘ருவான்டா அகதிகளுக்கு பாதுகாப்பான நாடு அல்ல’ என்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் நவம்பர் 16 திகதி வழங்கிய தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது. இருந்தாலும் கொன்சவேடிவ் கட்சியின் இனவாத வாக்கு வங்கியைப் பாதுகாப்பதில் சுவலா பிரவர்மன்னும் ரிசி சுனாக்கும் தங்களில் யார் பெரும் இனவாதி என்பதை நிரூபிப்பதில் போட்டி போடுகின்றனர். ‘ரிசி சுனாக் நீர் வெறும் அலம்பல் பேர்வழி உம்மால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது’ என்ற பாணியில் சுவலா பிரவர்மன் அறிக்கைகள் விடுகின்றார். ‘நான் சொன்னால் சொன்னது தான் ஆணியைப் புடுங்குகிறேன். ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புகிறேன்’ என்று சவால் விட்டுள்ளார் ரிசி சுனாக். அதுமட்டுமல்ல அவசர அவசரமாக புதிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்ளியை ருவாண்டாவுக்கு அனுப்பி புதிய உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டு வந்து ‘ருவான்டா இப்போது அகதிகளுக்கு பாதுகாப்பானதாக மாறிவிட்டது’ என்று சொல்கின்றது கொன்சவேடிவ் காட்சி. நாங்கள் ‘வெள்ளை’ என்று சொன்னால் அது ‘வெள்ளை’ என்று நிரூபிப்போம் என்கிறது கொன்சவேடிவ்கட்சி. ஆனால் உச்சநீதிமன்றமோ அது நிச்சயமாக ‘கறுப்பு’ என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கொன்சவேடிவ்கட்சி சொல்வதை கேட்டு தங்களை ‘கோல்’ அடிக்க விடாவிட்டால் ‘கோல்ட் போஸ்றை’ தாங்கள் மாற்றத் தயார் என இன்று மிரட்டினர். அதாவது டிசம்பர் 6 அவசர ருவாண்டா சட்டமுலம் ஒன்றை அமூலாக்க முயற்சித்தனர். கொன்சவேடிவ் இனவாதப் பிரிவின் இச்சட்டமூலத்தை கொண்டு செல்ல விரும்பாத ரொபேட் ஜென்ரிக் ‘உந்த ஆட்டத்துக்கு நான் தயாரில்லை’ என்று தன்னுடைய அமைச்சுப் பதவியில் இருந்து விலகினார். இன்று கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டமூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் பாதுகாப்பை வெட்டி ஓடும் ஒரு தந்திரோபாயம் என்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் ரொபேட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ‘Conservetive for Tamils – கொன்சவேடிவ் போர் ரமிளஸ்’ தற்போதைய நிலையை இட்டு மௌனமாக இருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் என முன்னாள் கிழக்கு லண்டன் கவுன்சிலர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கொன்சவேடிவ் கட்சி இந்தக் குடிவரவுத் தலைமைகளின் வழிநடத்தலில் மிகத் தீவிர இனவாதக் கட்சியாக மாறிவருகின்றது எனக் குறிப்பிட்டார். இலங்கையில் உள்ள இனவாதக் கட்சிகளிலும் பார்க்க மிகத் தீவிரமான இனவாதத்தை ஆழமான உள்நோக்கத்தோடும் நீண்டகாலத் திட்டமிடலில் இக்கட்சி மேற்கொண்டுவருகின்றது என்ற அச்சம் சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியக் கட்சிகள் அமெரிக்க அரசோடு இணைந்து உலகின் பல பாகங்களிலும் தங்கள் நாடுகளின் நலனுக்காகவும் ஆட்சியாளர்களின் சொந்த நலனுக்காகவும் வாக்கு வங்கிகளைத் தக்க வைப்பதற்காக ஆக்கிரமிப்புகளைச் செய்து அந்நாடுகளைச் சீரழித்தனர். அந்த நாடுகளிலிருந்தே இங்கு பெரும்பாலான அகதிகள் வருகின்றனர். இப்போது அவர்களை ஐரோப்பாவிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு துருக்கி, ருனிசியா, ருவாண்டா போன்ற நாடுகளுக்கு பெரும்தொகைப் பணத்தை வாரி வழங்குகின்றனர். சில அரசுகள் மிக மோசமான மனித உரிமைகளை மீறி அகதிகளாக வருபவர்களை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் ஏன் கொலையும் செய்து அவர்கள் ஐரோப்பாவிற்கு வருவதைத் தடுக்கின்றனர். இவை அனைத்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது இதற்கும் அப்பால் சென்று மற்றுமொரு இன அழிப்பு நடவடிக்கைக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தோளோடு தோள் நிற்கின்றனர். ஆம் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு இந்நாடுகள் முழமையான ஆதரவை வழங்குவதோடு ஆயுதமும் வழங்குகின்றனர். தற்போது இந்த யுத்தத்தை எப்படியும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ குர்ரரஸ் பாதுகாப்பு செயலக நாடுகளின் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதேசமயம் அரபு நாடுகளின் குழுவொன்றும் அமெரிக்கா செல்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் பாலஸ்தீன மக்களின்இன அழிப்பில் தங்களை பங்காளிகளாக வைத்திருக்கப் போகின்றார்களா இல்லையா என்பது தெரியவரும்.

அண்மைய தீபாவளிப் பண்டிகையில் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் தீபம் ஏற்றிய சுனாக் தம்பதிகள் நிஜஉலகில் நரகாசுரர்களைக் கொண்டாடுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் அல்ல. சுனாக் தலைமையிலான கொன்சவேடிவ் கட்சி தற்போது அருவருக்கத் தக்க நாஸ்திக் கட்சியாகவும் நாஸிஸக் கட்சியாகவும் மாறிவருகின்றது. அன்று ஒரு Enoch Powell இன்றோ பலர். “Rivers of Blood இரத்த ஆறுகள்”. நாற்றம் தாங்க முடியவில்லை.