கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.
அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.
இதன்போது புனித மரியால் பேராலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும்,படுகொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்து,கொலையாளிகள் சொகுசுவாழ்க்கை வாழ அனுமதித்தது யார் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வருகைதந்தனர்.
மட்டக்களப்பு,சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.