04

04

வடக்கு, கிழக்கில் பொலிஸார் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – சஜித் பிரேமதாஸ கோரிக்கை !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸார்  அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பொலிஸார் தாம் நினைத்த மாதிரி செயற்படலாம் என்ற மனோநிலையில் இருக்கின்றார்கள். சந்தேகநபர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் காவல்துறையினரின் இந்த அத்துமீறல் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் அங்கு அப்பாவி மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகின்றன.

காவல்துறைமா அதிபர் விவகாரத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்யும் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, பொலிஸாரின் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்பு – தொடரும் உண்ணாவிரத போராட்டம் !

திருகோணமலை, வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து  அப்பகுதி மக்கள்  கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும்  இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும்  இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை  மறித்து  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு  உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அவ்வீதியூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதி மக்களால்  போராட்டம்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டி – யாழ்ப்பாண மாணவன் சாதனை !

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

May be an image of 3 people

குறித்த போட்டி மலேசியாவில் நேற்று (03) நடைபெற்றது. இந்தநிலையில் UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவனே குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிமா  –  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் !

சிறிமா  –  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன்,  சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

“இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு  கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவை போதுமானவை அல்ல.  பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறு சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக தமக்குள்ள பொறுப்புகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணைந்து பணியாற்ற நான் தயாராகவே இருக்கின்றேன்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை !

2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாராளுமன்ற பிரதிநிதிகளின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை.

வருடாந்திர கணக்காய்வு அறிக்கை  மூலம்  இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதில் ரூ. 29 இணைப்புகள் தொடர்பான 5 மில்லியன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கும் மேலாக மீட்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

ஜப்பானில் கட்டுமானத்துறையில் இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் !

ஜப்பானில் கட்டுமானத்துறையில், இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இதற்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்ச்சித் திறன் தேர்வு (01) ஆரம்பமாகவுள்ளது.

M4 பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் . இந்த தேர்வு நான்கு மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கமைவாக , கடந்த வருடம் முதல் நடைமுறையில் உள்ள பராமரிப்பு சேவை தொழில், உணவு பதப்படுத்துதல் . விவசாயம் ஆகிய நான்கு துறைகளுக்கான தேர்ச்சித் திறன் தேர்வு தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பணியாற்றவிருக்கும் தொழிலாளர்களுக்கான குறிப்பிட்ட தேர்ச்சித் திறன் பரீட்சையை இன்று முதல் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும்,  ஊடகவியலாளர் மகாநாடு (01) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர் (H. E. Mr. MIZUKOSHI Hideaki), JICA ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கைக்கான பிரிதி நிதி Mr. YAMADA Tetsuya, (Chief Representative of JICA Sri Lanka Office) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு.ஏ.ஏ.ஹில்மி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்

கட்டுமானத்துறைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக இன்று ஆரம்பமாகும் நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் தோற்ற முடியும். தெரிவுசெய்யப்படுவோர் விசேட ஊழியர்களாக SSW பிரிவின் கீழ் ஜப்பானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஜப்பானில் கட்டுமானத்துறையில் தற்போது பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள்  இன்னும் பத்துவருடங்களில் ஓய்வுபெறவுள்ளனர். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. அந்த நாட்டின் பல துறை தொழில்வாய்ப்புகளை இலக்காக்கொண்டு தற்போது பாடசாலை கல்வியில் ஜப்பான் மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதன் அடிப்படையில் மாணவர்களை பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக JICA அமைப்பின் உதவியுடன் ஆசிரியர்களுக்கான ஜப்பான் மொழித் தேர்வுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜப்பானில் தற்போதுள்ள தொழில் வாய்ப்புக்களை கவனத்தில் கொள்ளும்போது,  ஜப்பான் நமக்கு இதில் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், அதிக சம்பளம் பெறும் திறன் கொண்ட SSW பிரிவின் கீழ் பராமரிப்பு சேவை , விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் இதுவரை எமக்கு இருந்தன. இதன் காரணமாக, அந்த துறைகளுக்கு மேலதிகமாக , கட்டுமானம், சுத்தம் செய்தல் மற்றும் ஆட்டோமொபைல் Automobile துறைகளிலும் எமக்கு புதிதாக தொழில் வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில் , பயிற்சியாளர்களைக்கொண்ட குழுவை நாம் அனுப்புகின்றோம். இதன் மூலம் அங்கு SSW பிரிவின் கீழ் அவர்கள் பணிபுரியும் துறையில் ஜப்பானிய தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் பெறும் வாய்ப்பு உண்டு.

இதேவேளை , ஜப்பானிய மொழி பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவது போன்று, வெளி நிறுவனத்தில் இருந்து ஜப்பானிய மொழியைக் கற்று வெளிநாடுகளுக்குச் செல்லும் பட்சத்தில் பணத்தை திருப்பிச் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜப்பானிய மொழி கற்றலை மேலும் வலுப்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்குகிறது.

வரலாற்றில் இருந்தே இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நெருக்கமான நல்லுறவு நிலவிவருவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஜப்பான் எமக்கு பக்கபலமாக இருந்துவருவதாக குறிப்பிட்ட அமைச்சர், நமது நாடு வங்குரோத்து நிலைக்கு உள்ளான போது ஜப்பான் முன்வந்து உதவியது. பல துறைகளில் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் உதவுவதற்கு முன்வந்துள்ள ஜப்பான் சர்வதேச நாணயத்தின் நாட்டுக்கான கடன் உதவிக்கும் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. இதற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

“SSW திட்டத்தின் கீழ் ஜப்பானில் ஒழுக்கமான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணிச் சூழல்” தொடர்பாக JICA ஒத்துழைப்பு அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி (YAMADA Tetsuya, Chief Representative of JICA Sri Lanka Office) இதன்போது விளக்கமளித்தார்.

சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் இருந்த சிறுவன் தாக்கி கொல்லப்பட்ட விவகாரம் – பிரேதப் பெட்டியுடன் மக்கள் போராட்டம் !

கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் பிரேதப்பெட்டியுடன் ஊர்வலமாக வந்த மக்கள் கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரேதப் பெட்டியை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ”பொலிஸார் முறையான பாதுகாப்பு வழங்காதமையே  சிறுவன் உயிரிழந்தமைக்குக்  காரணம் ” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.

அரச வங்கியில் பெற்ற 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தாத வர்த்தகர்கள் !

இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்,

“இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெரிய வியாபாரிகள் வரை கடன் கொடுத்துள்ளன. கடனை செலுத்துவது கடன் வாங்கியவரின் பொறுப்பு.

ஆனால் சிறப்பாக வர்த்தகம் செய்து அரசியல் பாதுகாப்பு பெற்று 10 பேர் தாம் ஈட்டிய பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்து இந்த இரண்டு வங்கிகளையும் புறக்கணித்து வருகின்றனர். இந்த வங்கிகளில் இலங்கை வங்கிக்கு மட்டும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 50 பில்லியன் என்பதோடு, மக்கள் வங்கிக்கு 30 பில்லியன் கடன் செலுத்த வேண்டும்.  வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கொண்டு வரும் பெருமக்களே இந்த  பணத்தை வசூலியுங்கள். இது மக்களின் பணம். முடிந்தால் அந்த 10 பேரின் பெயர்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துங்கள். இல்லையென்றால் இந்த நாட்டின், பொது நலனுக்காக நாம் அதனை வெளிப்படுத்துவோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்றார்.

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் – அனுரகுமார திசநாயக்க

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான பொருளாதாரத்திற்கு புத்துயுர்கொடுப்பதற்கான துணிச்சல் எங்களுக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு 22 இலட்சம் ரூபா !

ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு இருபத்தி இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் உட்பட இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும்.

பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரம் ரூபாவும், விஞ்ஞான விவகார ஆலோசகருக்கு ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது. இதில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெண் உறுப்பினரும் அடங்குவர். இந்த மூவருக்கும் எம்.பி.யின் ஓய்வூதியம் உண்டு.

ஜனாதிபதியின் ஆலோசகர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்று மற்றும் அவர்களில் எட்டு பேர் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் இல்லாமல் சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது