மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி ரணில்

மஹபொல ஊடாக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் திறந்த பொருளாதாரத்தின் நன்மைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களின் பின்னர் மஹபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியை மீள ஆரம்பிப்பதன் மூலம் அதிகமானவர்களுக்கு உயர்கல்விக்கான கதவுகள் திறக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை ஆரம்பித்து வைத்து இலங்கையின் கல்விக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீதாவக பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி மையமான Post Graduate for Research நிறுவனத்திற்கு அவரது பெயரிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மஹபொல 2023 கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று (14) மாலை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் மிகப்பெரிய கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சியான ‘மஹபொல 2023’ கண்காட்சி கடந்த 13 ஆம் திகதி ஜா-எல நகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நாட்டின் வறிய பெற்றோரின் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றும் நோக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியினால் ஆரம்பிக்கப்பட்ட மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதிக்கு ஆதரவாக மஹபொல வர்த்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

10 வருடங்களின் பின்னர் இந்த வருடம் 226 ஆவது மஹபொல கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இக்கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இக்கண்காட்சியானது 350இற்கும் மேற்பட்ட பல்துறைசார் கண்காட்சிக் கூடங்களைக் கொண்டுள்ளது. இது புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளுக்கான சந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

லலித் அத்துலமுதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்திற்கான ஒன்லைன் நன்கொடை (online donation facility) வசதிக்காக www.eservices.mahapola.lk என்ற இணையத்தளத்தையும் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *