இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
பலாலி விமான நிலையத்தை நேற்றுக் காலை சென்றடைந்த இராணுவத் தளபதியை யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அங்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ். கட்டளைத் தளபதி தலைமையிலான உயர் அதிகாரிகள், இராணுவத்தின் 51, 52 மற்றும் 55வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அங்குள்ள தற்போதைய நிலைமைகளை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். யாழ். குடாநாட்டை நோக்கி நாளுக்கு நாள் வருகை தந்துகொண்டிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான போதிய வசதிகள் செய்து கொடுக்க படையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவ உயர் அதிகாரிகள் தளபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இதுவரை 2000 சிவிலியன்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படையினரால் விரட்டியடிக்கப்பட்ட புலிகள் யாழ். குடாநாட்டுக்குள் எக்காரணம் கொண்டும் ஊடுருவி அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்காத வண்ணம் தேவையான பாதுகாப்பையும் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி இதன்போது அதிகாரிகளை பணித்துள்ளார்.