ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.
நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.
இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’ இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.