இனிமேல் நடைபெறும் தேர்தல்களின் போது பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.
நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது அமைச்சர் டி. எம். ஜயரத்னவுக்கு பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அவர் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கலான எட்டு வகையான ஆவணங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே இந்த எட்டு வகையான ஆவணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதில் எதுவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.