மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தற்போது வவுனியா மாவட்டத்துக்கு வருகை தரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
செட்டிகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் கிராமத்துக்குச் சென்று அங்கு தற்காலிகமாக வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். அதேவேளை, அக்கிராமத்தை அண்டிய பகுதியில் மற்றும் இரு கிராமங்களை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் இடம் பெறுவதால் அதனது முன்னேற்றம் குறித்தும் அப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.
இதேவேளை, வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளை உடன் பெற்றுக் கொடுக்குமாறும் போதுமானளவு வைத்தியர்களை ஈடுபடுத்துமாறும் அமைச்சர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.
அமைச்சருடன் யூ.என்.எச்.சி.ஆர். இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அமீன் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.