தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்டம் சார்ந்த இலக்கியங்களை நிராகரிக்கின்றது என்பதனை விவாதத்துடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வு ஒன்றை ‘திரள்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஓகஸ்ட் 29 இலண்டன் நேரம் மாலை 2:30ற்கு ஆரம்பிக்கும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்வு விபரத்தில் உள்ளது.
‘நவீன தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கியச் சூழல் என்பது பெரும்பாலும் தமிழக இலக்கியச் சூழலாக குறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டுள்ள ஈழச் சமூகங்களின் இலக்கியங்களை தமிழக இலக்கியச் சூழல் மேலும் ஓரம்கட்டுகின்றதா என்ற கேள்வி உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் ஈழத்து – தமிழக எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அண்மைக்காலத்தில் இணைந்து மேற்கொள்கின்ற கலந்துரையாடலும் விவாதமுமாக இது அமைய உள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து இலக்கிய ஆய்வாளர் ரியாஸ் குரானா தமிழகத்தில் இருந்து பேராசிரியர் இலக்கிய விமர்சகர் அபிலாஷ் சந்திரன் இலக்கிய ஆய்வாளர் முபீன் சந்திகா இவர்களுடன் லண்டனில் இருந்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வை இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளருமான வாசன் வழிநடத்துகின்றார். இவர்களது ஒரு மணிநேர முன்னுரைகளைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வோர் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைப் பரிமாறவும் ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்த நிகழ்வும் இரு மணி நேரத்திற்குள் முற்றுப்பெறும். இந்த இணையவெளி கலந்துரையாடலில் இலங்கை, இந்தியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கேள்விகேட்டு கருத்துக்களை பரிமாற விரும்பாதவர்கள் சமகாலத்தில் நிகழ்வை முகநூலில் பார்க்கின்ற வகையில் நிகழ்வு ஒளிபரப்பாக்கப்படும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘திரள் – உரையாடல் வெளி’ என்ற இவ்வமைப்பு அண்மையில் பிரித்தானியாவில் உள்ள முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு தொடர்ந்துவரும் காலங்களில் குறைந்தபட்சம் மாதாந்தம் ஒரு நிகழ்வையேனும் நடத்த உள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தனர். ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ள ஈழத்து இலக்கியச் சூழலை புலம்பெயர்ந்த நாட்டு எல்லைகலைக் கடந்து ஒருங்கிணைத்து புதியதொரு உத்வேகத்தோடு பயணிக்க உள்ளதாகவும் திரள் குழுமம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தது. பின் கோவிட்-19 காலம் உருவாக்கி உள்ள தொழில்நுட்ப வெளியானது இலக்கிய ஆர்வலர்களை எல்லைகளைக் கடந்தும் சமகாலத்தில் கலந்துரையாடல்களை தொழில்நுட்ப வெளியில் மேற்கொள்வதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளதாகத் தெரிவித்த திரள் குழுமத்தினர் தடைகள் பின்னடைவுகள் கூட புதிய வெளிகளை உருவாக்கி விடுகின்றன எனத் தெரிவித்தனர். முற்போக்கான ஆரோக்கியமான ஒரு இலக்கியச் சூழலை உருவாக்க முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து பயணிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர்.