அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!
விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!
மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!
இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.
இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.
தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.
ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.
அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.
இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.